
எளிமை, விடாமுயற்சி, பாசம், நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று. அவரது வாழ்வே மேன்மைமிக்க பண்புகளால் நிரம்பியது. அவை வெளிப்பட்ட சில தருணங்களைப் பார்ப்போம்...
எளிமை!
காந்திஜியைப் பார்க்க வந்திருந்தார் முன் அறிமுகம் இல்லாத ஒரு பேராசிரியர். அப்போது, வாசலைப் பெருக்கிக்கொண்டிருந்த முதியவரிடம், 'காந்திஜியை பார்க்க வேண்டும்; உடனடியாக வரச் சொல்...' என்றார்.
முதியவர், 'உங்களை, 11:00 மணிக்கு சந்திப்பார் காந்தி...' என்றார்.
பொறுமையிழந்தவர், 'இப்போதே காந்திஜியை பார்த்தாக வேண்டும்... உடனே தகவல் சொல்...' என்றார்.
பொறுமையாக, 'ஐயா, நேரப்படி நடப்பவர் காந்தி; சரியான நேரத்தில் உங்களை சந்திப்பார்...' என்றார் முதியவர்.
பெருக்கும் முதியவர், மரியாதை குறைவாக காந்தி பெயரை உச்சரிப்பதாக எண்ணினார் பேராசிரியர். இது கடும் கோபத்தை ஏற்படுத்தினாலும், கடுப்புடன் காத்திருந்தார்.
முற்பகல், 11:00 மணி.
பெருக்கும் பணியை நிறுத்தி, துடைப்பத்தைப் போட்டபின், 'நீங்கள் சந்திக்க வந்த காரணத்தை சொல்லுங்கள்...' என்றார்.
'நான் காந்திஜியை பார்க்க வந்திருக்கிறேன். அவரிடம் தான் பேச வேண்டும்...'
அழுத்தம் திருத்தமாக கூறினார் பேராசிரியர்.
'நான் தான் காந்தி... சொல்ல வந்ததை கூறுங்கள்...' என்ற முதியவரைக் கண்டு அதிர்ந்து போனார் பேராசிரியர்.
அத்தனை எளிமையானவர் மகாத்மா காந்தி.
நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பதில் வல்லவர்.
பாசம்!
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் காந்திஜி.
தோளில் குழந்தையைச் சுமந்தபடி, அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
கூட்டம் முடிந்தது.
மேடையை விட்டு இறங்கி, அச்சிறுமியிடம் வந்தார் காந்தி.
'இவ்வளவு நேரம் குழந்தையை தோளில் துாக்கியபடி நிற்கிறாயே... வலிக்க வில்லையா...' என்றார்.
'இது என் தம்பி... சுமையல்ல...'
சிறுமியின் பதில் கேட்டு நெகிழ்ந்து பாராட்டினார் காந்திஜி.
நகைச்சுவை!
காந்திஜி ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது.
அதை ஏற்பாடு செய்தவர்கள், வாழ்த்து மடல் வாசித்து, பண முடிப்பு வழங்க முடிவு செய்திருந்தனர்.
கூட்டத்துக்கு வந்த போதே மிகவும் களைப்புடன் காணப்பட்டார் காந்திஜி; எனவே, சுருக்கமாக முடிக்க எண்ணினர். கூட்ட ஏற்பாட்டாளர்கள் தயாரித்து வைத்திருந்த வாழ்த்து மடலை, மேடையில் படிக்கவில்லை; அதைப் படித்ததாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர்.
காந்திஜி எழுந்து, 'வாழ்த்து மடலைப் படிக்காமலே ஏற்றுக் கொள்ள கேட்டனர்; மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்... அதேபோல், என் பேச்சையும், பேசப்பட்டதாக ஏற்கும்படி கேட்கிறேன். ஆனால், பண முடிப்பை மட்டும், கொடுக்காமலேயே, கொடுத்துவிட்டதாக சொல்லி விடாதீர்கள்...' என்றார்.
பலத்த சிரிப்புடன் கரகோஷம் செய்தது கூட்டம்.
மொழிப்பற்று!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார் காந்தி.
அவரைப் பேட்டி எடுக்க, குஜராத்தி மொழி பத்திரிகை நிருபர் வந்தார். காந்திஜி
கப்பலை விட்டு இறங்கியதுமே, அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.
அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் காந்திஜி.
பின், 'நீங்களும், நானும் இந்தியர்; இருவருக்கும் தாய்மொழி குஜராத்தி. அப்படியிருக்க, நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க துணிந்தது ஏன்...' என கேட்டார்.
பேட்டிக்கு வந்த நிருபர் தவறை உணர்ந்தார்.
கைத்தடி!
ஒருசமயம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார் காந்திஜி; வெள்ளையரை எதிர்த்து, கடுமையாகப் போராடிய காலம் அது!
ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். அப்போது, 'மிஸ்டர் காந்தி... ஆணும், பெண்ணுமாக கலந்து எங்களைப்போல் நடனமாட முடியுமா...' என்றார் ஒரு ஆங்கிலேயர்.
'நிச்சயமாக ஆடுவேன்; ஆனால், இதுதான் என் துணையாக இருக்கும்...' என்றபடி, கை தடியைக் காட்டினார் காந்திஜி.
அனைவரும் சிரித்தனர்.
சிறந்த புத்தகம்!
பள்ளி மாணவர்கள் சிலர் காந்திஜியை சந்தித்தனர்.
'எங்களுக்கு ஏற்ற பாட புத்தகம் எது...' என்றனர்.
'மாணவனுக்கு சிறந்த பாடப் புத்தகம் அவனது ஆசிரியரே...' என்றார் காந்திஜி.
ஆங்கிலம்!
பள்ளியில், ஆங்கில மொழியை கற்க மிகவும் சிரமப்பட்டார் காந்திஜி. அதை கற்பதற்கான தேவை குறித்து கேள்விகள் எழுந்தன.
அது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள்...
* ஆங்கில இலக்கியப் பகுதிகளை மனப்பாடம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்
* அதையே மொழி பெயர்த்துப் படிப்பதால், என்ன நஷ்டம் வரும்
* தாகூரின் வங்க மொழி படைப்புகள், இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு படிக்கப்படுகிறதே
* எல்லா மொழியிலும் ஆக்கப்பட்டுள்ள இலக்கியத்தை ரசிக்க, அத்தனை மொழிகளையும் படிப்பது சாத்தியமா.
இதுபோன்ற கேள்விகள் எழுந்தன.
தாய்மொழி மீதிருந்த பற்றால் எழுந்த சிந்தனைதான் அது.
ராஜதந்திரம்!
காந்திஜியிடம், 'எதிரியை வெல்ல என்ன ராஜதந்திரம் மேற்கொள்வீர்...' என்று கேட்டனர் வெளிநாட்டு நிருபர்கள்.
'வாய்மையை தவிர வேறு எந்த தந்திரமும் எனக்கு தெரியாது...' என்றார் காந்திஜி!
- ஜோ.ஜெயக்குமார்

