PUBLISHED ON : ஆக 24, 2018

என் வயது, 65; பள்ளியில், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது! அன்று தான் பள்ளியின் முதல் நாள்! மாணவர்களின் பெயரை கேட்டார் கணக்கு ஆசிரியர்.
வரிசையாக எழுந்து, சொல்லிக் கொண்டிருந்தோம். என் அருகே இருந்த மாணவன், பெயரை சொல்லி அமர்ந்ததும், 'பேரு என்னன்னு சொன்ன...' என ஆசிரியர் திரும்ப கேட்டார். அவன், 'சங்கிலி...' என்றான்.
'பேரு நல்லாவே இல்லப்பா... 15 ரூபாய் செலவை பாக்காம, 'கெஜட்டில்' பெயரை மாத்திக்கோ...' என்றதும், அவன் தலைகுனிந்தான்.
நான்கு மாதங்களுக்குப் பின்-
ஒரு நாள் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த கணக்கு ஆசிரியர், 'சங்கிலி... உனக்கு, ஒன்பதாம் வாய்ப்பாடு தெரியுமா...' என்று கேட்டார், 'சார்... இனிமே, சங்கிலின்னு கூப்பிடாதீங்க; இப்போ என் பெயர் சரவணன், 'கெஜட்'டில் மாத்திட்டேன்' என்றான்.
'அப்படியா ரொம்ப சந்தோஷம்...' என்ற ஆசிரியரிடம், 'நீங்க சொன்னபடி, பெயரை மாத்திக்கிட்டேன். நீங்க எப்போ சார், உங்க பெயரை மாத்திக்கப் போறீங்க...' என்று திருப்பிக் கேட்டதும், ஆசிரியர் திகைத்து நின்றார். பொங்கி வந்த சிரிப்பை, நாங்கள் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டோம். அந்த ஆசிரியர் பெயர், சுடலையாண்டி!
- கு.கணேசன், காஞ்சிபுரம்.
