sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சந்திரசேனன்! (3)

/

சந்திரசேனன்! (3)

சந்திரசேனன்! (3)

சந்திரசேனன்! (3)


PUBLISHED ON : ஜூலை 08, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறிது தூரம் சென்ற பின், அழகியகுளம் தென்பட்டது. அக்குளத்தின் அருகில் காவலுக்குப் பெண்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களிடம் இந்நகரைப் பற்றி அறியலாம் என்று அருகே சென்று விசாரித்தான். ஆனால், அப்பெண்களோ பதில் கூற மறுத்து, அவனை அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்.

அரண்மனையில் எங்கும் பெண்களே இருந்தனர். அந்நாட்டின் அரசியின் முன் அவன் நிறுத்தப்பட்டான்.

அரசி அவனிடம், ''யார் நீ? இங்கு வருபவர்களுக்கு மரண தண்டனை உண்டு!'' என்று கூறினாள்.

''என்னை மன்னியுங்கள் அரசியே! நான் வைர குகையைத் தேடி வந்தேன். அதன் இருப்பிடம் அறியவே தங்கள் நாட்டு நிலவரம் அறிய முற்பட்டேன். இங்கிருக்கும் சட்ட திட்டங்களைப் பற்றி நான் அறியேன். தாங்கள் தயவு செய்து என்னை விடுவித்து எனக்கு நல்வாழ்வு கொடுங்கள்,'' என்று கெஞ்சினான்.

''வைர குகைக்குள் சென்றால் உன்னால் உயிருடன் வர இயலாது. அங்கு வாழும் நாகராஜன் தக் ஷகன் உன்னைக் கொன்று விடுவான். எனக்கும் அக்குகையில் இருக்கும் வைர மோதிரம் தேவைப்படுகிறது. நான்

தக் ஷகனுக்குப் பயந்தே அங்கு செல்லவில்லை. நீ இங்கிருந்து தப்பிவிடு.

''பொதுவாக, இந்நகரில் ஆண்களே வாழ அனுமதி இல்லை. நீ தெரியாமல் வந்ததால் உன்னை உயிருடன் விடுகிறேன். இங்கிருந்து சென்றுவிடு,'' என்று கூறினாள்.

இளவரசனோ, 'தாம் மந்திரக்குதிரையில் வந்ததனால், எத்தீங்கும் தம்மை நெருங்காது' என்றான்.

அவனது வீரத்தைக் கண்ட அரசி, ''உன்னால் முடியும் என்று நீ நம்பினால், தாராளமாய் சென்று வா. ஆனால், இரவுப் பொழுதை அங்கு செலவிடலாம் என்று தங்கிவிடாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். இரவில், நாகங்களின் பலம் அதிகரிக்கும்.

''அதன் மந்திரசக்தி குகையைச் சுற்றி ஒரு வளையத்தை உண்டாக்கிவிடும். இதனால் உன்னிடம் இருக்கும் சக்தியும் போய்விடும். ஆகையால், நீ இரவுக்குள் திரும்ப வேண்டும். இதோ... இந்த வாளை வைத்துக் கொள். ஏதேனும் ஆபத்து வந்தால், இந்த வாளைத் தரையில் குத்தினால், எங்கள் பெண்கள் படை உன் உதவிக்கு வரும்,'' என்று கூறி வாளைத் தந்தாள்.

பளபளக்கும் நிறத்தை உடையதாய் அந்த வாளின் உறை இருந்தது. வைர குகைக்குச் செல்லும் வழியை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டான் சந்திரசேனன். மந்திரக்குதிரையின் வலது காதைத்திருகினான். உடனே அது பறக்க ஆரம்பித்தது. வழியெங்கும் அழகிய காட்சிகள் தென்பட்டன. ஆங்காங்கே பயண களைப்பை நீக்குவதற்கு ஓய்வெடுத்துச் சென்றான்.

இதற்கிடையில், இவனைக் காணாது அரண்மனையில் அனைவரும் தவிப்பில் ஆழ்ந்தனர்.

''என் புதல்வன் காணாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்,'' என்று அரசனிடம் கூறி அழுதாள் மகாராணி மேனகா.

இதையறிந்த பூனை, 'இப்போது நாம் சென்று அனைத்தையும் கூறினால், நாம் பேசுவதைக் கண்டு அவர்கள் குழப்பம் அடைந்து, தவறு என் மீதுதான் என்று தவறாக எண்ணி விடுவரே' என்று வருத்தம் கொண்டது.

சிறிது யோசனைக்குப் பிறகு, அது சந்திர சேனன் எழுதியது போலவே ஒரு கடிதம் எழுதி, அதை அரசனின் அறையில் வைத்துவிடலாம் என்று தீர்மானித்தது.

அதுபோலவே, 'அரசே! நான் ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்றுள்ளேன். வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம். ஆகையால், நீங்கள் கவலை கொள்ளாதீர்' என்று எழுதி அரசனின் அறையில் வைத்தது.

பூனை எதிர்பார்த்ததைப் போலவே, அரசன் அதைப் படித்துவிட்டு நிம்மதியடைந்தான்.

சந்திரசேனன், வெகு தொலைவு சென்றபின், வைர குகையை அடைந்தான். காண்பதற்கே இயலாத பிரகாசமாக அக்குகை விளங்கியது.

அதன் முகப்பில், தக் ஷகனின் காவலாளிகளான இரு நாகங்கள் இருந்தன. அவற்றின் கவனத்தை திசை திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்த சந்திரசேனனுக்கு ஒரு வழி தோன்றியது. நீலவேணியை வானில் பறக்கச் செய்தான்.

விசித்திர நிகழ்வைக் கண்ட இரு நாகங் களும் வானத்தை நோக்கியபடியே இருந்தன. இதற்கிடையில் சந்திரசேனன் குகைக்குள் நுழைந்தான்.

குகை முழுவதும் ஒளிமயமாய்த் திகழ்ந்தது. எங்கும் வைரங்களே இருந்தன. அங்கே அரியணை ஒன்றும் இருந்தன. அதன் அருகில் ஒரு கண்ணாடிப் பேழை இருந்தது. அதனுள் வைர அட்டிகையும், வைர மோதிரமும் இருக்கலாம் என்று எண்ணி அருகில் சென்றான்.

அப்போது, அங்கு பலத்த சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினான் இளவரசன்.

அங்கு தக் ஷகன் பெரிய உருவில் பயமுறுத்தும் சீற்றத்துடன் அனல் கக்கும் விழிகளுடன் அவனை நெருங்கியது. இதைக் கண்ட சந்திரசேனன் திடுக்கிட்டாலும், சுதாரித்துக் கொண்டான். தன்னுடைய வாளை எடுத்து போர் புரியத் தயாரானான். அவ்வேளையில் மேலும், பல நாகங்கள் அவனைச் சூழ்ந்தன.

சில மணிநேரம் அவற்றுடன் போரிட்டான். இயன்றவரை பல நாகங்களைக் கொன்றிருந்தான். இன்னும் சிலவே மீதமிருந்தன. ஆனால், களைப்படைந்ததால், அவனால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. அவனுக்கு அரசி உதவுவதாகக் கூறியது நினைவுக்கு வந்தது.

உடனே, அரசி கொடுத்த வாளை எடுத்து தரையில் குத்தினான். அங்கு பெரும் புகை சூழ்ந்தது. அதற்குள்ளிருந்து பல பெண் வீராங்கனைகள் தோன்றினர். இளவரசனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு போர் புரிந்தனர். இதில் மீதமிருந்த நாகங்களும் பலியாகின. ஆனால், தக் ஷகனைக் கொல்ல இயலவில்லை.

அப்போது, அங்கிருந்த அரியணை மீது பதித்த ரத்தினக்கல் திடீரென்று மின்னத் துவங்கியது.

இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும் என்று இளவரசன் எண்ணினான். தக் ஷகன் காணாத வேளையில் அதனருகே சென்றான்.

அங்கு ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அது அரியணையின் அருகில் வரும்போது ரத்தினக் கல் மின்னியது. பின்னர், சாதாரணமாகக் காட்சியளித்தது. அச்சமயம் மற்றொரு நிகழ்வையும் அங்கு கண்டான்.

அதாவது, ரத்தினக் கல் மிளிரும் போது தக் ஷகனின் உயிருடன் தொடர்பு கொண்டுள் ளது என்பதை அறிந்த பின், அக்கல்லை அழித்தால் அவன் அழிந்து போக வாய்ப்பிருக்கலாம் என்று உணர்ந்தான் இளவரசன்.

பெண்கள் படை தக் ஷகனுடன் போர் புரிய, இவன் அந்தக் கல்லின் அருகே சென்றான். அது திடீரென மிளிரத் துவங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லினை அரியணையிலிருந்து பிடுங்கி, அதைத் தரையில் போட்டு மிதித்துத் தவிடு பொடியாக்கினான்.

தக் ஷகன் பயங்கரமாக ஓலமிட்டு மடிந்தான். அவன் மடிந்த காரணமறியாத அப்பெண்கள், ''இம்மாயம் எவ்வாறு நிகழ்ந்தது?'' என்று அவனிடம் வினவினர்.

நடந்தவற்றையெல்லாம் கூறி, ''நாம் உடனே இங்கிருந்து சென்றுவிடலாம். நமக்கு நேரம் மிகக் குறைவாகவே உள்ளது,'' என்று கூறினான் இளவரசன்.

உடனே வைர அட்டிகையையும், வைர மோதிரத்தையும் எடுத்தபடி அங்கிருந்து அனைவரும் வெளியேறினர்.

அப்போது, தான் செய்த ஒரு பெரிய தவறை உணர்ந்தான் இளவரசன்.

- தொடரும்...






      Dinamalar
      Follow us