
மதுரை, சவுராஷ்டிரா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, ஆண்டு விழாவில், சித்துார் ராணி பத்மினி நாடகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 
அதற்கு பொறுப்பேற்றிருந்த துணை தலைமை ஆசிரியை மீனாட்சி, 'நீ தான் பத்மினியாக நடிக்கப் போகிறாய்...' என்றார். மிகவும் பரவசமடைந்தேன். கால் தரையில் படவில்லை. வசனத்தை மனப்பாடம் செய்தேன்.  
விழா நடந்த சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி வளாகத்தில் நாடகம் துவங்கியது. முதலில், ராணி பத்மினி கண்ணாடியில் தோன்றும் காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், 'யாரு பத்மினியா நடிக்கிறா...' எனக்கேட்டு மேடையருகே வந்து விட்டனர். 
சிறப்பாக நடித்து முதல் பரிசை பெற்று மகிழ்ந்தேன். 
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மதுரையில் கடைத்தெருவுக்கு போயிருந்தேன். அங்கு, 'நீங்க சவுராஷ்டிரா பள்ளி ஆண்டு விழாவில் ராணி பத்மினியாக நடித்தவர் தானே...' என விசாரித்தார், ஒரு பெண்.
அரை நுாற்றாண்டு கடந்தும் அறியப்படுகிறேன் என்ற உணர்வு பெருமிதம் தந்தது.
என் வயது, 72; கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இந்த பணிக்கு அஸ்திவாரமிட்ட நல்லாசிரியர்கள் பாதம் பணிகிறேன்.
- மீனாட்சி பட்டாபிராமன், மதுரை.
தொடர்புக்கு: 94430 37049

