தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கூடா நட்பு!

கூடா நட்பு!

கூடா நட்பு!


PUBLISHED ON : செப் 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காட்டில் நரி, ஓநாய், கீரி, எலி மற்றும் புலி ஆகியவை வசித்து வந்தன. நரியுடன் மற்ற நான்கு விலங்குகளும் நட்பு கொண்டிருந்தன.

இப்படி நான்கும் நரிக்கு நண்பர்களாக இருந்தாலும், நரி தன் நண்பர்களின் நலனை விட்டு, சுய நலனையே பெரிதாக எண்ணியது.

ஒருநாள் -

ஐந்து மிருகங்களும் ஒரு மான் கூட்டத்தை கண்டன.

அந்த மான் கூட்டத்தில் ஒரு மான் மட்டும் நன்கு கொழுகொழுவென்று இருந்தது. இதைக் கண்டதும் ஓநாய், நரி, எலி, புலி, கீரி ஆகியவற்றிற்கு அந்த மானை அடித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

அதை எப்படி அடித்து உண்பது என்ற தயக்கம் ஐந்து நண்பர்களுக்கும் எழுந்தது. காரணம், யார் அடிக்கச் சென்றாலும் மான் நான்கு கால் பாய்ச்சலில் பறந்தோடி விடுகிறது. அதைப் பிடிப்பது என்பது பெரும் பாடாக இருந்தது. அப்படி இருக்கையில், அதன் மாமிசத்துக்கு ஆசைப்படுவது அவ்விலங்குகளுக்கு பெருத்த சவாலாக இருந்தது.

ஆழ்ந்து யோசித்த நரி ஒரு யோசனை கூறியது.

''மான் தூங்கிக்கொண்டிருக்கும் போது எலி, மானின் காலைக் கடிக்க வேண்டும். அப்படிக் கடித்து விட்டால் கடிப்பட்ட காயத்துடன் மானால் அதிவேகமாக ஓட முடியாது. அப்போது புலி பாய்ந்து மானைக் கொன்று விடலாம். பிறகு, அனைவரும் மான் கறியைப் பங்கு போட்டு தின்று பசியாறலாம்,'' என்றது.

இதற்கு எலியும், புலியும் ஒப்புக் கொண்டன.

ஒருநாள்-

மான் ஒரு மரத்தடியில் களைப்பாக உறங்கிக்கொண்டிருந்தது. அதுதான் சமயம் என்று யோசித்த எலி, மெதுவாக பதுங்கிச் சென்று மானின் கால் குளம்பை கடித்தது. மான் வலியால் துடிதுடித்துப் போனது. கூரிய முள்குத்தியது போன்ற வலி, கால் பாதத்திலிருந்து விண் விண்னென்று வலிக்க, அது காலை கவனித்தது.

அந்நேரம் பார்த்து புலி ஓடி வர, மான் நிற்கக் கூட நேரமில்லாமல் காற்றாய் பறந்தது. ஆனால், முன் போல மானால் ஓட முடியவில்லை. பாதத்தை தரையில் ஊன்ற முடியவில்லை. ஒரு காலை தூக்கியவாறு மூன்று காலில் ஓட, புலி அதனை விடவும் வேகமாய் ஓடி அதைத் துரத்தி அடித்தது.

அடிபட்ட மான் தரையில் பொத்தென்று விழுந்தது.

விழுந்த மானின் கழுத்தைக் குதறியது புலி.

மெலியாரை வலியார் எய்ப்பது மனிதனில் மட்டுமல்ல, விலங்கிலும் உண்டு என்பதை புலி நிரூபித்தது. மான் விலுக் விலுக்கென்று தன் கால்களை உதைத்துக் கொண்டே விழிகள் விரிய பரிதாபமாய் உயிரை விட்டது.

இதற்காகவே காத்திருந்தது போல ஐந்து விலங்குகளும் மான் கறியை ருசிக்க ஆசையோடு அதைச் சுற்றி நின்றன. நண்பர்கள் நால்வர் நாவிலும் எச்சில் ஊறுவதைக் கண்டது நரி. அதற்கு மான் கறியை தான் மட்டுமே முழுதாக சாப்பிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

எல்லாரும் சமமாகப் பங்கிட்டு உண்டால் சிறிதளவு மாமிசம்தான் நமக்குக் கிடைக்கும். அதே, முழு மானாக இருந்தால் வேண்டிய மட்டும் சாப்பிடலாம். ஆகையால், எப்படியாவது இந்த மான் கறியை நாமே உண்ண வேண்டும். அதற்கொரு வழியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் மூளையைக் கசக்கிய நரி, சட்டென்று ஒரு யோசனையை சொன்னது.

''நான் மானை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நால்வரும் சென்று காட்டாற்றில் குளித்து விட்டு வாருங்கள். பிறகு நான் சென்று குளித்து விட்டு வருகிறேன். அதன் பின் எல்லாரும் சேர்ந்து இந்த மானை ருசிக்கலாம்,'' என்றது நரி.

நரி சொன்னதற்கு ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காமல், மற்ற விலங்குகள் குளித்து விட்டு வருவதற்காக குதூகலத்துடன் ஓடின.

ஆற்றில் குதித்து நனைந்த புலிக்கு அகோரமாகப் பசி எடுத்தது. அது ஆவலுடன் நரி இருந்த இடத்திற்கு முதலில் வந்து சேர்ந்தது.

அங்கு நரி உலகமே அழிந்து போனது போல் சோகமே உருவாக அமர்ந்திருந்தது. அதைக் கண்ட புலி, ''என்னாச்சு நண்பா? ஏன் இந்த சோகம்? அதுவும் சுவையான மான் கறியை உண்ணப் போகும் இந்த நேரத்தில் எதற்கு இந்த சோக கீதம்?'' என்றது.

''காலம் கெட்டுப் போச்சு நண்பா!'' என்றது நரி.

''ஏன்? காலத்துக்கு என்ன? புதிராக ஏன் பேசுகிறாய்?' விளக்கமாகச் சொல்,'' என்றது புலி.

''புலியான உன் வீரத்தை, எலி கேலி பேசியது நண்பா. அதை நினைத்துதான் நான் தாங்க முடியாத சோகத்தில் இருக்கிறேன்,'' என்று பிரித்தாளும் தனது சூழ்ச்சியை ஆரம்பித்தது நரி.

இதை உணராத புலி, ''என்ன சொன்னான் அந்த சிறு பயல்? உடனே சொல்!'' கோபத்தில் தரையை கால் நகங்களால் பிராண்டியது.

''நான் காலைக் கடித்ததால்தான் மானை புலியால் வீழ்த்த முடிந்தது. என்னுடைய வீரத்தால் வீழ்ந்த மானை, புலி இன்று புசித்து தன் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறது... என்று உன் வீரத்தைப் பற்றி குறை சொல்லியது நண்பா!'' என்று எலி சொல்லாததையெல்லாம் சொல்லியது நரி.

அதை உண்மை என்று நம்பிய புலியும், ''இது எனக்கு மிகப்பெரிய அவமானம். எலியின் தயவால் அடித்த மானை புசிக்க எனக்கு விருப்பமில்லை. இந்தக் கானகத்தில் தேடி அலைந்து நானே சுயமாய் அடித்த ஒரு விலங்கைத்தான் சாப்பிட்டு பசியாறுவேன். எலி போன்ற சின்னப் பயல்களுடன் நட்பு பாராட்டியது என் தவறு. அவன் தயவோடு கிடைக்கும் மான் கறி எனக்கு ஒரு போதும் வேண்டாம். நான் வருகிறேன்...'' கோபத்தில் உறுமி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றது புலி.

'அப்பாடா! இருப்பதிலேயே பலசாலியான புலியை ஒரு வழியாய் ஏமாற்றி அனுப்பியாகிவிட்டது' என்று உள்ளூக்குள் பெருமூச்சு விட்டது நரி.

சிறிது நேரத்தில் முன் பற்கள் நீண்ட எலியும், வாலை ஆட்டியபடியே ஓடி வந்தது.

''புலி நகம் பட்ட மானின் உடம்பில் விஷம் உள்ளதாகக் கூறி, இக்கறியை உண்ண மறுத்து கீரி சென்று விட்டது. கீரியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு எனக்கு மான் கறியை சாப்பிட பயமாகப் போய் விட்டது. விஷம் தோய்ந்த உணவைச் சாப்பிட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது நண்பா?'' என்று அப்பாவியாய் கேள்வி கேட்டது நரி.

''எதற்கும் நீ எச்சரிக்கையாக இருந்து கொள். உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். மான் கறியை உண்ண மறுத்துச் சென்ற கீரி பக்கத்தில் எங்காவதுதான் பயங்கர பசியோடு பதுங்கி இருக்கும். அது உன்னைக் கண்டால் ஒருவேளை அடித்துச் சாப்பிட திட்டம் கூட திட்டியிருக்கலாம். நீ எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நான் இதை உன்னிடம் கூறியதை கீரிக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாதே,'' என்று எலி வயிற்றில் புளியைக் கரைக்க, அது கிலி பிடித்து அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தது.

அடுத்து ஓநாய் வந்தது. அதனிடம், ''உனக்கொரு ரகசியம் சொல்கிறேன். புலி உன் மீது கோபமாக இருக்கிறது. தன் மனைவியை அழைத்து வர அது தன்னுடைய இருப்பிடமான குகைக்குப் போய் இருக்கிறது. இன்று உன் கதையை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறதாம். அதனால் நீ சீக்கிரமாக இந்த மான் கறியை சாப்பிட்டு விட்டு புலி வருவதற்குள் இந்த இடத்தை விட்டுப் போய் விடு,'' என்று அதன் உயிருக்கும் உலை வைப்பது போல் பேசியது.

மான் கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால், பிறகு தன் கறியை புலி சாப்பிடும் என்று உணர்ந்த ஓநாய், உயிரை கையில் பிடித்துக் கொண்டு புலி வருவதற்குள் இடத்தைக் காலி செய்து பறந்து போனது.

இறுதியாக கீரி வந்தது.

''வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன். நான் பாய்ந்து கடித்ததை தாங்க முடியாமல்தான் புலி, எலி, ஓநாய் எல்லாம் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டன. நீ ஒருவன் மட்டும்தான் மிச்சமிருக்கிறாய். உன்னால் முடியும் என்றால் என்னுடன் தனியாக நின்று சண்டை இடு. நீ வெற்றி பெற்றால் இந்த மான் கறியை உண்...'' என்று கூறி கீரியுடன் சண்டைக்கு மல்லு கட்டியது நரி.

நரியின் வார்த்தைகளை கீரி அப்படியே நம்பியது. 'நம்மை விட பலம் வாய்ந்த புலியே இதனிடம் தோற்றோடி இருக்கும் போது நாம் எம்மாத்திரம்? இந்த மான் கறிக்கு ஆசைப்பட்டு இதனிடம் சண்டைக்கு நின்றால், பிறகு நம் உயிருக்குத்தான் ஆபத்து. இந்த கறி இல்லாவிட்டால், வேறு கறி ஏதாவது உண்டு உயிர் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் மறுபடியும் வருமா?' என்று யோசித்தது.

பின், ''நமக்குள் சண்டை எதற்கு? நீ வேண்டாம் என்றால் நான் போய் விடுகிறேன். இந்தக் கறியை நீயே சாப்பிடு!'' என்று கூறிய கீரிக்கு , கூடா நட்பின் அவலம் புரிய விறுவறுவென்று நடையைக் கட்டியது.

அதன் பிறகு மான் கறியை தான் மட்டுமே புசித்து மகிழ்ந்தது நரி.

குட்டீஸ்... ஒரு சிலர் தாங்கள் வெற்றி பெறவும், நினைத்தது நடக்கவும் நரி போல் நடந்து கொள்வர். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us