PUBLISHED ON : மார் 25, 2011

இதுவரை: பூங்குழலி சிறந்த அறிவாளியான பெண். அவள் படிப்பதை சின்னம்மா விரும்பவில்லை. எப்படியாவது அவளது படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினாள். இனி-
பாடசாலையில், குரு முழுதாக சொல்லாமல் சொல்லிய கதையை சொல்லி, அதன் நல்ல முடிவை, தான் ஒருவளே ஊகித்து சொன்னதை, தன் அப்பா பொன்னனிடம் கூறினாள் பூங்குழலி. குரு, தன்னை மெச்சி பாராட்டியதையும் கூறினாள்.
அதைக் கேட்டு பரவசமடைந்தான் பொன்னன்.
''பூங்குழலி... நீ அறிவுமிக்கவள். கருவிலேயே திருஉடையவள். நீ மேன்மேலும் படித்து, அறிவு விசாலம் பெற்று, புத்திசாலி பெண்மணியாக பிற்காலத்தில் திகழ வேண்டும். அதற்காக நீ மேன்மேலும் கல்வி கற்கச் செல்ல வேண்டும்!'' என்று கூறி, தன் மகளை கட்டியணைத்து உச்சி முகர்ந்தான் பொன்னன்.
தந்தையும், மகளும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டாள் கோலம்மா.
அவளுக்கு வந்ததே கோபம்!
வேகமாக ஓடிவந்து, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்து, எரியும் அடுப்பில் போட்டாள். எழுத்தாணியின் கூர்மைப் பகுதியை, தரையில் ஓங்கி, ஓங்கி குத்தி, அதை வளைத்து உடைத்தெறிந்தாள்.
''இன்று முதல் நீ பாடசாலைக்கு செல்லக்கூடாது. என்னுடன் கழனிக்கோ அல்லது நான் வேலை செய்யும் வீடுகளுக்கோ வா... வந்து வேலை செய்தால் நாலு காசு கிடைக்கும்!'' என்று பூங்குழலியை பார்த்து ஆவேசமாக கத்தினாள் கோலம்மா.
அதோடு, தன்னுடன் தான் வேலை பார்க்கும் இடங்களுக்கும் பூங்குழலியை அழைத்துச் சென்றாள். சிறுசிறு வேலைகளில் அவளை ஈடுபடுத்தினாள்.
அதிலெல்லாம் மனம் செல்லவில்லை பூங்குழலிக்கு. அவள் நினைவெல்லாம், பாடசாலையிலும், கல்வி கற்பதிலுமே இருந்தது. படிக்க விரும்புகிற தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது கடவுளே என்று அழுது புலம்பினாள்.
மகள் அழுவதை பார்த்த பொன்னனுக்கு கவலையாக இருந்தது. பூங்குழலி தொடர்ந்து கல்வி கற்பதையே அவன் விரும்பினான். ஜோதிடர் கூறியது போல், பூங்குழலிக்கு நாடாளுகிற ராஜயோகம் அடித்தாலும், அரசை நிர்வகிக்க, நாட்டை காப்பாற்ற, மக்களுக்கு நல்லது செய்ய அவளுக்கு கல்வியறிவு வேண்டும்.
கோலம்மாவிடம், 'குழந்தை, பாடசாலை சென்று கல்வி கற்கட்டும்' என்று வாதாடினான் பொன்னன். அவளோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
'ஜோதிடம் பலிப்பது என்பது எல்லாருக்கும் நிகழ்வதல்ல. யாரோ ஒருவருக்குத் தான் நிகழும். அதை நம்பிக் கொண்டிருப்பது, இப்போது பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால், பூங்குழலி பாடசாலைக்கு செல்லவே கூடாது!' என்று அடம் பிடித்தாள் கோலம்மா.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் பொன்னன். இரவு, பகலாக யோசித்தான். பாடசாலைக்கு செல்வது தடைப்பட்டுவிட்ட சோகத்திலும், களை பிடுங்கி வரும் களைப்பிலும், நாளுக்கு நாள் பூங்குழலி இளைத்து துரும்பாகி வருவதையும் பார்த்து வந்த பொன்னன், ஒரு முடிவுக்கு வந்தான்.
பூங்குழலியை அழைத்துச் கொண்டு, தன் நாட்டின் தலைநகரான மின்னல்புரிக்கு சென்று, ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு, அங்குள்ள நல்ல பாடசாலையில் பூங்குழலியை சேர்த்து படிக்க வைப்பது என்பது தான் அந்த முடிவு. அதை பூங்குழலியிடம் கூறினான் பொன்னன்.
மீண்டும் தன் கல்விப் பயணம் தொடங்கப் போகிறதென்ற மகிழ்ச்சியில், புறப்படத் தயாரானாள் பூங்குழலி.
நாட்டின் தலைநகரம் நோக்கி செல்லலாம் என்று தனக்கு ஒரு யோசனை தோன்றியதே, ஜோதிடர் கூறியுள்ளதுபோல, பூங்குழலிக்கு ராஜயோகம் வரப் போகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்று நம்பினான் பொன்னன்.
தலைநகர் மின்னல்புரியில் தானே அரசர் அருள்வர்மன் இருக்கிறார்! அரண்மனையிலேயே ஏதாவது ஒரு வேலை கிடைக்காமலா போகும்? பகலில், வரப்பில் வேலை செய்து வந்திருந்ததால், களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தாள் கோலம்மா.
இதுதான் சமயம் என்று, பூங்குழலியை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே கிளம்பினான் பொன்னன்.
இரவு முழுவதும் நடந்து, தங்கள் ஊரைவிட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் சென்றுவிட்டனர் இருவரும். வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. இருவரும் அதில் குளித்து எழுந்தனர். கோவிலை ஒட்டியிருந்த ஒரு அன்ன சத்திரத்தில், பகலுணவு உட்கொண்டனர். பிறகு நடை பயணத்தை தொடர்ந்தனர்.
''அப்பா! நகரத்தில் நாம் பிழைக்க, உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமே!'' என்றாள் பூங்குழலி.
''கிடைக்கும்மா! கடவுள் நம்மை கைவிட்டுவிட மாட்டார்... நம் கூடவே வருவார் அவர்!'' என்றான் பொன்னன்.
''அப்பா... ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு உயிர் வாழ்ந்து வந்தான். ஈட்டும் பொருள், கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கூட போதவில்லை. அதனால் நம்மைப் போலவே, வெளியூர் எங்காவது செல்லாமென்று முடிவு செய்தான். 'கடவுளே! உன்னை நம்பிக் கொண்டு தான் போகிறேன். நீ எப்போதும் என் கூடவே வர வேண்டும்' என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.
''கடவுளும், 'அப்படியே வருகிறேன்... உன் இரு காலடியருகே, என் இரு கால் அடிகளும் வரும்' என்றார். அவன் புறப்பட்டான்.
''அவன் காலடியின் அருகிலேயே, இன்னொரு இரு காலடிகளும் வந்தன.
''ஓரிரு நாளில் அவன் கைப்பொருள் தீர்ந்து, உண்ண உணவின்றிப் போனான். இன்னும் சிறிது தூரம் சென்றுவிட்டால், ஒரு நகரம் வரும். அங்கு எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாமென்றிருந்தான் அவன். அதற்குள், உண்ண உணவின்றி, களைத்தும், சோர்ந்தும் போனான்.
''தன்னுடன் வரும் காலடிகளை பார்த்தான்; அவை காணப்படவில்லை. தெய்வம், தன்னை கைவிட்டதென்று எண்ணி, மிகவும் சிரமப்பட்டு நடக்க ஆரம்பித்தான். நகரை அடைந்து விட்டான். அங்குள்ள ஒரு உணவு அங்காடியில், அவனுக்கு ஒரு வேலை கிடைத்து, மூன்று வேளை சோறும் கிடைத்தது. 'கடவுளே! என் கஷ்ட காலத்தில் என்னுடன் இருப்பேன், என்னுடனேயே வருவேன் என்றாயே... நீ வருவதை, மேலும் ஒரு ஜோடி காலடிகள் உணர்த்தும் என்றாயே... அந்த ஜோடி காலடிகள் பாதியிலேயே நின்று விட்டனவே... நீ என் கூடவே வர வில்லையே!' என்று, கடவுளை மனதில் நினைத்து கூறினான் அவன்.
'வந்தேனே!' என்றார் கடவுள். 'இல்லையே... ஒரு ஜோடி காலடிகள் வரவே இல்லையே!' என்றான் அவன் மீண்டும்.
'நீ உண்ண உணவின்றி சோர்ந்து, இனி ஓரடி கூட நடக்க முடியாதென்ற நிலையில், கடைசி வரை ஒரு ஜோடி காலடிகள் வந்தனவே, அவை உன்னுடையதல்ல... உனக்கு ஒரு வேலை கிடைக்கவும், மூன்று வேளை சோறு கிடைக்க, உன்னை சுமந்துவந்த என் காலடிகள் தான் அவை!' என்றாராம் கடவுள்!'' என்று கூறினாள் பூங்குழலி.
வானை நோக்கி தலையை உயர்த்தி கைகளை தலை மேல் குவித்து, 'கடவுளே! நாங்கள் ஏழைகள், திக்கற்றவர்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை... நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் கடவுளே!'' என்று, கடவுளை மனமுருக வேண்டினான் பொன்னன்.
அப்போது, வேல் கம்புகளில் கட்டிய மணிகள் இன்னிசை ஒலிக்க ஒரு பல்லக்கு, அவர்கள் அருகில் வந்து நின்றது.
(- தொடரும்)
