
பரப்பளவு - 1.81 லட்சம் சதுர கி.மீ.,
மக்கள் தொகை - 1.48 கோடி
தலைநகரம் - நாம்பென்
மொழி - கிமர், பிரெஞ்சு
நாணயம் - ரியாஸ்
சமயம் - பவுத்தம்
எழுத்தறிவு - 74 சதவீதம்
தொழில் - கால்நடை வளர்ப்பு, மீன்பிடிப்பு, விவசாயம்
கனிமவளம் - இரும்பு, செம்பு, மாங்கனீஸ், தங்கம்
தென்கிழக்கு ஆசியா, இந்தோ - சீனா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு கம்போடியா. மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடு உள்ளது. வடகிழக்கில், லாவோசும், கிழக்கிலும், தென் கிழக்கிலும், வியட்நாம் நாடும் உள்ளன. கிழக்கில், தாய்லாந்து வளைகுடா காணப்படுகிறது.
பழங்காலத்தில், கம்பூச்சியா என அழைக்கப்பட்டது; பின், கம்போடியா என்றானது. இங்கு, 9 முதல், 13ம் நுாற்றாண்டு வரை கிமர் பேரரசு ஆட்சி நடத்தியது. நாகரிகம் செழிப்பாக வளர்ந்திருந்தது. அங்கோர் என்ற நகரை மையமாக கொண்டு ஆட்சி நடத்தினர்.
அண்டை நாடுகளுடன் ஓயாத போரால் சிதைந்தது அங்கோர். பின், லோவெக் புதிய தலைநகரமானது. போர்களால் பெரும் நிலப்பரப்பை இழந்தது. தலைநகர் லோவெக்கையும், 1594ல் இழந்தது கிமர் அரசு. அடுத்த, 300 ஆண்டுகள், வியட்நாம் மன்னர்களுக்கு அடிமையாகி கப்பம் கட்டியது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், 1867ல் கம்போடியா மீது ஆதிக்கம் செலுத்தியது. வியட்நாம் நாட்டிடம் இழந்த பகுதிகள் மீட்கப்பட்டன. பின், நவம்பர் 9, 1953ல் விடுதலை பெற்றது. நார்டன் சிகனுக் என்ற மன்னர் ஆட்சி புரிந்தார். அண்டை நாடுகளின் படையெடுப்புகளால், மீண்டும் அமைதி குலைந்தது.
போர்கள் முடிவுற்ற நிலையில், 1975ல் கடும் பஞ்சம் நிலவியது. உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லலுற்றனர் மக்கள். இந்த நிலையில், கிமர் செம்படை என்ற அமைப்பு புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைபற்றியது. நாட்டின் பெயரை கம்பூச்சிய குடியரசு என மாற்றியது.
அனைவருக்கும் கட்டாய உழைப்பு அமல்படுத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் வசித்தவர்கள் கிராமங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர். விவசாயத்தில் ஈடுபட வலியுறுத்தியது அரசு. மறுத்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
கம்போடியாவின் பல இடங்களில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர் மக்கள். இது பற்றிய விசாரணை தற்போது நடந்து வருகிறது.
கிமர் செம்படை அரசு, வியட்நாமியர்களையும் கொல்ல ஆரம்பித்தது. கோபம் கொண்ட வியட்நாம், 1978ல் கம்போடியா மீது போர் தொடுத்தது. போரும், வன்முறையும், 1989 வரை தொடர்ந்தன. ஏராளமான மக்கள் பலியாயினர்.
பிரான்ஸ், பாரீஸ் நகரில், 1989ல், அமைதி பேச்சு நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் வழி காட்டுதலில், 1991ல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆயுதகுறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பின், அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி முறையிலான அரசு அமைக்கப்பட்டது. அதுவே இப்போதும் தொடர்கிறது.
மக்களும் மொழியும்!
கம்போடியாவில், 90 சதவீதம் பேர், கிமர் இனத்தைச் சேர்ந்தவர்கள். கிமர் மொழி பேசுகின்றனர் அதுவே, அரசு அலுவல் மொழியாக உள்ளது. சீனர், வியட்நாமியர், சாம் இனத்தவர், இந்தியாவை சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர். இரண்டாவது மொழியாக பிரெஞ்சு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பயிற்று மொழியாக உள்ளது.
தற்போதய தலைமுறை, ஆங்கிலம் பயில்வதில் ஆர்வம் காட்டுகிறது. சுற்றுலா பயணியரின் வரத்து அதிகம் உள்ளதே இதற்கு காரணம்.
பல்லுயிர் வளம்!
இயற்கை வளம் செறிந்தது கம்போடியா. இங்குள்ள காடுகளில், 212 வகை பாலுாட்டியின விலங்குகளும், 536 வகை பறவை இனங்களும், 240 வகை ஊர்வனவும், 850 வகை நன்னீர் மீன் இனங்களும், 435 வகை கடல் மீன் இனங்களும் உள்ளன.
கட்டுப்பாடின்றி காடு அழிக்கப்படுவதாக, உலக அரங்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த, 1970ல், 70 சதவீதம் பரப்பில் மழைக்காடுகள் இருந்தன. கடந்த, 2007ல் வெறும், 3.1 சதவீதமாக குறைந்து விட்டது. காட்டு வளம் குறைவதால் மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பருவ நிலை!
கம்போடிய தட்பவெப்பம், 10 முதல், 40 டிகிரி செல்ஷியஸ் வரை உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மூலம், மே முதல் அக்டோபர் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் முதல் மார்ச் வரை குறைந்த அளவு மழை பெறுகிறது.

