PUBLISHED ON : டிச 18, 2021

சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 2009ல், 8ம் வகுப்பு படித்தேன்; வாரத்துக்கு ஒரு நாள், ஓவியப் பயிற்சி வகுப்பு உண்டு. பெரும்பாலும், அந்த வகுப்பு நேரத்தில் கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களே வந்து நடத்துவர்.
ஒருநாள் வகுப்புக்கு வந்த ஓவிய ஆசிரியர் மகேந்திரன், 'இந்த வகுப்பை மற்ற ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வதால் ஓவிய பயிற்சி தர முடியவில்லை. இதுதான் முதல் ஓவிய வகுப்பு; உங்களுக்கு பிடித்த இடத்தில் நடத்த ஆசைப்படுகிறேன்...' என ஒரு மரத்தடிக்கு அழைத்து சென்று அரை வட்டமாக அமர வைத்தார்.
நடுவில் சிறிய மேஜை போட்டு, அதில், மரத்தால் செய்த முக்கோணம், சதுரம், பந்து போன்ற வடிவங்களை வைத்து, 'இவை எப்படி தெரிகிறதோ, அது போல் வரைக...' என்றார். தெரிந்ததை வரைந்தோம்; பின், எங்களை இடம் மாற்றி அமர வைத்து, 'வரைந்த ஓவியத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளுங்கள்...' என்றார்.
ஒரே வடிவம் பல கோணங்களில் வரையப்பட்டிருந்தை கண்டு வியப்பு அடைந்தோம். அப்போது, 'எந்த பொருளையும் பார்த்தவுடன், 'இப்படிதான் இருக்கும்' என முடிவு செய்யக் கூடாது; ஒவ்வொருவரும் பார்க்கும் கோணத்திற்கு ஏற்ப, வடிவ அமைப்பு மாறுபடும்...' என அறிவுரைத்தார்.
என் வயது, 24; அந்த ஆசிரியர் வழங்கிய அறிவுரை வாழ்வில் உதவுகிறது. ஒரு செயலை பல கோணங்களில் பார்க்கவும், உணரவும் முடிகிறது. இந்த அறிவை எளிமையாக புகட்டியவரை மனதில் கொண்டுள்ளேன்.
- ர.முகமது காலித், சென்னை.
