PUBLISHED ON : செப் 17, 2022

வெற்றி என்ற சுவையான பழம் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டு போகாமலிருந்தால் வெற்றி இலக்கை சுலபமாக அடைய முடியும். இதை அனுபவப்பூர்வமாக, 8ம் வகுப்பு படித்த போது உணர்ந்தேன்.
அன்று மதிய பாட வகுப்பில் தமிழாசியர், 'தமிழ் பேச்சுப் போட்டி நடக்கவுள்ளது. விரும்புவோர் பெயரை பதிவு செய்யலாம்...' என்றார். போட்டியில் பங்கேற்க நானும் பெயர் கொடுத்தேன். பேச வேண்டிய தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களை ஒரு பக்க அளவில் எழுதினேன். அதை வாங்கி, ஆறு பக்க அளவுக்கு விரிவாக எழுதி தந்தார், தமிழ் ஆசிரியர். மனப்பாடம் செய்து பேசிக் காட்டினேன். பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தினார்; மாற்றி கொண்டேன்.
போட்டியின் போது நடுவர் முன் உரையாற்றினேன்; வெற்றி கிட்டவில்லை.மனம் தளராது மேலும் போட்டிகளில் பங்கேற்றேன்; பரிசு எதுவும் கிடைக்கவில்லை. சோர்வுற்றேன். போட்டிகளில் பங்கேற்கும் விருப்பம் குறைந்தது.ஓராண்டு கடந்தது - அன்று மதியம், வரலாறு பாட வகுப்பு நடந்து கொண்டிருந்தது. உண்ட மயக்கத்தில் இருந்தோம்; அப்போது வகுப்பிற்கு வந்த தமிழாசிரியர், 'தமிழ் பேச்சுப் போட்டி நடக்கவுள்ளது. இதில் யாராவது கலந்து கொள்ள விரும்புகிறீர்களா...' என்று கேட்டார்.ஏற்கெனவே தோல்விகளை சந்தித்ததால் கை உயர்த்தவில்லை.
வகுப்பு முடிந்ததும் வரலாற்று ஆசிரியர், 'நீ ஏன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை...' என்று கேட்டார். 'மேடையில் பேசுவதில் திறனில்லை அய்யா...' 'முறையாக பயிற்சி செய்தால் முடியும்; கலந்து கொள்...' அவரது அறிவுரையை ஏற்று, போட்டியில் பங்கேற்க பெயரை பதிவு செய்தேன்.
முன்னர் கலந்து கொண்ட போட்டிகள் பற்றி பொறுமையாக யோசித்தேன். ஏன் தோற்றேன்...எங்கு தவறு செய்தேன்...நன்கு அலசி ஆராய்ந்தேன். பின், போட்டிக்கான உரையை தயார் செய்தேன். ஏற்கெனவே நிகழ்ந்த தவறு மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டேன்.
தயாரித்த உரையுடன் தமிழாசிரியரை சந்திக்க சென்றேன். வேறு வேலையில் மூழ்கி இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.மனம் தளரவில்லை. வரலாறு ஆசிரியரிடம் உரையை காட்டினேன். சில திருத்தங்களை செய்தார்; அதன்படி, மாற்றி அமைத்து பயிற்சி செய்தேன். ஒரு வாரத்திற்கு பின் -தமிழாசிரியரிடம் என் உரை பற்றி ஆலோசனை கேட்க சென்றேன். அப்போதும் அவசர வேலையாக இருந்தார். தொல்லை செய்யாமல் திரும்பி விட்டேன். பயிற்சி செய்திருந்த உரையை, நண்பர்களிடம் பேசி காட்டினேன். விமர்சனங்களை ஏற்று திருத்திக்கொண்டேன். பேச்சு போட்டி நகரில் பிரபலக் கல்லுாரி வளாகத்தில் நடக்கவிருந்தது.
பல நுாறு பேர் திரண்டிருந்தனர். போட்டியாளர்களை, ஒரு அறைக்கு, 20 பேர் என பிரித்து அனுப்பினர். என் உரையை முடித்ததும், 'மிக அருமையாக பேசினாய் தம்பி...' என்று நடுவர்களில் ஒருவர் பாராட்டினார். இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருந்தேன்.
இறுதிப் போட்டியில், நான்காம் இடம் கிடைத்தது. நடுவர்கள், 'மிகவும் அருமையாக பேசினாய்; ஆனால், போட்டி விதிப்படி, மூன்று பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்... வயதில் சிறியவனாக இருந்தாலும், உன் பேச்சு தெளிவுடன் இருந்தது...' என்று பாராட்டினர். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதினேன். அந்த அனுபவங்களை திரட்டி, தவறுகளை சரி செய்து அடுத்த போட்டிக்கு தயாரானேன். தோல்வியே வெற்றிக்கு முதல் படியாக இருப்பதை உணர்ந்தேன். அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தேன். பரிசுகளால் மகிழ்ந்தேன்.
குழந்தைகளே... தொடர்ந்து செய்யும் முயற்சியே தோல்வியை விரட்டும் என புரிந்துகொள்ளுங்கள்!
ர.க.சரவணன்
