PUBLISHED ON : செப் 23, 2016

எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஆர்வம். என் ஆர்வத்தை அறிந்து, ஓவிய ஆசிரியரிடம் பயிற்சி எடுக்க வைத்தனர் பெற்றோர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழில் நுட்பத் தேர்வுத் துறையின் மூலமாக, ஓவியத் தேர்வு எழுதுவதற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரைவுத்தேர்வு எழுதினோம். இரண்டாவது தேர்வாக, 'மாதிரி ஓவியம் வரைதல்' என்ற தலைப்பில் எங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள மேஜை மீது, ஒரு அரிக்கேன் லைட், புத்தகங்கள், மை பாட்டில், டம்ளர் என பல பொருட்களை வைத்திருந்தனர்.
அவற்றைப் பார்த்து, எந்தெந்த வடிவத்தில் உள்ளன என ஒளி நிழலுடன் வரையவேண்டும். அனைவரும் வரைய ஆரம்பித்தோம். சூப்பர்வைசராக ஒரு இளம் பெண் ஆசிரியரை நியமித்திருந்தனர். அவர் எங்களைச் சுற்றி சுற்றி வந்து ஒவ்வொரு படங்களாக பார்த்தார்.
வினாத்தாளில், 'மேஜை மீதுள்ள பொருட்களை ஒளி நிழலுடனும் வரைக' என இருந்தது. ஆனால், அனைவரும் மேஜை மீதுள்ள பொருட்களோடு டிராயரையும் சேர்த்து வரைந்திருந்தனர். நான் மேஜையின் மேல் பகுதியை மட்டும் வரைந்து விட்டு, மேஜையின் மீதுள்ள பொருட்களையும் வரைந்துகொண்டிருந்தேன்.
ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டு வந்த சூப்பர்வைசர், என் அருகில் வந்து, 'தம்பி நீ டிராயர் போடலையா? எல்லாரும் போட்டிருக்காங்க' என்றதும், சிரிப்பை அடக்க முடியாமல் நான் சிரிக்க, தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருமே கொல்லெனச் சிரிக்க, அந்த அறையே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என முகம் சிவக்க வெட்கப்பட்டார் சூப்பர்வைசர்.
இன்று எனக்கு, 60 வயதாகியும், 'டிராயர்' என்ற சொல்லைக்கேட்டாலே அந்த நினைவுகள் மனதில் வந்துவிடும்!
- என்.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை.
