
முன்கதை: இயற்கை மீது ஆர்வம் கொண்டவன் சந்திரஜெயன். சில மிருகங்களையும், பறவைகளையும் வீட்டில் பராமரித்து வந்தான். அவனது மாமா விஞ்ஞானி யோகிபாபு, அன்டார்டிகாவுக்கு அழைத்துப்போவதாக கூறினார். அதை எதிர்த்தது குடும்பம். இனி -
''என் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பான்...'' என்றார் யோகிபாபு.
''தயவுசெய்து அவனை விட்டுடு தம்பி...'' என்றார் சந்திரஜெயனின் அம்மா.
''நானென்ன பிள்ளை பிடிக்குறவனா; என்கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க... மருமகனை கூட்டிட்டு போய், பத்திரமா திரும்ப அழைத்து வருவது என் பொறுப்பு...'' என்றார் யோகிபாபு.
''இந்த ஆண்டு வேணாம்; இன்னும், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் அழைத்துப் போ...'' என்றார் சந்திரஜெயனின் அம்மா.
''முடியாது அம்மா... இந்த ஆண்டு போயே தீருவேன்...''
அடம் பிடித்தான் சந்திரஜெயன்.
''சரியாக, 45 நாட்கள் தங்கியிருப்போம்; ஆபத்தான எந்த பணியிலும், மருமகனை ஈடுப்படுத்த மாட்டேன். தினமும், 15 நிமிடம் உங்களுடன் பேசுவான்; அவன் ஆரோக்கியம் சீர் கெட்டால், அடுத்த நொடி இந்தியாவுக்கு அழைத்து வந்துடுவேன்...
''இருபது ஆயிரம் அமெரிக்க டாலர் செலவாகும்; இந்த பயணத்தை இலவசமாக அமைத்து தருகிறேன். அன்டார்டிகாவில் கிடைக்கும் அனுபவம் மேலும் அவனை பக்குவப்படுத்தும்...'' என்றார் யோகிபாபு.
'சரி... கூட்டிட்டு போ... கவனமாக பார்த்துக் கொள்...' என்றனர் சந்திரஜெயனின் பெற்றோர்.
வானம் வரை துள்ளி குதித்தான் சந்திரஜெயன்; பயணத்துக்கு ஆடைகளை, பெட்டிக்குள் அடுக்க ஆரம்பித்தான். அவன் ஆர்வக் கோளாறை ரசித்தார் யோகிபாபு.
''இந்த ஆடைகள் எல்லாம், சரிப்பட்டு வராது... அங்கு, ஆடைகளை வெங்காயம் போல் அணிய வேண்டும்; பனி பாதுகாப்பு ஆடைகளை, தலைநகர் உஷாய்யாவில் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் அல்லது விலைக்கு வாங்கி கொள்ளலாம்...
''தலைக்கு, உல்லன் தொப்பி; கண்களில் அல்ட்ரா வயலட் கதிர்களை தாங்கும் கண்ணாடி; காட்டன் ஆடைகள் கூடவே கூடாது; உடலுக்கு விசேஷ, சன் கிரீம் பூசிக் கொள்ளணும்; உதட்டுக்கும் கிரீம் தடவிக்கணும்; கழுத்தை சுற்றி, மப்ளர் போன்ற துணி அணியணும்...
''மெரினோ உல்லன் மேற்சட்டை; வாட்டர் புரூப் காற்சட்டை அணிதல் நலம்; கால்களுக்கு, ரப்பர் இன்சுலேட்டட் ஷூ; கைகளுக்கு, விசேஷ கையுறைகள்; நடக்க, டெலஸ்கோபிக் வாக்கிங் போல், இது பனிகட்டியில் மூழ்காமல் நடக்க உதவும்; பைனாகுலர் மிக மிக தேவையானது...'' என்றார் யோகிபாபு.
''வெங்காயம் உரிக்க உரிக்க ஒவ்வொன்றாய் கழன்று வரும்; அதை போல், ஒன்றன் மேல் ஒன்றாக, பல ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் இல்லையா மாமா...''
''ஆமான்டா...''
''எவ்வகை வாகனங்கள் அங்கு இயங்குகின்றன...''
''குவாடு பைக்ஸ், ஹாக்லாண்டு வாகனம், ஹெலிகாப்டர், மின் வாகனங்கள், ட்ரக்குகள், வென்சூரி வாகனம், சூரிய சக்தியால் இயங்கும் வாயேஜர், மினி ட்ராக் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பயணிக்கலாம்...''
''அங்கு என்ன உணவுகள் கிடைக்கும்...''
''கொழுப்புள்ள உலர்ந்த மாமிசம், பிஸ்கெட், மாமிசமும் கலந்த பதார்த்தம், கடல் உணவு, வாத்து கறி, சாக்லெட், 400 விதமான கடுகு உணவுகள், பழங்கள், காய்கறிகள் உண்ண கிடைக்கும்...'' என்றார் யோகிபாபு.
''நாம எங்க தங்குவோம்...''
''அன்டார்டிகாவில் கூடாரங்கள், ஆடம்பர ஓட்டல்கள் உள்ளன; ஆராய்ச்சி நிலையங்களில், வசதியுடைய குடியிருப்புகளில் தங்குவோம்...''
''பாதுகாப்புக்கு துப்பாக்கி எடுத்து செல்லலாமா...'' என்றான் சந்திரஜெயன்.
''அனுமதி இல்லை...''
''அங்கு போலீஸ் இருக்கின்றனரா...''
''மார்ஷல்கள் இருக்கின்றனர்...''
''அன்டார்டிகாவை சுத்தி காண்பிப்பீங்களா...''
''அங்கு பல வகை பென்குவின் உள்ளன; அவை கூட்ட கூட்டமாய் நடந்து செல்வதை பார்த்து ரசிக்கலாம். 'டைவ்' அடிக்கும் நீல திமிங்கலங்களை பார்க்கலாம்; 121 வகை காளான்கள் உள்ளன; 72 வகை முதுகெலும்பு உள்ள ஜீவராசிகள், எட்டு வகை பாலுாட்டிகள், மூன்று பறவைகள் மற்றும் வினோத புழுக்களையும் கண்டு மகிழலாம்...
''இயற்கையின் வினோதங்களில் ஒன்று தென் துருவம்; அந்த பேய்ப்பனியில், 45 நாள் தங்கியிருப்பதே சாதனை தான்...''
''மாமா... ஒரே ஒரு விஷயத்தை மறைக்காமல் சொல்லுங்க; நீங்கள் என்ன காரியத்திற்கு அங்கு செல்றீங்க...''
''அழிந்து போன உயிரினம் ஏதாவது ஒன்றின், புதை படிவம் கிடைக்க போகிறதா என, ஆராய போகிறேன்... ஆனால், அதில் ஒரு சட்ட சிக்கல் இருக்கிறது...''
''என்ன சிக்கல்...''
''பாறை, இறகுகள், எலும்பு, முட்டைகள் என, இவற்றை சேகரித்து எடுத்து செல்ல தடை விதித்துள்ளனர்... அதனால்...'' என இழுத்தார் யோகிபாபு.
''அதனால் என்ன...''
''ஏதாவது புதை படிவங்கள் கிடைத்தால், அதை சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வர போறேன்...''
- தொடரும்...
- வஹித்தா நாசர்!

