
முன்கதை: தாயை இழந்த சின்ரல்லா, சித்திக் கொடுமையால் அவதிப்பட்டாள். உண்ண உணவின்றி, படுக்க இடம் இன்றி தவித்தாள். இனி -
அழுதபடி தோட்டத்தின், ஒரு மூலையில் படுத்திருந்தாள் சின்ரல்லா. காலில் சூடு பட்டிருந்ததால் வேதனை அதிகமாக இருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பசியால் தளர்ச்சி ஏற்பட்டது. 
கடும் குளிர், காய்ச்சலை கொண்டு வந்தது. மிகவும் வேதனையில் தாங்க முடியாமல் தவித்தாள்.
திடீரென்று -
வானத்தில் பிரகாசமாக ஒளி தெரிந்தது; அது மெல்ல தரையை நோக்கி இறங்கியது. இதைக் கண்டு, 'விண்கல் எரிந்து விழுகிறது' என நினைத்தாள் சின்ரல்லா. 
ஆனால், அந்த ஒளி, நேராக சின்ரல்லா படுத்து இருந்த தோட்டத்தில் இறங்கியது. இதைக் கண்டதும் பெரும் ஆச்சரியம் அடைந்தாள். அமைதியாக, அந்த ஒளியை பார்த்தபடி இருந்தாள்.
சுழன்ற ஒளி, அழகிய இளம் பெண்ணாக மாறியது; அப்படி ஓர் அழகியை எங்கும் பார்த்ததில்லை. அந்த பெண்ணின் முதுகு பகுதியில் வெள்ளை நிற இறக்கைகள் முளைத்து இருந்தன. தேவதையாக இருக்கலாம் என நினைத்தாள் சின்ரல்லா.
தங்கத்தாலான உடை உடுத்தி இருந்தது தேவதை; மிகவும் அமைதியாக காணப்பட்டது. கண்கள், நட்சத்திரம் போல மின்னின. முகம், பவுர்ணமி நிலா போல இருந்தது. சுற்றி, பிரகாசமான ஒளி வட்டம் காணப்பட்டது.
தோட்டத்தில் இறங்கியதும், சின்ரல்லாவை நெருங்கி வந்தது தேவதை. 
பயத்துடன் எழுந்த சின்ரல்லாவின் கைகளை ஆதரவாகப் பற்றி, 'அழாதே...' என்றது தேவதை.
அந்த அன்பானக் கூற்று தைரியம் தந்தது. 
கண்களை துடைத்துக் கொண்டாள்.
'ஏன் அழுகிறாய்...' அன்பொழுக கேட்டது தேவதை.
காலில் இருந்த புண் மேலும் வலிக்கவே, பதில் சொல்ல முடியாமல் தேம்பி அழுதாள்.
'உன் குறைகளை கூறு...' என்றது தேவதை.
சித்தி செய்யும் கொடுமைகள் எல்லாம் நினைவிற்கு வந்தன; எனவே, மேலும் தேம்பி தேம்பி அழுதாள்.
தேற்ற முயன்றது தேவதை. அழுகைக் குறையவே இல்லை. 
உடனே, அந்த தோட்டத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்தது தேவதை. 
மரங்களில், நட்சத்திரங்களை தொங்க விட்டது. 
தோட்டம் முழுவதும், வண்ண மலர்கள் பூத்து குலுங்கின.
சின்ரல்லாவின் கண்கள் வியப்பால் விரிந்தன. 
நடப்பது நிஜமா என நம்ப முடியவில்லை.
இரு கைகளையும் நீட்டியது தேவதை.
அதில் பெரிய தங்கத் தட்டு வந்தது; வகை வகையான உணவுகள் அதில் இருந்தன. அவற்றை ஆர்வமுடன் பார்த்தாள் சின்ரல்லா. 
அவற்றை ஊட்டி விட்டது; மிகவும் ஆர்வமாக சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்த பின் திடுக்கிட்டாள். 
ஆமாம்... அவள் போட்டிருந்த கிழிந்த சட்டை, பாவாடை எங்கே... 
இந்த தங்க நுால் ஜரிகை போட்ட சட்டை, பாவாடையை அவளுக்கு அணிவித்தது யார்... 
இந்த கேள்விகள் எழுந்தன.
சுற்றிலும் பார்த்தாள். கைகளில், அழகிய வளையல்கள், கழுத்தில் வைர நெக்லஸ், காதில் வைர தோடுகள் எல்லாம் ஜொலித்தன.
தங்க ஆடையில் கோர்க்கப்பட்ட வைரங்கள் தொங்கின.
மகிழ்ச்சியில் திக்கு முக்காடினாள் சின்ரல்லா.
அவளுக்கு சித்தியின் நினைவு வந்தது. இந்த மாதிரி அலங்காரத்தில் பார்த்தால் கொன்று விடுவாளே என பயந்தபடி, 'அன்பான தேவதையே... என் பழைய, கிழிந்த உடைகளையே தந்து விடு. தோட்டத்தையும் பழையபடி மாற்றி விடு...' என கெஞ்சினாள்.
உடனே தேவதை, 'பயப்படாதே... உன் சித்தியும், அவள் மகளும் கெட்ட குணம் உடையவர்கள். அவர்களின் கண்களுக்கு இவை எதுவுமே தெரியாது. இது கடவுளின் பரிசு. உன் துன்பங்களை தினமும் வானிலிருந்து பார்க்கிறோம்... 
'இரக்கத்துடன் சந்தோஷப் படுத்துகிறோம்... இந்த தோட்டம் எப்போதும் இப்படியே இருக்கும். நீயும் பணக்காரப் பெண் போலவே இருப்பாய்; தினமும், உனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். இவை, மற்றவர் கண்களுக்கு தெரியாது...' என்றது.
அழகிய தங்கச் செருப்புகளை, மந்திர சக்தியால் வரவழைத்து, 'சின்ரல்லா... இவற்றை அணிந்ததும் எங்கும் செல்லலாம். வானில் பறந்து இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்...' என கூறி, மறைந்தது தேவதை. 
கைகளில் இருந்த செருப்பை தரையில் வைத்தாள். கால்களில் அணிந்து பார்த்தாள். அடடே... சொல்லி வைத்த மாதிரி அளவாக இருந்தது செருப்பு.
பின், 'மெல்ல இந்த ஊர் முழுவதையும் ஒருமுறை சுற்றிப் பார்க்க வேண்டும்' என, ஆசைப்பட்டாள். உடனே, சிறு பறவை போல வானில் பறக்க துவங்கினாள்.  
ஊர் முழுவதையும் பார்க்க முடிந்தது.
வானிலேயே வட்டமடித்தபடி இருந்தாள். 
இதுவரை பார்க்காத, அழகான இடங்கள் எல்லாம் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்து, மெய்மறந்த சின்ரல்லாவிற்கு, சித்தியின்  நினைவு வந்தது. 
தோட்டத்தில் தேடினால் என்னவாகும்... இறங்கும் போது அடித்து நொறுக்கி விடுவாரோ என பயந்தாள்.
அவசர அவசரமாக இறங்கினாள். அவளது வலது கால் தங்கச் செருப்பு கழன்று, எங்கேயோ விழுந்துவிட்டது.
ஒற்றை கால் செருப்பு தொலைந்ததும், தோட்டத்தில் விழுந்தாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. விருந்தினர்களுடன் சித்தியும், தங்கை ஜெசிந்தாவும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், விபரீதம்... தேவதை தந்த விளக்குகளை தோட்டத்தில் காணவில்லை.  வைரச் சரங்களையும் காணாமல் திடுக்கிட்டாள்.
அணிந்திருந்த தங்க உடை, வைர நகைகளையும் கூட காணவில்லை.
இடது காலில்  ஒரே தங்கச் செருப்பு மட்டும் மீதமாக இருந்தது.
யோசித்த சின்ரல்லாவிற்கு உண்மை புரிந்தது. 
வலது கால் தங்க செருப்பை தொலைத்து விட்டதால், தேவதைக்கு கோபம் வந்து விட்டது. எனவே அனைத்தையும் பறித்துக் கொண்டது. 
அதிர்ஷ்டம் இல்லையே என வருந்தினாள்.
பின், இடது கால் தங்கச் செருப்பை தோட்டத்து புதரில் மறைத்து வைத்தாள். 
தேவதை தந்த அற்புதமான அனுபவத்தை எண்ணியபடி துாங்கினாள் சின்ரல்லா.
- தொடரும்...

