PUBLISHED ON : செப் 17, 2022

அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 30; இல்லத்தரசியாக உள்ளேன். வழக்கறிஞராக பணியாற்றுகிறார் கணவர். எனக்கு இரு மகன்கள்; மூத்தவனுக்கு வயது, 9; இளையவனுக்கு வயது 8. என், 60 வயது அம்மா, எங்கள் குடும்பத்துடன் தான் இருக்கிறார்.
மகன்கள், 'கதை புத்தகங்கள் வாங்கி கொடுங்கள் அம்மா...' என நச்சரிக்கின்றனர். தினமும், இரவு பாட்டியிடம் கதை கேட்டு கெஞ்சுகின்றனர். சிறுவர் பாடல்கள் கேட்பதிலும் கொள்ளை பிரியம் கொண்டுள்ளனர். பாடங்கள் படிக்காமல், சிறுவர் கதை, பாடல் என அலைவது முறையா... சிறுவர் இலக்கியம், கிரிமினல் வேஸ்ட் என்பது என் எண்ணம். உங்கள் கருத்து என்ன என்று சொல்லுங்கள் சகோதரி.
இப்படிக்கு,மு.ஜெகதா.
அன்பு சகோதரி...
சிறுவர் இலக்கியம், கிரிமினல் வேஸ்ட் என்பது, உங்கள் அறியாமையை காட்டுகிறது. சிறுவர் இலக்கியத்தால் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்...
* நம் கலாசார பண்பாட்டு கூறுகளை அறிந்து கொள்ள உதவுகிறது
* உணர்வு பூர்வமாக புத்திசாலித்தனத்தையும், படைப்பு திறனையும் வளர்க்கிறது
* பிறர் மீது பரிவை காட்டி, புரிதலை மேம்படுத்துகிறது
* இலக்கிய பாரம்பரியத்தை ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.
சிறுவர் இலக்கியத்தை, ஏழு வகையாக பிரிக்கலாம்.
அவை, சரித்திர புனைவுகள், அதீத கற்பனையின் உச்சியில் தேவதை கதைகள், சித்திர கதைகள், விஞ்ஞான புனைவுகள், கவிதைகள், நாட்டுப்புற கதைகள் மற்றும் இதிகாச புராண கதைகள்.
புனைவில்லாத கட்டுரைகள், சுயசரிதை என கொள்ளலாம்.
உங்கள் அம்மாவுக்கு, அவரது பாட்டி கதை சொல்லியிருந்தால், உங்கம்மா, உங்கள் மகன்களுக்கு இரவில் கதை சொல்லி துாங்க வைத்திருப்பார்.
திருக்குறள் கதைகள் போன்று நீதிக் கதைகள் சொல்வதை, பள்ளிகளில் நிறுத்தி விட்டனர்; அது தொடர வேண்டும்.
சிறுவர் பத்திரிகைகள், சிறுவர், சிறுமியருக்கும், பெரியோருக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
சிறுவர் இலக்கியம் படிப்பவர்கள் தான், பின்னாளில் கற்பனை வளமிக்க விஞ்ஞானிகளாக, கட்டட கலை வல்லுனர்களாக பரிணமிக்கின்றனர்.
ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், ஆயிரத்தோரு அரேபிய இரவுகள், ஈசாப் கதைகள் படித்த சிறுவர், சிறுமியர் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். சிறுவர் இலக்கியம் படித்ததால் தான், சிறுவர்களுக்கான மனநல ஆலோசனை பக்கம் எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.
சிறுவர் இலக்கியம் படிப்போம்; முழுமையான மனிதனாக உயர்வோம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
