PUBLISHED ON : ஏப் 16, 2022

அதிவேகமாக ஓடும் திறன் பெற்றது சீட்டா என்ற சிவிங்கி புலி. பாலுாட்டி வகை விலங்கினம். மத்திய இந்திய காட்டு பகுதியில் அதிகம் வாழ்ந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற போது, சிவிங்கியை முழுமையாக இழந்திருந்தது, நம் நாடு.
தற்போதைய சட்டீஸ்கர் மாநிலம், சுர்குஜா பகுதியை ஆண்ட மன்னர் ராமானுஜ பிரதாப் சிங், 1948ல் ஒரு சிவிங்கியை சுட்டுக் கொன்றார். மத்திய பிரதேச காட்டில் சிவிங்கியை, 1951ல் பார்த்ததாக ஒரு தகவல் பரவியது. பின், இந்திய மண்ணில் காணப்படவேயில்லை.
வேட்டை வெறியர்களால் நம்நாட்டில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதை, ஆசிய சிவிங்கி என்பர். மேற்காசிய நாடான ஈரானில் மிக குறைந்த எண்ணிக்கையில் தற்போது உள்ளது. ஆப்ரிக்க காடுகளிலும், ஒருவகை சிவிங்கி உள்ளது.
அருகி வரும் இந்த விலங்கினத்தை, பெருக வைக்க, தொடர்ந்து முயற்சித்து வருகிறது இந்தியா. பிரதமராக இந்திரா இருந்தபோது, 1970ல் ஈரானுக்கு ஆசிய சிங்கத்தை பரிசாக தந்தார். அதற்கு மாற்றாக அங்கிருந்து, ஆசிய சிவிங்கியை வாங்க முயற்சித்தார்; அது வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ஆப்ரிக்க நாடான நமீபியாவில் சிவிங்கியை வாங்கி, ராஜஸ்தான், மத்திய பிரதேச காடுகளில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவிங்கியும், சிறுத்தையும் ஒரே இன விலங்கு போல் தோன்றும். ஆனால் வேறுபட்டவை. சிறுத்தை உடல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்மீது கறுப்பு திட்டுகள் பரந்து காணப்படும். ஆனால், சிவிங்கி வெளிர் பழுப்பு நிற தோலின் மீது கறுப்புப் புள்ளிகளுடன் காணப்படும்.
ஆசிய சிங்கம், கிளை கொம்புடன் கூடிய சாம்பல் மான், பஸ்டர்ட் பறவை போன்ற அருகி வரும் விலங்கு, பறவைகளையும் பாதுகாக்க இந்தியா முயன்று வருகிறது.
- திலிப்
