தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நட்பு!

நட்பு!

நட்பு!


PUBLISHED ON : மார் 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் கங்கைக் கரையில் அத்தி மரம் ஒன்று இருந்தது. வளமாக இருந்த அந்த மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்து இருந்தன. இதனால் அங்கே பற வைகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் கிளி ஒன்றும் இருந்தது. அது அந்த மரத்தைத் தன் நண்பனாகவே நினைத்து அன்பு காட்டியது.

திடீரென்று அந்த மரத்தின் இலைகள் வாடத் தொடங்கின. சில நாட்களில் மரமும் பட்டுப் போயிற்று. அங்கே இருந்த பறவைகள் இனி இங்கே தங்குவதால் பயன் இல்லை என்று புறப்பட்டன. கிளி மட்டும் அங்கிருந்து புறப்படவில்லை.

இதைப் பார்த்த அவை, ''கிளியே! இந்த மரம் பட்டு விட்டது. சிறிது தொலைவில் பழ மரங்கள் உள்ளன. நீயும் எங்களுடன் வந்துவிடு. நாம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம்!'' என்றன.

அதற்குக் கிளி, ''இந்த மரம் என் நண்பன். என் வாழ்வோ, சாவோ அது இங்கேதான். இங்கிருந்து நான் வரமாட்டேன்!'' என்று உறுதியுடன் சொன்னது. அதை வற்புறுத்துவதால் பயன் இல்லை என்று நினைத்த அவை அங்கிருந்து சென்றன. வெயில், மழை என்று பாராமல் அந்த மரத்திலேயே தங்கி இருந்தது அது.

பசி எடுத்தபோது அந்த மரத்தின் பட்டைகளை உண்டது. கங்கை ஆற்றில் தண்ணீரைக் குடித்தது. இப்படியே காலத்தை கழித்துக் கொண்டிருந்தது அது. தேவதை ஒன்று அந்த வழியாக வந்தது. பட்டுப் போன மரத்தில் தங்கி இருந்த கிளியை வியப்புடன் பார்த்தது.

''கிளியே! சிறிது தொலைவில் நிறைய பழ மரங்கள் உள்ளன. இந்தப் பட்டுப் போன மரத்தில் ஏன் தங்கியிருக்கிறாய்?'' என்று கேட்டது.

''தேவதையே! நானும் இந்த மரமும் நீண்ட காலம் ஒன்றாகவே இருந்தோம். இது என் நண்பன். இது எனக்கு நிறைய உதவி செய்துள்ளது. பட்டு விட்டது என்பதற்காக இதைவிட்டுச் செல்ல விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதைப் பிரிய மாட்டேன்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னது அது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த தேவதை, ''கிளியே! நட்பின் பெருமையை உன்னால் அறிந்துக் கொண்டேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! தருகிறேன்!'' என்றது.

''தேவதையே! என் நண்பன் மீண்டும் உயிர் பெற வேண்டும். முன்பு இருந்தது போல வளமாக விளங்க வேண்டும். நான் நண்பனைப் பிரியாமல் இருக்க வேண்டும்!'' என்று வேண்டியது அது.

''அப்படியே தந்தேன்!'' என்று சொல்லிவிட்டு மறைந்தது தேவதை. உயிர் பெற்ற அந்த மரம் முன்னைவிட வளமாகக் காட்சி தந்தது. எண்ணற்ற பழங்கள் அதில் இருந்தன. அதைப் பார்த்து மகிழ்ந்தது கிளி.

உண்மையான அன்பின் மூலம் தன் நண்பனுக்கு வாழ்வு தந்த கிளியை எல்லாரும் பாராட்டினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us