
கடலுார் மாவட்டம், நெய்வேலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், பிளஸ் 1 படித்தபோது நடந்த நிகழ்வு!
கணித ஆசிரியை மணிமொழி, மிகத் தெளிவாக, படிப்படியாக பாடம் கற்பிப்பதில் வல்லவர். இயல்பாகவே கணித ஆர்வம் உள்ள என்னை ஊக்குவித்தார். அரையாண்டு தேர்வு முடிந்து மதிப்பெண் வந்தது. மறுபடியும் அதே போல் தேர்வு எழுத கட்டளையிட்டார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சியாக இருந்தது.
முடிவில், அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களைப் பாராட்டினார்; குறைவாக பெற்றிருந்தவர்களை கவனம் செலுத்தி படிக்கச் சொன்னார்.
இரண்டு தேர்விலும் ஒரே அளவு மதிப்பெண்ணே வாங்கியிருந்தேன். என்னை அழைத்து, 'நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று தான் மறுதேர்வு நடத்தினோம்... நீ, ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லையே...' என்றார்.
அது, உத்வேகத்துடன் படிக்க துாண்டியது; இறுதித்தேர்வில் பள்ளியில், முதன்மை மதிப்பெண் பெற்றேன்; கணிதத்தில், 200 வாங்கினேன். பிற்காலத்தில் பொறியியல் படிப்பிலும் தனித்தகுதியுடன் தேர்ச்சி பெற இது உதவியது.
என் வயது, 50; பள்ளியில் மட்டுமல்ல, கல்லுாரியிலும் முழு உத்வேகத்துடன் படிக்கத் துாண்டிய அந்த ஆசிரியையை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- பானு ஸ்ரீதர், சென்னை.
தொடர்புக்கு: 96771 22871

