PUBLISHED ON : செப் 23, 2016

நான், 7-ம் வகுப்பு படித்தபோது, கடைசி பெஞ்சில் ஒரு குரூப் ஆக சில மாணவர்கள் இருப்பர். கலாட்டா செய்வதுதான் அவர்களின் பிரதான வேலை.
ஒருநாள், தமிழ் ஐயா மனப்பாட செய்யுளை அனைவரும் ஒப்பிக்க வேண்டும் என கூறவே, முதல் பெஞ்சிலிருந்து ஒவ்வொரு மாணவனாக ஒப்பித்துக்கொண்டே வந்தோம்.
கடைசி பெஞ்சுக்கு முன் வரிசையில் கடைசி மாணவன் ஒப்பித்து முடித்ததும், திடீரென, கடைசி வரிசை பையன்கள், 'அய்யா பாம்பு... பாம்பு' என ஒரே கத்தாகக் கத்தவும், தமிழ் அய்யா, துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று விழுந்தடித்து ஓடி வகுப்பறையில் இருந்து, 50 அடிக்கு அப்பாலிருந்த ஒரு மரத்தின் கீழ் பாதுகாப்பாக நின்று கொண்டார்.
கடைசி பெஞ்சைத் தவிர, இதர மாணவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்து, ஐயா பக்கத்தில் நின்று விட்டோம். பிற்பாடுதான் தெரிந்தது. பாம்பும் வரவில்லை; பூச்சியும் வரவில்லை என்று.
கடைசி பெஞ்சில் ஒருத்தர் கூட செய்யுளை மனப்பாடம் செய்யவில்லை. ஒப்பிக்கவில்லை என்றால் தமிழ் ஐயா பிரம்பினால் பதம் பார்த்துவிடுவார், இதற்கு என்ன வழி என யோசித்து பிரம்படியிலிருந்து தப்பிக்க, இப்படி ஒரு நாடகம் ஆடியுள்ளனர்.
எங்கள் வகுப்பறை, தோட்டத்தை ஒட்டி இருந்தது. கடைசி பெஞ்சு மாணவர்களில் ஒருவர், மிகவும் மெலிதான, வளையக்கூடிய ஒரு முருங்கை காய் பிஞ்சை கிள்ளி, தமிழ் அய்யாவின் பிரம்பிலேயே தொங்க விட்டு, வகுப்பறையில் இருந்து அதை செத்த பாம்பைக் கொண்டு வருவதுபோல் பாவனை செய்து, 50 அடி தூரத்தில் உள்ள தமிழ் ஐயா பார்வையில் படும்படி, 'செத்த பாம்பை' சுவருக்கு அந்தப்புறம் விழும்படி அந்த முருங்கைப் பிஞ்சை தூக்கி எறிந்த பின்னர்தான், ஐயா வந்தார்.
அவர் உள்ளே வரவும், பீரியட் முடிந்து மணியும் அடித்து விட்டதால் கடைசி பெஞ்சு மாணவர்கள் செய்யுளை ஒப்புவிக்காமலே தப்பித்துவிட்டனர். இந்த மாதிரி, 'ஐடியா' யாருக்கு வரும்?
- கோ.பரங்கிரிநாதன், மதுரை.
அந்த காலத்திலேயே கடைசி பெஞ்ச் மாணவர்கள், 'ரூம்' போட்டு யோசிச்சிருப்பாங்களோ?
- பொறுப்பாசிரியர்.
