
சென்றவாரம்: தன் இரண்டு மகன்களும், தான் வைத்த சோதனையில் தோற்றுப்போய் நாடு திரும்பியதை கண்டு வருந்தினார் மன்னர் அவனீந்திரா. இதை பார்த்து சோகத்தில் ஆழ்ந்தான் மூன்றாவது இளவரசன் இளங்குமரன். இனி-
அரச சபையில் அமர்ந்திருக்கவே அவமானமாக இருந்தது அவனுக்கு. வெளியே ஓடினான். யார் பார்வையும் தன்மீது படுவதை விரும்பாத இளங்குமரன், ஒரு மூலையில் ஊருக்கு வெளியே இருந்த ஒரு காட்டில், தன்னந்தனியாக உட்கார்ந்து விம்மி, விம்மி அழுதான்.
'அப்பாவின் வேதனையை எப்படிப் போக்குவது? மரகதபுரிக்குப் போக முடியுமா? என் அண்ணன்மார்களுக்கு நேர்ந்த கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ? கூடாது; துணிவோடிருக்க வேண்டும். இல்லாவிட்டால், திரும்பியே வரக் கூடாது.'
அப்போது, ஒரு குடுகுடு கிழவி அங்கு வந்தாள். நிமிர்ந்து நிற்க முடியாமல் கூனல் விழுந்த முதுகு. ஆனால், பேச்சு மட்டும் கணீரென்றிருந்தது.
''இளவரசே, ஏன் இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறாய்? வேதனையை விரட்டு; துயரத்தைத் துரத்து; அதிர்ஷ்டம் உன்னை தேடிக்கொண்டிருக்கும் போது, நீ இங்கே காட்டில் வந்து கண்ணீர் வடிக்கிறாயே. இந்த ஏழைக் கிழவிக்கு ஏதாவது தருமம் தா,'' என்றாள்.
''ஏ, பாட்டி என்னைத் தொந்தரவு செய்யாதே! உனக்கு தர்மம் செய்ய வேண்டுமென்பதற்காக என்னை அதிர்ஷ்டம் தேடிக் கொண்டிருப்பதாக, ஆசை வார்த்தைகளை பொய்யாக சொல்ல வேண்டாம். என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரியும். உனக்கு தருவதற்கு என்னிடம் ஏதுமில்லையே பாட்டி... என்ன செய்வேன்?'' என்று கண் கலங்கினான் இளங்குமரன்.
''இதற்காக வருந்தாதே குழந்தாய்! உன்னிடம் வெகுமதி பெறுவதற்காக நான் பொய்யாகப் புகழவில்லை. நீ சக்கரவர்த்தியாகப் போவதாக ஏதோ ஒன்று என் உள்ளத்தில் சொல்லுகிறது. உன் கவலைக்கும், கண்ணீருக்கும் காரணத்தைக் கூறு. என்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்,'' என்றாள் கிழவி.
''தொணதொணக்காமல் போக மாட்டாயா?'' என்றான் கடுப்புடன்.
''இளவரசனே! ஆண்டவன் ஆதரவற்றவர்களிடம் கூடக் கருணை காட்டுவான். என் வயதையும், உருவத்தையும் பார்த்து என்னை வெறுக்காதே. வல்லவர்கள் திட்டமிடுவதை என்னால் முன்கூட்டியே அறிய முடியும். அவர்களுடைய இயலாமையையும், பலவீனத்தையும் கண்டு நான் வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறேன். நீ நம்புகிறாயா? இவ்வுலகில் நான் கண்ட எத்தனையோ விஷயங்களின் கனம் தாளாமல் தான் என் முதுகு கூனிவிட்டது!'' என்றாள்.
கிழவியின் பேச்சில் ஏதோ ஒரு மாயம் இருப்பதை உணர்ந்தான் இளங்குமரன். தன் விரலிலிருந்த மோதிரத்தை கழற்றி அவளிடம் கொடுத்தான்.
''இப்போது இதைத்தான் என்னால் தரமுடியும் பாட்டியம்மா!'' என்றான்.
''எதுவானாலும் சரி. இதற்காக ஆண்டவனின் கருணை ஏராளமாக உனக்குக் கிடைக்கப் போகிறது. மிகப் பெரும் அதிர்ஷ்டம் வரவிருக்கிறது. நீ விரைவிலேயே சக்கரவர்த்தியாகப் போகிறாய். வல்லவனாக, வீராதி வீரனாகச் சாகசங்கள் புரியப் போகிறாய்!'' என்றாள் கிழவி.
''போதும் பாட்டி, போதும்! இப்படியெல்லாம் பொய்யாகப் புகழ்ந்து என் மனதைப் புண்படுத்தாதே,'' என்றான் இளவரசன்.
''பொய்ப் புகழ்ச்சி என்றா கூறுகிறாய்? என் கண்களை உற்றுப் பார்த்தபடியே, நான் கூறப் போவதைக் கவனமாகக் கேள். உன் தந்தையிடம் போ. மரகதபுரிக்குப் போவதாகக் கூறு. அவர் திருமணம் செய்து அரியணை ஏறியபோது அணிந்த ஆடைகளையும், கவசங்களையும், குதிரையையும் உன் பயணத்துக்கு கேள்.
''அவை கிடைக்குமானால் உன் சகோதரர்களைப் போல தோல்வி அடையாமல் வெற்றி காண்பாய். நீ தான் வெற்றி வீரனாக வர வேண்டும். சக்கரவர்த்தியாக வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது.
''உன்னை அனுப்ப உன் தந்தை இணங்கமாட்டார். உன் அண்ணன்மாரின் தோல்வி. அதே எடைக்கல்லினால் உன்னையும் எடை போடுவார். ஆனால், நீ பிடிவாதமாக இருந்தால் முடிவில் சம்மதிப்பார். உன் தகப்பனார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மகுடாபிஷேகம் செய்து, மணமகனானபோது அணிந்த ஆடைகள் இப்போது நைந்து போயிருக்கும்; வர்ணமும் பளபளப்பு இருக்காது.
''அந்த ஆயுதங்கள் துருப்பிடித்திருக்கும், குதிரை லாயத்தில் ஆயிரக்கணக்கான குதிரைகளில் அந்தப் பழைய குதிரையை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கவலை வேண்டாம். கிழட்டுக் குதிரை, எலும்பும் தோலுமாக இருக்கும். கண்டுபிடிப்பது சுலபம். ஆனாலும், பல கிழட்டுக் குதிரைகள் இருக்குமே. அவற்றுள் எது என்று கண்டு பிடிப்பது எப்படி எனக் கேட்கலாம். உன் தந்தைக்கே அந்தக் குதிரையை நினைவிருக்காது.
''நான் ஒரு யுக்தி கூறுகிறேன்; அதன்படி செய்தால் அந்த அதிசயக் குதிரையை கண்டுபிடித்துவிடலாம். ஆம், அது ஒரு மாயக் குதிரை. உன் வாழ்வில் உன்னைக் காப்பாற்ற பல சாகசங்கள் புரியப் போகிறது. கண கணவென்று ஜூவாலை விட்டு எரியும் தணல் கங்குகளை, ஒரு தாம்பாளத்தில் வைத்து, குதிரைக் கொட்டடியின் நடுவிலே வை.
''அங்குள்ள குதிரைகளுள் எந்த ஒரு குதிரை அந்தத் தணல் கங்குகளை, ஆவலோடு சாப்பிடுகிறதோ அதுவே நான் குறிப்படும் மந்திரக் குதிரை. உன்னைப் புகழின் உச்சிக்கு. வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு செல்லப் போகும் மாயக் குதிரை. அதன் தோற்றத்தைக் கண்டு முகம் சுளிக்காதே. பழைய நைந்த ஆடைகளையும், துரு ஏறிய, ஆயுதங்களையும் பார்த்து நம்பிக்கை இழக்காதே.
''நான் கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து செயல்படு. நாம் எப்போதாவது உலகின் ஏதாவது ஒரு மூலையில் மீண்டும் சந்திப்போம்...'' என்று கூறியதும் மாயமாக மறைந்து போனாள் அந்தக் கிழவி.
இளங்குமரனுக்கு வியப்பான வியப்பு. அந்தக் கிழவி யார்? அவர் கூறியனவெல்லாம் உண்மைதானா? நடக்குமா? திகைத்து, பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் செயலற்று உட்கார்ந்திருந்தான். அவன் உடலில் ஏதோ ஒரு புதிய தெம்பு, நம்பிக்கை, உறுதி ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, ஒரு முடிவோடு அரண்மனையை நோக்கி நடந்தான் கந்தர்வபுரியின் கடைசி இளவரசனான இளங்குமரன்.
அவன் நினைவெல்லாம் அந்தக் கூனல் கிழவியே நிறைந்திருந்தாள். அந்தப் பாட்டியிடம் தனக்கு ஏற்பட்டது பயமா அல்லது பக்தியா? திடீரென்று அவள் மறைந்து போன மாயத்தினால் ஏற்பட்ட வியப்பு!
இந்த நினைவுகளுடனேயே தந்தையிடம் போனான்.
அப்பா, என் சகோதரர்களின் வழியிலேயே நானும் முயல விரும்புகிறேன். முயற்சி மட்டுமல்ல, வெற்றி பெறவே துணிவு கொண்டிருக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் வாக்களிக்கிறேன். வெற்றியோ, தோல்வியோ இங்கிருந்து சென்றபின் மறுபடியும் தோல்வியோடு திரும்ப மாட்டேன். வழியில் மரணமே என்னை விரட்டினாலும் சரி, இறந்துடுவேனே தவிர, இங்கு ஓடி வரமாட்டேன்!'' என்றான்.
விரக்தியாகச் சிரித்தார் அவனீந்திரா.
''மகனே, உன் தீர வசனங்களைக் கேட்க இதமாகத்தானிக்கிறது. உன் சகோதரர்களும் இப்படித்தான் வீராவேசமாக புறப்பட்டனர். ஆனால், வெட்கப்படும்படி திரும்பினர். நான் பெற்ற பிள்ளைகளிடம் எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. உன் ஆர்வத்தை நான் பாழாக்க விரும்பவில்லை. உன் வீரத்தைப் பரீட்சிக்காமல் குறை கூற விரும்பவில்லை.
''சென்று வா, வென்று வா என்று வாழ்த்தி வழியனுப்புகிறேன். ஆனால், ஒன்று, 'அவமானத்தோடு இங்கு திரும்ப மாட்டேன், என் சகோதரர்களைப் போல' என்று நீ சபதமிட்டாயே, அப்படி நீ சபதமிடாவிட்டாலும் கூட தோல்வியோடு உன்னை இங்கு நான் வரவேற்க மாட்டேன். அவர்களைப் போலத் தோல்வியால் தொங்கிய தலையோடு திரும்பினால் கந்தர்வபுரியில் உனக்கு இடம் கிடையாது!'' என்றார்.
''அப்பா! அதே முடிவோடுதான் நான் செல்கிறேன். அதிர்ஷ்டத்தை நாடிச் செல்லும் எனக்கு ஆண்டவனின் அருளும், உங்கள் ஆசியும் துணை செய்யும். நான் கேட்கும் ஆடை, ஆயுதம், குதிரை ஆகியவற்றை எனக்கு அளித்து வழியனுப்புங்கள். உங்களது பழைய பொருள்கள் எனக்கு அதிர்ஷ்டத்தையும், நம் குலத்துக்கு நற்கீர்த்தியையும், புகழையும் பெருமையையும் தரட்டும்,'' என்றான் இளங்குமரன்.
- தொடரும்...