
எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். சி.எஸ்.ஐ., தனியார் ஆரம்பப் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் போது, தோட்ட வேலை பாடப்பிரிவில் ஆசிரியர் பள்ளி காம்பவுண்டிலுள்ள கரிசல் மண் தரையில் சீனிக்கொடி (சர்க்கரை வள்ளி கிழங்கு) ஊன்ற நிலத்தை பக்குவப்படுத்தினார். மாணவர்களாகிய நாங்களும் உற்சாகமாக வேலை செய்தோம்.
அடிஉரம் போடுவதற்கு, இயற்கை உரம் போட வேண்டும். எனவே, மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பன்னி விட்டை (பன்றி மலம்) பள்ளிக்கு கொண்டுவர நாள் குறிப்பிட்டார். அந்தப்பகுதிகளில் பன்றி நடமாட்டம் குறைவு. புறம்போக்கு இடங்கள் எங்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. நண்பர்கள் எல்லாரும் பன்னி விட்டை எடுத்து வைத்திருந்தனர். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே, தனியாக சென்று கழுதை போடும் விட்டை களை சேகரித்து பன்றி விட்டைபோல் உருமாற்றம் செய்து, என் பெயரையும் பேப்பரில் எழுதி வைத்தேன்.
பேப்பரை திறந்த ஆசிரியர் என்னை குறுகுறு கண்களால் கோபப்பார்வை பார்த்தார். 'நான் பன்னி விட்டைதான்' என்றேன். சகமாணவர்கள் அனைவரும் என்னைப் பார்த்து, 'கொல்லென்று' சிரித்தனர். நான் பொய் சொன்னதற்கும், உருமாற்றம் செய்தமைக்கும் சேர்த்து எனக்கு பிரம்படி கொடுத்தார். அந்த ஆசிரியரை, 'ஹிட்லர் மீசை வாத்தியார்' என்று கூறுவோம். அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
- ஜி.சங்கரநாராயணன், மதுரை.

