தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கன்னூன் தேவதை (1)

கன்னூன் தேவதை (1)

கன்னூன் தேவதை (1)


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று உங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் அல்லவா? ஒரே ஒரு சிறிய வைக்கோல் துண்டை கையில் வைத்துக் கொண்டு அலைந்தவன், பிற்காலத்தில் ஜப்பானிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆன கதைதான் இது.

இந்த டோரா மிக மிக ஏழை. ஏழையாக இருந்தாலும் தெய்வத்திடம் அபார நம்பிக்கை. என்றாவது எனக்கு நல்ல காலம் பிறக்கும் என்ற நப்பாசையில் காலத்தை ஓட்டி வந்தான். பாவம். அந்த நல்ல காலத்திற்கு இவனிடம் என்ன கோபமோ தெரியவில்லை. இவன் இருக்கும் பக்கம் கூட தப்பித்தவறி பார்க்கவில்லை.

எதைத் தொட்டாலும் நஷ்டம். எங்கு திரும்பினாலும் துன்பம் என்று அடுத்தடுத்து அவளை துரதிருஷ்டம் வாட்டி வதைக்க, கடைசியாக அந்த கன்னூன் கோவிலுக்குச் சென்றான்.

''தேவி! நீ மிகவும் கருணை உள்ளம் படைத்தவன் என்று எனக்குத் தெரியும். என் மேல் உன் அருட்பார்வை கொஞ்சம் விழக்கூடாதா? என்னை மட்டும் ஏன் இப்படி துன்புறுத்துகிறாய்? உன்னால் எனக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் பரவாயில்லை... என்னை இப்படியே இங்கேயே இறக்கி விடு...'' என்று வெகுநேரம் அழுது புலம்பிவிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

அதீத களைப்பும் மயக்கமும் மேலிட அயர்ந்து கிடந்தவன் நட்ட நடு இரவில் யாரோ எழுப்புவதைப் போல் உணர்ந்தவன் சட்டென்று எழுந்து உட்கார, ஓ! அவன் முன் நின்றாள் கருணையின் மொத்த உருவான 'கன்னூன்' தேவதை.

அரைகுறை தூக்கத்தில் விழித்தவன் அவளைப் பார்த்து, ''நீ யார்... நீ யார்?'' என்றான் நாக்கு குழற.

''பயப்படாதே... நான் இரக்கத்தின் தேவதை கன்னூன்!'' என்றாள்.

''இப்போது அதிர்ஷ்ட தேவதை உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். நான் சொல்வதை கவனமாகக் கேள். நான் சொல்வதை அப்படியே நீ கடைப்பிடிக்க வேண்டும். முதலில் இக்கோவிலிலிருந்து வெளியேறிய உடன் தொபுக்கடீரென்று கீழே விழப் போகிறாய்?''

''தேவதையே! ஹும்... இதிலிருந்து என் அதிர்ஷ்டம் தெரியவில்லையா... கீழே விழுந்து முகம் கை காலில் எல்லாம் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கப் போகிறேன். இதுதான் நீ சொல்லும் அந்த அதிர்ஷ்ட தேவதை என்னை நோக்கி வருவதற்கு அடையாளமா?''

''சேச்சே... அப்படியெல்லாம் ஒன்றும் நேராது. உன் உடம்பில் ஒரு சிறு காயம் கூட ஏற்படாது. பயப்படாதே! கீழே விழுந்தவுடன் உன் வலது கரத்தில் எது அகப்படுகிறதோ அதை அப்படியே இறுக்கமாகப் பற்றிக் கொண்டு எழுந்திரு. அதை விட்டுவிடாதே. தூக்கி எறிந்து விடாதே. அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி நடந்து செல். புரிகிறதா... இப்போது உடனே புறப்படு,'' என்று சொல்லிவிட்டு மறைந்தது கன்னூன் தேவதை.

மெதுவாக எழுந்தவன் தான் கண்டது கனவா அல்லது நிஜமா என்பது புரியாமல் கோவிலை விட்டு வெளியேறினான். என்ன ஒரு ஆச்சர்யம்? கோவிலை விட்டு வெளியே காலை வைத்ததும், கால் இடறி தொபுக்கடீரென்று குப்புற விழுந்தான்.

மெல்ல முனகிக் கொண்டே எழுந்தவனின் கையை பற்றி இருந்தது ஒரு முழ நீள வைக்கோல் துண்டு. 'ஹும்... என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது? இந்த வைக்கோல் துண்டிற்கு பதிலாக ஒரு பவுனோ அல்லது ஒரு கேக் துண்டோ இருந்திருந்தால் மனதிற்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்? எப்படியோ தலைகுப்புற விழுந்தும் உடலில் ஒரு சின்ன காயம் கூட இன்றி தப்பித்தேனே. அதுவே பெரிய காரியம் அல்லவா?' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

''சரி. கன்னூன் தேவிதான் சொன்னாளே... கையில் எது கிடைத்தாலும் அதை தூக்கி எறிந்துவிடாதே என்று. அப்படியானால் இந்த ஒரு முழ நீளத்துண்டு வைக்கோலையும் நான் எறியக்கூடாதுதான். இதென்ன பெரிய சுமையா என்ன,'' என்று சொல்லிக் கொண்டே, அந்த வைக்கோல் துண்டுடன் மேற்கு நோக்கி தன் பயணத்தைத் துவக்கினான்.

சிறிது தூரம் சென்றிருப்பான். ஒரு பெரிய பொன்வண்டு இவன் கன்னத்தில் வந்து உட்கார்ந்து, 'ஹூ... ம்...' என்று ரீங்கரிக்க, சட்டென்று அதைப் பிடித்து அந்த வைக்கோல் துண்டில் சேர்த்து கட்டினான். அதனை விளையாட்டாக சுழற்றிக் கொண்டே செல்ல, அந்த வண்டும் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது.

அப்போது கையில் ஒரு குழந்தையுடன் எதிரே வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அவள் கையிலிருந்த குழந்தை 'வீல் வீல்' என்று அலற, அந்த ஏரியாவே கிடுகிடுத்தது எனலாம். அப்பெண்மணி என்ன முயன்றும் அக்குழந்தை தன் அழுகையை நிறுத்துவதாகக் காணோம். என்னவெல்லாமோ கெஞ்சிப் பார்த்தும், அந்தக் குட்டி பிசாசு எதற்கும் அடங்குவதாக இல்லை.

''ஏம்மா! குழந்தை இப்படி அழுகிறது?'' என்றான் மிகவும் அக்கறையுடன். ''தெரியவில்லை. ஒரு மணி நேரமாக இப்படித்தான் கதறுகிறது. அப்படியே மூச்சு நின்று விட்டால் என்ன செய்வதென்று பயமாக இருக்கிறது,'' என்றாள்.

''சுச்சு சுச்சு அழாதேடா ராஜா...'' என்று சொல்லிக் கொண்டே, தன் கையிலிருந்த அந்த பொன்வண்டு கட்டிய வைக்கோலை சுழற்ற, அந்தக் குட்டி பிசாசு பட்டென்று தன் அழுகையை நிறுத்திவிட்டு, ''இந்த பூச்சிதான் எனக்கு வேண்டும்,'' என்று மழலையில் உளறியது.

''இந்தாடா ராஜா'' என்று சொல்லி, அந்த வைக்கோல் கட்டிய வண்டை அதனிடம் கொடுக்க, அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கைகொட்டி சிரித்துக் கொண்டே வைக்கோலை அப்படியும் இப்படியுமாகச் சுழற்றி சிரித்தது. அப்பாடி அந்த பெண்மணிக்கு போன உயிர் திரும்பி வந்தது.

''சகோதரா! நீங்கள் செய்திருக்கும் இந்த மாபெரும் உதவிக்கு என்ன கைமாறு செய்வதென்றே தெரியவில்லை. உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றுமில்லை. தயை கூர்ந்து இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லி தன் கை பையைத் திறந்து அதிலிருந்து மூன்று ஆரஞ்சு பழங்களை அவனிடம் நீட்டினாள். அவனும் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு விடை பெற்றான்.

மேற்கு நோக்கிச் சென்றவன், எங்கேனும் மர நிழலில் ஒதுங்கி உட்கார்ந்து இப்பழங்களைத் தின்று பசி ஆற்றிக்கொள்ளலாம் என்று முன்னேறிக் கொண்டிருக்கையில், அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரிய ரிக்ஷா. அதன் அருகில் கவலையின் மொத்த உருவாக ஒரு முதிய சேவகன் உலாவிக் கொண்டிருந்தான். ரிக்ஷாவில் இருந்த பெண்மணி வயிற்றைப் பிடித்துக் கொண்டு, ''ஐய்யோ! வலி உயிர் போகிறதே... குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீராவது கொண்டு வாயேன்,'' என்று அந்த சேவகனிடம் கதறிக் கொண்டிருந்தாள்.

இதைக் கண்ட நம் கதாநாயகன், சேவகன் அருகில் போய் என்னவென்று விசாரிக்க, ''ஐயா! இப்பெண் என் எஜமானரின் ஒரே மகள். இவள் தன் சிநேகிதியை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து காலையில் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து விட்டாள். இதோ திடீரென இவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுவிட்டது. குடிப்பதற்கு தண்ணீராவது கொடேன் என்று கதறுகிறாள். இந்த அத்வானத்தில் தண்ணீருக்கு நான் எங்கே போவேன். வேறு எங்கேனும் போய் விசாரிக்கலாம என்றால் இந்த சின்னப் பெண்ணை இங்கே தனியே விட்டுவிட்டு நான் எங்கே செல்வேன்,'' என்றான் குரல் கம்மி.

''கவலையை விடு!'' என்று சொல்லி தன் பையிலிருந்து அந்த மூன்று ஆரஞ்சுப் பழங்களையும் அப்பெண்ணிடம் கொடுத்து, ''இதை சாப்பிடுங்கள்!'' என்றான் மிகப் பரிவோடு. அவசர அவசரமாக அதை வாங்கித் தின்றவளுக்கு உடனே தாகமும் அடங்கிவிட்டது; பசியும் மறைந்து போய் வயிற்று வலியும் காணாமல் போய்விட்டது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தவள், ''நீங்கள் மட்டும் சமயத்திற்கு உதவவில்லையெனில், என் கதி என்னவாகி இருக்கும். என் உயிரை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி!'' என்று சொல்லி, ரிக்ஷாவில் வைத்திருந்த மிக உயர்ரக பட்டு துணி மூட்டை மூன்றை எடுத்து, ''மாட்டேன் என்று சொல்லாமல் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று சொல்லி அவனிடம் கொடுத்தாள். அதனை ஏற்றுக் கொண்டவன் தன் பயணத்தைத் துவக்கினான்.

(— தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us