PUBLISHED ON : ஜூலை 29, 2023

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், சத்யாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2008ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு!
வகுப்பு ஆசிரியர் பாலமுருகன், கணித பாடமும் நடத்துவார். சேமிக்கும் பழக்கத்தை கற்பிக்க சிறுசேமிப்பு திட்டத்தை துவங்கினார். மாணவ, மாணவியர் பெயர்களை கையேட்டில் பதிவு செய்து, 'விரும்பிய தொகையை சேமிக்க துவங்கலாம்...' என்று அறிவுரைத்தார்.
அதன்படி, ஒவ்வொரு நாளும் செலவை சிக்கனமாக்கி பெற்றோர் தரும் பணத்தை சேமித்து வந்தோம். அதில் முதலிடம் பெறும் வகையில் ஆர்வத்துடன் இலக்கை அடைய முயற்சித்தேன்.
செலவிற்கு தரும் பணத்தை முழுமையாக சேமிப்பு கணக்கில் செலுத்தி விடுவேன்.
ஆண்டு இறுதியில், அதிக பணம் சேமித்திருந்தேன். அது, ஊக்கம் தந்தது. இடைநிலை வகுப்பை முடிக்கும் வரை சேமிப்பில் முதலிடத்தில் இருந்தேன்.
எனக்கு, 24 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும், சம்பளம் வாங்கியதும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எடுத்து, மீதியை வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறேன். அந்த ஆசிரியர் ஏற்றி வைத்த சேமிப்பு என்ற அகல் விளக்கை, அணையாமல் பாதுகாத்து வருகிறேன்.
- க.உதயசூரியன், விருதுநகர்.
தொடர்புக்கு: 87607 84972
