PUBLISHED ON : செப் 02, 2016

தேவையான பொருட்கள்:
1.சீப்பு, 2.சிறிது சிறிதாக கிழித்த காகித துண்டுகள், 3.சிறிதாக உடைத்த குச்சிகள்.
பார்வையாளர்கள் முன் சீப்பைக் காட்டி விட்டு, தலைமுடியை மெல்ல சீவுங்கள். பின்னர் சீப்பை உள்ளங்கையில் ஒரு சில வினாடிகள் வைத்துவிட்டு, டேபிளில் இருக்கும் காகித துண்டுகள் அருகே கொண்டு போகவும். இப்போது சீப்பில் அந்த காகித துண்டுகள் ஒட்டாது.
பின்னர், பார்வையாளர்களிடம், 'இப்போ நான் சில மந்திர வார்த்தைகள் சொல்வேன். இதே சீப்பு இங்கே உள்ள காகித துண்டுகளை இழுக்கும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, மறுபடியும் சீப்பால் தலைமுடியை சீவுங்கள். சீவிய சீப்பை ஓரமாகப் பிடித்தபடி, உடனே காகிதத்தின் அருகே கொண்டு போகவும். காகிதத் துண்டுகளை சீப்பு கவர்ந்து இழுக்கும். பார்வையாளர்கள் இந்த மேஜிக்கை பார்த்து அசந்துவிடுவர்.
ஒரு பொருளுக்கு உராய்வு காரணமாக வெப்பம் ஏற்படுகிறது. வெப்பம் காரணமாக ஒவ்வொரு பொருளும் மின்சக்தி தன்மையை பெறுகின்றன. சீப்பை பலமுறை தலைமுடியில் ஒரே திசையில் தேய்க்கும்போது சீப்பிலுள்ள அணுக்களில் இருக்கும் எதிர்மின் அணுக்கள் வெளியேறவோ அல்லது தேய்க்கப்படும் பொருளில் உள்ள மின் அணுக்களை ஏற்கும்.
இந்நிலையில், சீப்பை துண்டுக் காதிதங்கள் அருகே கொண்டு சென்றால் அப்பொருளின் நுனியிலுள்ள மின் அணுக்களை ஈர்க்கும் அல்லது தன்னிடமுள்ள மின் அணுக்களை அவற்றிற்கு கொடுக்கும். இதன் காரணமாகத்தான் சீப்பில் காதிதங்கள் ஒட்டுகின்றன.
இதில் மேஜிக் என்னவெனில் முதலில் சீவும் சீப்பில் ஏறிய வெப்பத்தை உள்ளங்கையை வைத்து மறைத்து விட வேண்டும். இதனால், சீப்பில் காகிதத் துண்டுகள் ஒட்டாது. இரண்டாவது முறை சீவும் போது சீப்பை ஓரமாய் பிடித்துக் கொண்டு சட்டென்று சீப்பில் ஏறிய வெப்பத்தை காகிதத்துக்கு அருகே கொண்டு சென்றால் போதும், உங்கள் மேஜிக் நல்ல வரவேற்பு பெறும்.
