தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெண்ணே... பூச்செண்டு தா! (1)

பெண்ணே... பூச்செண்டு தா! (1)

பெண்ணே... பூச்செண்டு தா! (1)


PUBLISHED ON : ஆக 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாகினிபுரம் என்ற நாட்டை, மன்னன் வசீகரன் ஆண்டு வந்தான். அவனுக்கு, ஒரு மகன்; பெயர், மோகனன். அந்நாட்டு மந்திரி மகன் பெயர், தந்திரலோலன். அரச குமாரனும், மந்திரி குமாரனும் இணைபிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் -

இருவரும் காட்டுக்கு, வேட்டையாட சென்றனர்; வெகுதுாரம் சென்று வேட்டையாடியதால், களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தடியில் இளைப்பாறினர்.

சிறிது நேரத்தில், அரசகுமாரன் துாங்க ஆரம்பித்தான்; மந்திரி குமாரனுக்கு, துாக்கம் வரவில்லை.

சற்று துாரம் நடந்தான். காட்டின் நடுவே, ஒரு கோவில் தெரிந்தது; அங்கு சென்றான்.

கோவிலை சுற்றி வந்த போது, வடக்குப் பிரகாரத்தில், கையில் பூச்செண்டுடன், அழகிய பெண் வடிவ சிலை இருந்தது. அது உயிருடன் நிற்பது போலவே இருந்தது. அதை செதுக்கிய சிற்பியின் திறமையை வியந்தவாறே, மந்திரி குமாரன் திரும்பி வந்தான்.

அப்போது தான், துாக்கம் கலைந்து எழுந்த அரசகுமாரன், ''எங்கே சென்றிருந்தாய்...'' என்று கேட்டான்.

''பொழுது போகவில்லை. சிறிது துாரம் காட்டுக்குள் சென்று வந்தேன்...''

''அங்கு ஏதாவது பார்த்தாயா...''

''காட்டின் நடுவே, ஒரு கோவில் இருக்கிறது; அதை பார்த்தேன்...''

''அப்படியா... நடுக்காட்டில் கோவில் இருக்கிறதா... நிச்சயம் அதை பார்க்க வேண்டும்...'' என்று கூறி, கிளம்பி விட்டான், அரசகுமாரன்.

''கோவிலுக்குள் வடக்குப் பிரகாரத்துக்கு மட்டும் போகாதே... மீதி இடங்களைப் பார்...''

'வடக்குப் பிரகாரத்துக்கு போக வேண்டாமென்று, மந்திரிகுமாரன் சொன்னதன் காரணம் என்ன' என்று யோசித்தபடியே புறப்பட்ட அரசகுமாரன், கோயிலில், மூன்று பிரகாரங்களையும் சுற்றி வந்தான்; நான்காவதாக, வடக்குப் பிரகாரம் ஒன்று தான் பாக்கி.

'அப்படி என்ன தான், இருக்கிறது பார்த்து விடுவோமே...' என்று, வடக்குப் பிரகாரத்திற்குள் நுழைந்தான். அங்கிருந்த சிலை, உயிருடன் ஒரு பெண் நிற்பது போலவே காட்சியளித்தது; அம்மாதிரி அழகிய பெண்ணை இதுவரை அவன் பார்த்ததில்லை.

'இவளைத் தான், திருமணம் செய்ய வேண்டும்' என்று நினைத்தவாறே, 'பெண்ணே... உன் பூச்செண்டை தா...' என்று கேட்டான்.

சிலை பேசாமல் இருக்கவே, பைத்தியக்காரனைப் போல, பிதற்றிக் கொண்டு அங்கேயே நின்றான்.

நெடுநேரமாகியும், அவன் திரும்பாததால், தேடிச் சென்றான், மந்திரிகுமாரன்.

அரசகுமாரன் பிதற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான்.

'அது உயிருள்ள பெண் அல்ல, சிலை தான்...' என்று எடுத்து கூறியும், அரச குமாரன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவனுக்குப் பைத்தியம் பிடித்ததை அறிந்த, மந்திரி குமாரன், 'தெளிய வைக்க, சிலையின் தோற்றத்தில் உள்ள பெண், நேரில் வந்து, பூச்செண்டு கொடுக்க வேண்டும்' என்பதை தெரிந்து கொண்டான்.

அப்போது, கோவில் அர்ச்சகர் அங்கு வந்தார். அவரிடம், ''ஐயா... இவன் என் நண்பன்; இச்சிலையைப் பார்த்து, மயங்கி பித்தாக இருக்கிறான்... இச்சிலை வடிக்க காரணமாக இருந்த பெண்ணை, கண்டு பிடிக்க வேண்டும்; சிலை செய்த சிற்பியைக் கண்டுபிடித்தால் தகவல் தெரியும். அவர் இருப்பிடம் தெரியுமா...'' என்று கேட்டான் மந்திரிகுமாரன்.

''இங்கிருந்து, 10 கி.மீ., துாரத்தில், கூடல்புரம் என்ற ஊர் இருக்கிறது. அங்கு, ஒரு சிற்பி இருக்கிறார்; அவர் பெயர், சாம்பசிவம்; அவர் தான், இந்த சிலையை செதுக்கியவர். ஆண்டிற்கு ஒருமுறை, கோவிலுக்கு வந்து அபிஷேகம், செய்து விட்டு போவார்...'' என்றார்.

''ஐயா... அந்த சிற்பியிடம் கேட்டு, சிலை வடிவில் உள்ள பெண்ணை அழைத்து வரும் வரை, என் நண்பனை கவனித்துக் கொள்ளுங்கள்...'' என்று கூறிய மந்திரிகுமாரன், கழுத்தில் அணிந்திருந்த விலை உயர்ந்த முத்து மாலையை, அவரிடம் கொடுத்தான்.

அர்ச்சகரிடம் விடைபெற்று, குதிரையில், கூடல்புரம் சென்று, சிற்பியை சந்தித்தான்.

''ஐயா... காட்டுக் கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சிலையை, நீங்கள் தான் செதுக்கினீரா...'' என்று கேட்டான், மந்திரிகுமாரன்.

''ஆமாம்... என்ன விஷயம்...''

''ஐயா... என் நண்பன் அந்த சிலையின் அழகில், மயங்கி பித்தாகி விட்டான். அவன் பைத்தியம் தெளிய, அந்தப் பெண்ணை, நேரில் அவன் காண வேண்டும். எந்த பெண்ணை பார்த்து, அந்த சிலையை செதுக்கினீர்...'' என்றான், மந்திரி குமாரன்; இதை கேட்டதும், சிற்பியின் மனம் இளகியது.

-- தொடரும்...

நன்றி: கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us