PUBLISHED ON : டிச 18, 2021

விருதுநகர், பழனியப்பா மேல்நிலைப் பள்ளியில், 2008ல், 8ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியராக இருந்தார் சரவணச்செல்வன். அன்று பாடம் துவங்குவதற்கு முன், 'கடினமான கேள்வி ஒன்றை கேட்க போகிறேன்... சரியாக விடை சொல்பவருக்கு, 10 ரூபாய் பரிசு...' என்று அறிவித்தார்.
பரிசு என்றதும் கையை உயர்த்தியவர்களிடம் மீண்டும், 'கேள்வி கடினம்... நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்...' என்றார். ஒருவர் பின், ஒருவராக கையை இறக்கினோம். ஒருவன் மட்டும் உயர்த்திய கரத்தை இறக்கவில்லை. அவனிடம், 'திருக்குறளை இயற்றியவர் யார்...' என கேட்டார். உடனே, 'திருவள்ளுவர்...' எனக்கூறி, மகிழ்ச்சியுடன் பரிசை வாங்கினான்.
சிரித்தபடியே, 'பயம் தான் தோல்விக்கு முதல் காரணம் என்பதை அறிந்தீர்களா...' என்றவர், அது குறித்த தெளிவை ஏற்படுத்தினார். இப்போது எனக்கு, 26 வயதாகிறது; பொறியியல் முடித்து, அரசு பணியில் சேர போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். அன்று அந்த ஆசிரியரிடம் கற்றது, கடின சூழலையும் எதிர் கொள்ளும் மன பக்குவத்தை தந்துள்ளது.
- ஜெயசுதா, விருதுநகர்
