
அந்த கிழவி, பார்க்க மிகவும் பயங்கரமாக இருந்தாள். கையில் ஒரு தங்கக் கிண்ணம் இருந்தது. அதில், சிறிது தேன் போன்ற ஒன்று இருந்தது.
''மகனே! எங்கு செல்கிறாய்? இது மிகவும் பயங்கரமான காட்டுப் பகுதியாகும். பழக்கம் இல்லாதவர்கள் இங்கு இறப்பது உறுதி. உனக்கு நான் வழிகாட்டட்டுமா?'' என்று வினவினாள்.
''வேண்டாம் பாட்டி! உங்கள் அன்புக்கு நன்றி. நான் அவசரமாகச் செல்ல வேண்டும்,'' என்றான்.
''நீ இறந்துபோன என் மகனைப் போன்று இருக்கிறாய். ஒருவேளையாவது என் கையால் சமைத்த உணவை உண்ண வேண்டும். உனக்கு இக்காட்டின் நிலைமையை சொல்கிறேன்,'' என்று கூறினாள்.
அவளைப் பார்த்தாலே பயங்கரமாக இருந்ததால், தன்னை ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது மீண்டும் நீரில் தன் உருவத்தைப் பார்த்தான். சிங்கம் போலத் தெரிந்தது. பிறகு சரி, சென்றுதான் பார்ப்போமே. அங்கு, பூனையின் கதை தெரியவந்தாலும் வரும் என்று எண்ணிச் சம்மதித்தான்.
அக்கிழவி உடனே, தன் கையிலிருந்த கிண்ணத்திலிருந்து ஒரு சொட்டு தேனை, நீரில் விட்டாள். உடனே அவ்விடத்தில் ஒரு கதவு தோன்றியது.
அதனைத் திறந்து அவள் உள்ளே செல்ல, இளவரசனும் பிரமிப்புடன் உள்ளே சென்றான். அவன் சென்றவுடன் கதவு மூடியது. அங்கே ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு பெரிய மாளிகை இருந்தது. சுற்றிலும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.
ஒரு விதமான மணம் எங்கும் பரவியிருந்தது. பிறகே இவன் உணர்ந்து செயல்பாட்டினைக் கவனித்தான். கிழவியைக் காணவில்லை. இது ஒரு மாயமாளிகை என்று அவன் நன்கு உணர்ந்தான். தாதிகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. அருகே சென்று பார்த்தபொழுது திகைத்தான் சந்திரசேனன்.
ஆம்! அது அவன் படமே. இது எவ்வாறு சாத்தியம் என்று யோசித்தான். அப்போது, அங்கு வந்த ஒரு பணிப்பெண்ணிடம் இதுபற்றி கேட்டான்.
''இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதோ அந்த அறையில் இருக்கும் ஒரு அன்னப்பறவை உங்கள் சந்தேகத்துக்கு விடையளிக்கலாம்,'' என்றாள்.
அந்த அறையை நோக்கி சென்றான் சந்திரசேனன்.
அங்கு, அழகான ஒரு அன்னப்பறவை பஞ்சு மெத்தையில் துயில் கொண்டிருந்தது. அதனருகே சென்று, அதனை மென்மையாகத் தடவிக்கொடுத்தான் சந்திரசேனன். திடீரென்று விழித்த அன்னம், அழகான இளவரசனைக் கண்டதும் திகைத்தது.
''நீ உயிரோடு இருக்கிறாயா நண்பனே?'' என்று கேட்டது.
ஏற்கெனவே, குழம்பியிருந்த சந்திரசேனன் மேலும், குழப்பமடைந்தான்.
அவன் குழப்பமாக இருப்பதைக் கண்டதும், அன்னம் சுதாரித்துக் கொண்டது.
''என்னை மன்னியுங்கள். என் நண்பனோ என்று எண்ணி விட்டேன்,'' என்றது.
''வெளியில் என்னுடைய படம் மாட்டி இருப்பதைக் கண்டேன். அதன் விளக்கத்தைத் தரவேண்டும் பறவையே! மேலும், என்னுடன் வந்த பாட்டியையும் காணவில்லை. அவர்களும், இறந்த அவர்களுடைய மகனைப் போன்று நான் இருப்பதாக சொன்னார்கள். மேலும், இது மாயமாளிகை போன்றல்லவா இருக்கிறது?'' என்றான்.
''நான் சொல்கிறேன். ஆனால் நடுவே, நீ உறங்கினாலோ, பசி எடுக்கிறது, தாகம் எடுக்கிறது என்று உரைத்தாலோ, நான் உனக்கு மேலும், கதையைக் கூறமாட்டேன். அதோடு, நீ யாரென்பதையும் மறந்து இங்கேயே அலையவேண்டியதுதான்,'' என்று கூறியது.
தன் மனைவியாகிய பூனை கொடுத்த லட்டுவை உண்ண இதுவே நல்ல தருணம் என்றெண்ணி, அதை உண்டான். பிறகு அன்னப்பறவை கூறத் தொடங்கியது.
''சில வருடங்களுக்கு முன்பு, நான் ஒரு ராஜகுமாரனாக இருந்தேன். என் பெயர் சுந்தரராஜன். என் தந்தை மகத நாட்டின் அரசர். அவரிடம் பணிபுரிந்த மந்திரியின் மகன் அபிமன்யு. என் நெருங்கிய தோழன். நாங்கள் சில வருடங்களுக்கு முன்புவரை ஒன்றாகவே எதையும் செய்வோம். எங்களைப் போலவே, எங்கள் தந்தையரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். எங்கள் நாட்டின் தளபதி, அரசன் மீது பொறாமை கொண்டு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினான்.
''இதையறிந்த மந்திரி அவரைக் காத்துத் தன் உயிரைக் கொடுத்தார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அவரது மனைவி, தன் உயிரைத் தியாகம் செய்ய முனைந்தாள். ஆனால், அபிமன்யு அவர்களைக் காத்தான். நாட்டை விட்டே செல்லலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். நானும் உடன் வருவதாய் கூறிச் சென்றேன்.
''பின்னர், ஒரு சூனியக்காரி எங்களைச் சிறை வைத்தாள். அவளிடமிருந்து தப்ப இயலாமல் அங்கேயே இருந்தோம். அவளின் உயிர் ஓர் இரும்புப் பெட்டியின் அடியில் இருந்த தங்கக் கிண்ணத்தில் இருந்ததை அபிமன்யு கண்டுபிடித்தான். பிறகு, ஒருநாள் இரவு யாருமறியாமல் அங்கு சென்று தங்கக்கிண்ணத்தில் இருந்த உயிர் இருக்கும் பேழையைத் திருடி வந்தோம்.
''பின்னர், அதனைத் தீயிலிட்டு எரித்தான் அபிமன்யு. மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த சூனியக்காரியும் துடிதுடித்து இறந்தாள். ஆனால், இறந்தவளின் தங்கை அபிமன்யுவைக் கொன்றுவிட்டாள். அந்த நிகழ்வைத் தடுக்கச் சென்ற என்னை, அன்னப்பறவையாக மாற்றிவிட்டாள்.
''இதனால், மனம் ஒடிந்த மந்திரியின் மனைவி, என்னை உருமாற்றும் முயற்சியில் இறங்கினாள். சூனியக்காரியின் மந்திர கூடம் சென்று அவள் மந்திர புத்தகத்தை எடுத்து, அவற்றில் எழுதியிருப்பதை நன்கு பயிற்சி எடுத்து ஒரு மந்திரக்காரியாகவே மாறினாள்.
''ஆனால், என் உருவம் மாறும் மந்திரம் மட்டும் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் நன்கு புலப்பட்டது. அதாவது அவள் மகன் அபிமன்யுவைப் போன்று ஒரு இளவரசன் வருவான். அவன் உருவம் நீரில் தெரியாது. வேறு பிராணிகளின் பிம்பமே தெரியும். அவ்வாறு வருபவனே இங்கு நடக்கும் குழப்பங்களுக்குத் தீர்வு தருவான்,'' என்று அன்னப்பறவை கூறிவிட்டு, சந்திரசேனனைப் பார்த்தது.
''நான் இப்போது என்ன செய்வது?'' என்று கேட்டான் சந்திரசேனன்.
''இம்மாளிகையின் மேற்குத் திசையின் பக்கம் சுரங்கப்பாதை இருக்கும். அதில் சென்றால் பறக்கும் குதிரை நீலவேணி இருக்கும். அதன் வலது காதைத் திருகினால், வானில் பறக்கும். இடது காதைத் திருகினால், தரையிறங்கும். நீ, இப்போது வைர குகைக்குச் சென்று, வைர அட்டிகையை எடுத்து வந்தால் தீர்வு கிடைக்கும்,'' என்று அன்னம் கூறியது.
இளவரசன் மிகுந்த குழப்பம் அடைந்தான்.
''இதை உங்களால் செய்ய இயலாதா?'' என்று கேட்டான் சந்திரசேனன்.
''அக்குதிரை அபிமன்யுவினுடையது. அது வேறு எவரையும் தன்னிடம் நெருங்க அனுமதிக்காது'' என்றது அன்னப்பறவை.
இளவரசன் இதற்கு உடன்பட்டாலும், பூனை சொல்லியனுப்பியதை யோசிக்கும் போது, 'ஒரு மாதத்திற்குள் அதன் கதையைத் தேடும் முயற்சியில் தோற்றால், மானாக உருமாறி அலைய வேண்டியிருக்குமே' என்று கவலையுற்றான்.
இம்மாளிகை உனக்கு அனைத்து ரகசியங்களையும் எடுத்துக்கூறும். அபிமன்யுவின் அம்மா உனக்கு வழிகாட்டுவாள். தயவு செய்து எனக்கு உதவி செய் நண்பனே!' என்று வேண்டியது அன்னப்பறவை.
சந்திரசேனனும், 'சரி!' என்று ஒப்புக்கொண்டு சுரங்கப்பாதைக்குச் சென்றான். இவனைக் கண்டதும் குதிரை நீலவேணி கனைத்தது. அதைக் கொண்டு, இதுவே, அபிமன்யு வளர்த்த குதிரை என்று உறுதிப்படுத்தியபடி, அதனருகே சென்றான்.
அதனைத் தடவிக் கொடுத்து அதன் மேல் ஏறி அமர்ந்தான். பின்னர் எவ்வாறு வெளியேறுவது என்று குழம்புகையில், நீலக்கல் ஞாபகம் வரவே, அதனைக் கையில் எடுக்க, அது அவனுக்கு பாதையை காட்டியது.
பின்னர், அது காட்டிய வழியிலேயே சென்றான். ஆச்சரியப்படும் அளவில் அழகிய ஒரு நகரம் தென்பட்டது. அம்மாய மாளிகையிலிருந்து எவ்வாறு வெளியேறினோம் என்றே தெரியாமல் திகைத்தான்.
- தொடரும்...

