PUBLISHED ON : செப் 02, 2016

முன்னொரு காலத்தில், கோவூர் என்றொரு நகரத்தில் ஏராளமான திருடர்கள் வசித்து வந்தனர்.
நகரில் வசித்து வரும் அந்தத் திருடர்கள், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திருடுவர். பிறகு பங்கு போட்டு கொள்வர்.
அந்த நகரில் காவலர்கள் நுழைந்து திருடர்களைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால், திருடர்கள் வெகு சாமர்த்தியமாக காவலர்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தனர்.
நாளுக்கு நாள் திருடர்களின் தொல்லை அதிகமானது. கிராம மக்கள் எல்லாரும் அந்தத் திருடர்களைக் கண்டு பயந்து நடுங்கினர்.
அடிக்கடி ஒரு கிராமத்தினுள் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பெண்களின் நகைகளையும், வீடுகளில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த தானியங்களையும் கொள்ளையடித்தனர்.
அந்தக் கிராமத்தில் கார்த்திக் என்ற சிறுவன் இருந்தான். அச்சிறுவன் நேர்மையும், வீரமும் மிக்கவன். எப்படியாவது திருடர்களைப் பிடித்து கிராம மக்களை காப்பாற்றிட எண்ணினான்.
திருடர்கள் அனைவரும் முரட்டு உருவத்துடனும், கையில் ஆயுதங்களுடன் இருந்தாலும் அறிவின் துணையோடும், தந்திரத்தோடு திருடர்களைப் பிடித்திட முடிவு செய்தான்.
அன்றைய தினம் எதுவும் சாப்பிடாமல் தன் வீட்டிலேயே அமர்ந்து கடுமையாக சிந்தனை செய்தான் கார்த்திக்.
திருடர்கள் யாவரும் நகர்ப் புறத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதையறிந்த சிறுவன் கார்த்திக், கையில் ஒரு பெரிய கயிறுடன் நகரத்துக்குள் நுழைந்தான்.
திருடர்கள் இருவர் ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஏனோ அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றியிருக்க வேண்டும். அதனால்தான் ஒருவருக்கொருவர் இவ்வாறு சண்டையிடுகின்றனர் என்று தெரிந்து கொண்டான் கார்த்திக்.
திருடர்களின் சண்டையைப் பார்த்த கார்த்திக்கின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. இந்த இரண்டு திருடர்களில் ஒருவருக்கு நாம் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது எண்ணமானது நிறைவேறும் என்று எண்ணினான்.
திருடர்கள் இருவரும் முரட்டுத்தனமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, சிறுவன் கார்த்திக் ஒரு திருடனின் கையில் கயிற்றைக் கொடுத்தான். அத்திருடனோ அந்தக் கயிற்றினால் தன்னோடு மோதுகின்ற திருடனைப் கட்டிப் போட்டு விட்டான்.
''இனிமேல் நமக்கு கவலையில்லை! நாம் இங்கிருந்து ஓடிவிடலாம். ஒருவேளை இங்கு காவலர்கள் வந்தால் இங்கு கூடியிருக்கின்ற மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து உங்களோடு சண்டையிட்டவரை காவலர்களிடம் பிடித்துக் கொடுத்து விடுவர். நீங்களும் உங்கள் எதிரி தொலைந்து விட்டான் என நிம்மதியடைந்திடலாம்,'' என்றான் கார்த்திக்.
இவன் சொல்வது சரிதான் என உணர்ந்த திருடனும் கார்த்திக்கை அழைத்தவாறு அந்நகரை விட்டு வெளியேறினான்.
அதன் பின்னர் காவலர்களும், மக்களும் மிக எளிதாக கட்டப்பட்ட நிலையில் இருக்கும் திருடனைப் பிடித்து விட்டனர்.
''சிறுவன் ஒருவனின் உதவியால்தான் இன்னொரு திருடன் இத்திருடனை கயிற்றினால் கட்டி போட்டு விட்டுச் சென்றான். அந்தத் திருடனுடன் சென்ற அச்சிறுவன் ஏதோ புத்திசாலித்தனமாக வேலை செய்கிறான் போல் தெரிகிறது. அச்சிறுவன் மற்றத் திருடர்களையும் பிடித்திட முயற்சிக்கிறான். அதனால்தான் அவன் இன்னொரு திருடனுடன் சென்றிருக்க வேண்டும்,'' என்றனர் அங்கு கூடியிருந்தவர்கள்.
''அப்படியா! நீங்கள் சொல்வதை கேட்கின்ற போது எனக்கு வியப்பாக இருக்கிறது! அச்சிறுவனைப் பார்த்திட வேண்டும் என மிகவும் ஆவலாக இருக்கிறது'' என்றார் காவலர் ஒருவர்.
பிடிபட்ட திருடனை காவலர்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அத்திருடன் மற்ற திருடர்களோடு தானும் தங்கி வந்த ரகசிய அறையினைத் தெரியப்படுத்தினான். அந்த ரகசிய அறையினைக் கேட்டறிந்த காவலர்கள் உற்சாகத்துடன் அந்த இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு கூடியிருந்த திருடர்களை கைது செய்தனர்.
மிக எளிதாக திருடர்களைப் பிடித்திட உதவி செய்த சிறுவன் கார்த்திக்குக்கு, பரிசுகள் கொடுத்து கவுரவித்தனர் காவல் துறையினர்.
