PUBLISHED ON : ஏப் 16, 2022

கலை எழில் மிக்க கட்டடம் சார்மினார். வரலாற்று சிறப்புமிக்கது. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் முசி ஆற்றங்கரையில் உள்ளது. உருது மொழி சொல்லான, 'சார்' என்பதற்கு, நான்கு என பொருள். அடுத்துள்ள, 'மினார்' என்பது கோபுரத்தை குறிக்கும். கட்டடம் நான்கு கோபுரங்களை கொண்டுள்ளதால் இந்த பெயர் பெற்றது.
'பிளேக்' என்ற கொடூர நோயை ஒழித்ததன் அடையாளமாக, கி.பி.,1591ல் கட்டப்பட்டது. இதன் உயரம், 56 மீட்டர்; வளைந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் வகையில் உள்ளது; கோபுரத்தில் நின்றால் ஹைதராபாத் நகர அழகை முழுமையாக ரசிக்கலாம். அதில் ஏற தற்போது தடை உள்ளது.
சார்மினாரை சுற்றி வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகம் உள்ளன; எப்போதும், மக்கள் கூட்டம் அலை மோதும். வளையல், செயற்கை முத்து, ஜரிகை வேலைப்பாடுள்ள ஆடை, அணிகலன்கள், வாசனை திரவியங்கள், பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் வியாபாரம் அதிகம் நடக்கிறது.
இதன் மாடியறை ஒன்று, இஸ்லாமியரின் தொழுகை மண்டபமாக பயன்படுத்தப் பட்டது. சார்மினார் கட்டட உருவத்தை, ஆட்சி முத்திரையாக பயன்படுத்தி வந்தனர், ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் இதன் உருவத்தை காணலாம்.
- ஜி.ராஜா
