
உண்மை அழகு!
மலையடிவாரத்தில் இருந்தது அழகிய சோலை. மரங்களில், பழுத்து தொங்கின கனிகள். கிளிகளும், காகங்களும் புசித்து வந்தன.
பொறாமையில் காகங்களை விரட்டின கிளிகள்.
'எங்களை ஏன் விரட்டுகிறீர்...'
பணிவுடன் கேட்டன காகங்கள்.
'எங்கள் அழகிய நிறம் மற்றும் குரலால் தான் இந்த சோலையே ஜொலிக்கிறது. கரிய நிறமும், கட்டை குரலும் உள்ள நீங்கள் இங்கு வசிக்க தகுதியில்லை. இனி இந்த பக்கம் வராதீர்...'
கொத்தி விரட்டின கிளிகள்.
மவுனமாக, சோலையின் ஓரத்திற்கு சென்று, வேப்பம் பழங்களை உண்டு வாழந்தன காகங்கள்.
சில நாட்களுக்கு பின் -
மாமரங்களில், பழுத்திருந்த கனிகளை பறிக்க வந்தார், குத்ததைகாரர். மரப்பொந்துகளில் இருந்த கிளி குஞ்சுகளை பிடித்தார். கீச்சிட்டபடி செய்வதறியாது பறந்தன கிளிகள். கண்ணீர் வடித்தன.
இதை கண்டதும், திரண்டு வந்து குத்தகைதாரர் தலையில் கொத்தின காகங்கள். தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடினார். தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டன கிளிகள்.
'குஞ்சுகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்...'
அன்புடன் கூறி, துயர் துடைத்தன காகங்கள்.
மூத்த காகம் ஒன்று, 'உயர்வான எண்ணமும், உதவும் குணமுமே உண்மையான அழகு...' என்று கூறி தெளிவுபடுத்தியது.
அறிவு பெற்று, காகங்களுடன் கூடி வாழ்ந்தன கிளிகள்.
குழந்தைகளே... உதவி வாழ்வதுதான் அழகு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பொதுநலம்!
அழகிய பூந்தோட்டம். கண்ணை பறிக்கும் வண்ண பூக்கள் மலர்ந்திருந்தன. வண்டு, வண்ணத்து பூச்சிகளை கவர்ந்து இழுத்தன.
பலநிற வண்ணத்து பூச்சி ஒன்று, தோட்டத்தில் நுழைந்தது. பூக்கள் எல்லாம் அதை இனிமையாக வரவேற்றன. வண்ணத்துபூச்சிக்கு பெருமை தாங்கவில்லை.
'என் அழகிய தோற்றம் கண்டு தான் வரவேற்கின்றன' என கர்வம் கொண்டது. மனம் போல், பூக்களில் தேன் உண்டு விளையாடியது.
அந்த நேரம் தோட்டத்தில் நுழைந்தது ஒரு தேனி.
அதன் தோற்றம் வண்ணத்து பூச்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தேனீயை, தலையை அசைத்து மகிழ்வுடன் வரவேற்றன மலர்கள்.
வியந்த வண்ணத்துபூச்சி, 'தேனீக்கு ஏன் இப்படி வரவேற்பு கொடுக்கிறீர்...' என கேட்டது.
புன்னகையுடன், 'நீ எங்கள் தேனை உண்டு மகிழ்கிறாய்; தேனீயோ தேனை உண்பதுடன், அடையில் சேமித்தும் வைக்கிறது. அது மருந்து, உணவாக பலருக்கு பயன்படுகிறது... இந்த நல்லெண்ணம் தான், தேனீ மீது மதிப்பை ஏற்படுத்தியது...' என்றன.
வெட்கி தலை குனிந்தது வண்ணத்து பூச்சி. கர்வத்தை விட்டது; தேனீயுடன் நட்புற பழகியது. அதனிடம் பாடங்கள் கற்றுக் கொண்டது.
அன்பு குழந்தைகளே... தேனீகளிடம் சேமிப்பையும், உதவும் மனப்பான்மையையும் கற்போம்.
- வனஜா பாண்டியன்

