தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிட்டி பார்க்கப் போறேன்!

சிட்டி பார்க்கப் போறேன்!

சிட்டி பார்க்கப் போறேன்!


PUBLISHED ON : மார் 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினுவுக்கு பள்ளியில் ஆண்டு விடுமுறை விட்டு விட்டனர். ஒரு மாத விடுமுறையில் என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை. உறவுக்காரர்கள் எல்லாரும் உள்ளூரிலேயேதான் இருக்கின்றனர். வினுவுக்கு பட்டணத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ஆசை. 'ஒருமாதம் பட்டணத்திலேயே தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். நம் ஊர் டூரிங் தியேட்டருக்கு ஹைதர் காலத்துப் படங்கள் தானே வருகின்றன. நல்ல புதிய படம் ஒன்று பார்த்து விட வேண்டும். நடிகர்கள் வீடு எல்லாம் சென்னையில் தானே இருக்கிறது. முடிந்தால் யாரையாவது நேரில் பார்க்கவேண்டும்' என்று சென்னையில் பார்க்க வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அவ்வூர்காரர் ஒருவர் பட்டணத்திலிருந்து திரும்பவும் கிராமத்திற்கே வந்து விவசாயம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்தால் ஏதாவது விவரம் தெரியலாம் என்று நினைத்து அவரைச் சந்தித்தான்.

''அண்ணே! லீவில் பட்டணம் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன்?''

''உன்னிடம் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது?''

''பணமா? என்னிடம் பத்து பைசா கிடையாது.''

''கையில் பத்து பைசா இல்லாமல் பட்டணம் பார்க்க வேண்டும், உனக்கு பேராசைதான். நீ ஆசைப்பட்டதில் தவறில்லை, அங்கு உனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. தங்கவோ, சாப்பாட்டிற்கோ வழியில்லை. அப்படியே இருந்தாலும் தங்க வைத்துக் கொள்ள மாட்டார்கள். காபி குடியுங்கள் என்று ஒரு டம்ளர் காபியுடன் விருந்து உபசாரம் முடிந்துவிடும். ஆனால், அதற்கும் ஒரு வழியிருக்கிறது. நீ ஏதாவது வேலை செய்வாயா? என்ன வேலை தெரியும்?''

''எந்த வேலையும் தெரியாது. ஆனால், கண்ணால் பார்த்தால் எந்த வேலையையும் கற்றுக் கொண்டு செய்ய முடியும்.''

''அப்படியானால் சரி. பிழைத்துக் கொள்வாய். சென்னைக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரியில் பத்து, இருபது ரூபாய் கொடுத்தால் போதும். உன்னை தாம்பரத்தில் இறக்கி விட்டுவிடுவர். அங்கிருந்து சென்னைக்கு மின்சார ரயில் இருக்கிறது. நமது ரயிலாயிற்றே எங்கு வேண்டுமானாலும் போய் இறங்கிக் கொள்ளலாம்.

சென்னைக்கு வந்தவர்களை தங்க இடம் கொடுத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு வாழவைக்கும் இடம் ஓட்டல்கள்தான். ஓட்டல்களிலும் உடுப்பி ஓட்டல், மிலிட்ரி ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்று பல வகைகள். நமக்கு உடுப்பி ஓட்டல்தான் லாயக்கு. மிலிட்ரி ஒட்டலுக்கு போனால் கோழிக்கு இறகு உரிக்க வேண்டும்; மீன் வெட்டவேண்டும்.

''உடுப்பி ஓட்டலில் கிளீனர் என்றால் தட்டு, டபரா டம்ளர் கழுவி, மேஜை நாற்காலி துடைத்தால் போதும். நேரப்படிதான் வேலை. வேலை நேரம் முடிந்தால் ஓய்வுதான். அப்போது படுத்து தூங்கலாம் அல்லது ஊர் சுற்றியும் பார்க்கலாம். சாப்பாட்டுக் கவலையே கிடையாது. விரும்பியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். காபி, தண்ணீர் பட்டபாடுதான். ஆனால், சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு உண்மையாக உழைக்க வேண்டும்.

வாரக் கடைசியில் கூலி கொடுத்துவிடுவர். அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை. நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சுற்றிவரலாம்; படம் பார்க்கலாம்; பீச்சுக்குப் போகலாம்; பக்தி இருந்தால் கோவிலுக்குப் போகலாம். ஸ்டூடியோ வாசலிலும் போய் நிற்கலாம். உள்ளே போகும், வெளியே வரும் நடிகர்களைப் பார்க்கலாம்...'' என்று ஓட்டல் வேலையின் மகத்துவத்தை அண்ணாச்சி எடுத்துச் சொன்னார்.

அப்பாவிடம் அனுமதி பெற்றான். 'தைரியமாக போய் வருகிறேன் என்பவனை ஏன் தடுக்க வேண்டும்' என்பது அவர் எண்ணம். ஒரு துணிப்பையில் மாற்று உடையான இன்னொரு டிராயர், சட்டையை எடுத்து வைத்துக் கொண்டான். பேனா, டைரி, தலை வாரிக் கொள்ள சீப்பு இவைகள்தான் அவன் பயண சாதனங்கள்.

அண்ணாச்சி சொல்லியபடி, கையில் இருபது ரூபாய் கடன் கொடுத்து ஒரு லாரியிலும் ஏற்றிவிட்டு விட்டார். வினு சென்னையை நேரில் பார்த்ததில்லையே தவிர பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறான்.

அடுத்தநாள் அதிகாலையில், ''தம்பி தாம்பரம் வந்துவிட்டது, இறங்கிக்கொள்...'' என்று இறக்கிவிட்டு விட்டனர்.

யாரையும் கேட்காமல், அருகில் ரயில் செல்லும் ஓசையை கேட்டு சென்றான்; பார்வையிலும் பட்டது.

சென்னையில் திருவல்லிக்கேணி பகுதி என்றால் கடற்கரை அருகே என்று கேள்விப்பட்டிருப்பதால் திருவல்லிக்கேணிதான் செல்ல விரும்பினான். ஆனால், மின்சார வண்டி திருவல்லிக்கேணி செல்லாதே! அதனால், எழும்பூர் வரை சென்று அங்கிருந்து நடந்தே திருவல்லிக்கேணி சென்று விடலாம் என்பது வினுவின் திட்டம். பஸ்சிலும் செல்லலாம். பையில் பத்து ரூபாய் வரை சில்லறையாக இருக்கிறது. நடந்தே போனால் ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலாமே!

மின்சார ரயிலில் ஏறி எழும்பூரில் இறங்கி நடந்தே திருவல்லிக்கேணி வந்து விட்டான். ஒரு ஓட்டலில் இன்றைய ஸ்பெஷல் போர்டு, அருகிலேயே வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்டும் வைக்கப்பட்டிருந்தது.

நேராக உள்ளே சென்றான். ''வேலை வேண்டும்!'' என்று கேட்டான். ''கிளீனர் வேலைதான் இருக்கிறது செய்வாயா?'' என்று கேட்டார் ஓட்டல் முதலாளி.

''தாராளமாக செய்கிறேன்!'' என்றான் வினு.

''இதற்கு முன் எங்காவது வேலை செய்திருக்கிறாயா?'' என்று முதலாளி கேட்க, ''இல்லை!'' என்றான் வினு.

''சரி உள்ளே குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வேலையைத் துவங்கிவிடு. ஆமாம் உன் பெயரென்ன?'' என்று கேட்டார்.

''வினு!''

குளித்து மாற்றுடையை அணிந்து கொண்டு அங்கு டேபிளின் மேல் உள்ள விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டான். பார்க்க பளிச் சென்றிருந்தான்.

வேலை கொடுக்கப்பட்டது. ஒரு வாளியில் தட்டு; இன்னொரு வாளியில் டபரா, டம்ளரை எடுத்துச் செல்ல வேண்டும். டேபிளை சுத்தமாக துணியால் துடைக்க வேண்டும். பின் தட்டு, டம்ளர்கள், கப்புகளை கழுவிவைக்க வேண்டும் என்று வேலை விவரம் விளக்கப்பட்டது. இது ஒரு வேலையா என்று பட்டது வினுவுக்கு.

சரக்கு மாஸ்டர்கள், சப்ளையர்கள் எல்லாம், 'தம்பிக்கு எந்த ஊரு, படித்திருக்கிறாயா?' என்று குசலம் விசாரித்தனர். எல்லாரும் நல்லவர்களாக அன்பானவர்களாகத்தான் தெரிந்தனர். வேலை வேலையாகத் தெரியவில்லை. குழந்தைகள் விளையாட்டு போலத்தானிருந்தது.

சனிக்கிழமை மாலை வாரக்கூலி என்று கொடுத்தனர். வினு சற்றும் எதிர்பாராத தொகை. அடுத்தநாள் ஓட்டல் விடுமுறை. 'ஆனால், உங்களுக்கு சாப்பாடு இருக்கும். எங்கு செல்வதானாலும் சென்றுவிட்டு வரலாம்!' என்று சொல்லப்பட்டது. வினு பார்த்தசாரதி கோவிலுக்கும் கடற்கரைக்கும் சென்று வந்தான்.

சர்வர்களில் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் போலும். வாரப்பத்திரிகைகளும், மாத நாவல்களும் அறை நிறைய கிடந்தது. வினுவுக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். அங்கிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஓய்வு நேரத்தில் படித்து முடித்தான்.

ஒரு ஞாயிறு வண்டலூர் உயிரியல் பூங்கா; இன்னொரு ஞாயிறு மியூசியம், ஆர்ட் காலரி சென்று பார்த்தான். ரேடியோ ஸ்டேஷன், 'டிவி' ஸ்டேஷன் வெளியிலிருந்து பார்த்தான். உள்ளே சென்று பார்க்க தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும்; அனுமதி வேண்டும்.

தினமலர், தினத்தந்தி, குமுதம் ஆபீஸ்களையும் வெளியிலிருந்தே பார்த்து மகிழ்ந்தான். அவை அவன் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகளாகும்.

சென்னைக்கு வந்தால் அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., சமாதியைப் பார்க்கா விட்டால் பயணம் பூர்த்தியாகாதே! அதையும் பார்த்தான். கண்ணகி சிலையையும் பார்த்தான்.

விடுமுறை ஓடிவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறந்துவிடும். அவன் எஸ்.எஸ்.எல்.சி., பாசாகியிருந்தான். ஓட்டல் முதலாளியிடம் ஒரு வாரத்தில் ஊர் திரும்பும் விஷயத்தைச் சொன்னான்.

ஒரு மாதச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிவிட்டான் வினு. கிடைத்த கூலியில் பஸ்சிலேயே வந்தான். தாய், தந்தைக்கு குறைந்த விலையில் துணிமணிகள் வாங்கிக் கொண்டான். சென்னை பிளாட்பாரக் கடையில் இரண்டு மூன்று பழைய புத்தகம் வாங்கிவந்தான். சென்னை அனுபவம் மறக்க முடியாத அனுபவம். ஒரு மாதத்தை ஓட்டியதை நினைத்து கொண்டான். அதற்கு காரணம் உழைப்பு. அண்ணாச்சியிடம் வாங்கிய இருபது ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

''வினு நீ சாமர்த்தியசாலிதான். செலவிடாமல் சென்னை போய் ஒரு மாதம் இருந்து வந்துவிட்டாயே...'' என்று பாராட்டினர் ஊர் மக்கள். வினு சென்னையில், தான் ஓட்டலில் கிளீனர் வேலை பார்த்து சம்பாதித்ததை மறைக்காமல் எல்லாரிடமும் சொல்லவே செய்தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது சரிதானே!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us