sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சந்திரசேனன்! (4)

/

சந்திரசேனன்! (4)

சந்திரசேனன்! (4)

சந்திரசேனன்! (4)


PUBLISHED ON : ஜூலை 15, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலவேணியின் வலது காதைத் திருகி, காவல் நாகங்களுக்குப் போக்குக் காட்டிய அவன், மீண்டும் இடது காதைத் திருகினால்தான் அது தரையிறங்கும் என்பதை மறந்தான். எவ்வளவோ முயன்றும் நீலவேணி தரையிறங்கவில்லை. அப்போது, வேறு சில நாகங்களும் அங்கு வந்தன.

இரவுப்பொழுது வேறு நெருங்கிவிட்டது. அரசியின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொண்டான் இளவரசன்.

''இளவரசே! இங்கிருந்து முதலில் செல்வோம். பின் மற்றவைகளைப் பார்க்கலாம்,'' என்று கூறிய பெண்கள் அவனை அழைத்துச் சென்றனர்.

வைர மோதிரத்தைக் கண்டதும், ''பலே! நீ மிகவும் அறிவாளியாக இருக்கிறாய். இந்த உண்மையை நான் இதுவரையிலும் அறியவில்லை!'' என்று உரைத்தாள் அரசி.

''தங்கள் தயவு எனக்கு இல்லையெனில், நான் இதைச் சாதிக்க இயலாமல் போயிருப்பேன். என்னுடைய மந்திரக்குதிரையை மீட்க வழி சொல்வீர்களானால், நான் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்,'' என்றான் சந்திரசேனன்.

வைர மோதிரத்தை தன் வலது கையில் ஏந்தி, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தாள் அரசி.

உடனே, அங்கு மந்திர குதிரை வந்துவிட்டது.

''நான் இம்மோதிரத்தை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப் போகிறேன். இங்கு ஆண்கள் வசிக்க அனுமதி கிடையாது. அது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட சாபம். இங்குள்ள பெண்கள் எவரேனும் இறந்தால், மக்கள்தொகை குறைந்துவிடும். மரணத்தை வெல்ல இயலாது.

''ஆனால், ஜனனத்தை உருவாக்க இயலும். இம்மோதிரத்தின் சக்தியால் பெண் குழந்தை பிறக்கும். அது கடவுளின் வரமாக ஏற்கப்பட்டு, இங்கு வளர்க்கப்படும். இந்த நாட்டைப் பற்றி நீ எவரிடமும் கூறக்கூடாது. அவ்வாறு கூறினால், உன் தலைவெடித்து இறந்து விடுவாய். ஆனால், உனக்கு உதவி தேவைப்பட்டால், நான் தந்த வாளை உபயோகித்துக்கொள். உனக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,'' என்றாள் அரசி.

''மிக்க நன்றி அரசியே! நான் சென்று வருகிறேன். அவ்வப்போது தங்களுக்குத் தேவையானவற்றை நான் பூர்த்தி செய்கிறேன். என்னுடைய குதிரையை இந்நாட்டின் எல்லைவரைக்கும் ஓட்டி வந்து, அங்கு தமக்கு வேண்டும் பணி எதுவாயினும் நிறைவு செய்து செல்வேன். யாரிடமும் இதுபற்றிக் கூறமாட்டேன். நான் செல்வதற்கு அனுமதியுங்கள்,'' என்று வேண்டினான் இளவரசன்.

''நீ சென்று வா. உனக்கு மட்டும் இந்நாட்டில் விசேஷ அனுமதி உண்டு. நீ தாராளமாக இங்கு வரலாம்,'' என்று வாழ்த்தி அனுப்பினாள் அரசி.

பறக்கும் குதிரையில் நீலக்கல் உதவியுடன், மாயமாளிகைக்கு வந்தான் சந்திரசேனன். நடந்தவை கனவு போலத் தோன்றியது. அன்னப்பறவை இருக்கும் அறையைத் தேடி வந்தான். அங்கு அன்னப்பறவையும், அபிமன்யுவின் தாயும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

இவனைக் கண்டதும், ''மகனே! வைர அட்டிகையை எடுத்து வந்தாயா?'' என்று அவள் வினவினாள்.

''எடுத்து வந்தேன். தாங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று அதைக் கொடுத்தான். அதை வாங்கிய பின் ஒரு அறைக்குச் சென்று பூட்டிக் கொண்டாள்.

அங்கு பயங்கரமான சத்தம் கேட்டது. இளவரசன் மிகவும் பயந்தான்.

''சற்று நேரத்தில் நான் உருமாறிவிடுவேன். உள்ளே, அதற்கான மந்திரத்தைதான் வைர அட்டிகையின் மூலம் என் நண்பனின் தாய் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்,'' என்று கூறியது அன்னப்பறவை.

சற்று நேரத்தில், அன்னப் பறவை உருமாறத் துவங்கியது. அதன் இறகுகள், அலகு அனைத்தும் மறைந்து ஒரு அழகிய வாலிபன் அங்கு தோன்றினான். அவனே மகத நாட்டின் இளவரசன் சுந்தரராஜன். அவன் மிகுந்த மகிழ்வுடன் சந்திரசேனனை தழுவிக் கொண்டான்.

அவனும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தான்.

சற்று நேரத்திற்குப் பின், ''என் மனைவி பற்றிய செய்தியை நான் அறிந்து கொள்ள உதவி செய்யுங்கள்,'' என்று பாட்டியிடம் கூறினான்.

''சரி, ஆகட்டும்,'' என்று கூறி ஒரு கண்ணாடிப் பேழையை எடுத்து வந்தாள். பின், அதில் தெரியும் காட்சிகளைக் கூறத் துவங்கினாள்.

''அவள் சந்திரபுரியின் இளவரசி ஆவாள். பெயர் சித்ராங்கதை. தன் தந்தையின் உயிரைக் காக்க, ஒரு பெரும் மந்திரவாதியுடன் போர் புரிந்தாள். முடிவில், அவளை ஒரு பூனையாக மாற்றி, அவன் தந்தையையும் கொன்றுவிட்டான் மந்திரவாதி. சிறிது நாட்களுக்குப் பின், அவள் மீது மனமிறங்கி செல்லவிட்டான்.

''பத்து ஆண்டுகளுக்குப் பின் அவள் சுய உருவத்தை அடைய இயலும் என்றும், அவள் கணவனே அதற்கு உதவுவான் என்றும் கூறினான். அல்லிக் குளத்தின் நீரைத் தெளித்தால் அவள் சுய உரு அடைவாள் என்றும் தெளிவுப்படுத்தினான். ஆனால், தேடும் முயற்சி ஒரு மாதத்திற்கு மேல் சென்றால், மானாக அலையவேண்டியிருக்கும் என்பதால் விரைந்து அரண்மனை திரும்ப வேண்டும்,'' என்று கூறி முடித்தாள்.

உடனடியாக, அல்லிக்குளத்திற்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றான். நீலக்கல்லின் உதவியால் அல்லிக் குளத்தை அடைந்தான். உடனடியாக, ஒரு குவளையில் சிறிது நீரை எடுத்து விரைந்து பூஞ்சோலை திரும்பினான்.

இவன் வருகையை எதிர்நோக்கி, பூனை காத்திருந்தது. சந்திரசேனன் சென்று இன்றுடன் ஒரு மாதம் முடியப் போகிறது.

'இன்று சூரிய அஸ்தமனத்திற்குள், சந்திரசேனன் வராவிடில் மானாக உருவெடுக்க வேண்டியிருக்குமே!' என்று எண்ணி மிகுந்த கவலையோடிருந்தது பூனை.

அப்போது, சந்திரசேனன் வந்த செய்தியைக் கேட்டு ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதையறிந்த பூனையும் மகிழ்ந்தது. அவன் விரைந்து வந்து பூனை மீது நீரைத் தெளித்தான். அவள் உடனே அழகிய பெண்ணாய் மாறினாள். அவளுடைய அழகைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

நடந்தவற்றையெல்லாம் அறிந்த மன்னர் மேனகாவிடம், ''பார்த்தாயா! நான் கூறியது போல, அவரவர்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமே அவர்களின் மனைவியை அமைத்துத் தரும்,'' என்று கூற அவளும் அதை ஆமோதித்தாள்.

ஊர் மக்கள் முன்னிலையில் சித்ராங்கதையை அறிமுகம் செய்து வைத்தார் அரசர். பின் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டனர். சந்திரசேனனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவன் சகோதரர்கள் அவனிடம் மன்னிப்பு வேண்டினர்.

சந்திரபுரியை ஆட்டி வைத்த மந்திரவாதி இறந்ததால், மக்கள் தங்களுக்கு அரசன் இல்லை என வருந்திக் கொண்டிருந்ததாக செய்தி வந்தது.

சந்திரசேனனையும், சித்ராங்கதையையும் சந்திரபுரியின் அரசன், அரசியாக நியமித்தார் அரசர். அவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்!

- சுபம்.






      Dinamalar
      Follow us