தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுவாமி விவேகானந்தர்! (5)

சுவாமி விவேகானந்தர்! (5)

சுவாமி விவேகானந்தர்! (5)


PUBLISHED ON : ஏப் 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனவலிமையால் சாதனைகள் புரிந்து, உலகில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு தொடர்...

சாதாரண துறவியல்ல!

ராஜஸ்தான், அபு மலையில் பாழடைந்த குகையில் தவம் செய்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அப்போது, அவரது வயது, 28; அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.

ஒரு நாள் மாலை உலாவ சென்றார்; அவரது கம்பீர தோற்றம் கண்ட அரசு வழக்கறிஞர், 'அறிவிலும், ஆன்மிகத்திலும் உயர்ந்த துறவி' என்று புரிந்து சந்தித்து பேசினார்.

ஒரு நாள், 'சுவாமிஜி... உங்களுக்கு எந்த விதத்திலாவது நான் உதவ முடியுமா...' என்று பணிவுடன் கேட்டார்.

'மழைக்காலம் நெருங்குகிறது; இந்த குகைக்கு கதவு இல்லை; மழை பெய்தால் தண்ணீர் வந்து தேங்கி விடும்... விரும்பினால் குகைக்கு ஒரு கதவு செய்து கொடுங்கள்...' என்றார் விவேகானந்தர்.

'வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி; குகைக்கு கதவு போட்டாலும் கூட, வசதியாக அமையாது. எனக்கு பெரிய பங்களா இருக்கிறது; அங்கே தனியாக தான் வசித்து வருகிறேன்; விரும்பினால், அந்த பங்களாவிலே நீங்கள் தங்கலாம்...' என்றார் வழக்கறிஞர்.

வேண்டுகோளை ஏற்றார் விவேகானந்தர்.

'நான் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்தவன்... எனவே, உங்கள் ஆன்மிக நடவடிக்கைக்கு ஊறு ஏற்படாதவாறு பிரத்யேக உணவிற்கு ஏற்பாடு செய்து தருகிறேன்...' என்று தெரிவித்தார் வழக்கறிஞர்.

உணவு பற்றி கூறியதைப் பொருட்படுத்தவில்லை விவேகானந்தர்.

பங்களாவிற்கு சென்றார்.

அங்கு அறிமுகமானார் ஜக்மோகன்; ராஜஸ்தான் கேத்ரி மன்னரின் தனிச் செயலராக இருந்தார். அவர் சந்திக்க வந்தபோது, கவுபீனம் மட்டும் அணிந்து துாங்கிக் கொண்டிருந்தார் விவேகானந்தர்.

அதைக் கண்ட ஜக்மோகன், 'இவரும், துறவி வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் கும்பலைச் சேர்ந்தவர்தான்' என, எண்ணியபடி காத்திருந்தார்.

துாக்கம் கலைந்து எழுந்தவுடன், 'சுவாமிஜி... ஹிந்து மதத் துறவியான நீங்கள் இஸ்லாமியருடன் தங்கியிருக்கிறீர்களே... உங்கள் உணவை அவர் தொட நேரிடுமே...' என்று வினவினார்.

கோபமடைந்த விவேகானந்தர், 'என்ன சொல்கிறீர்... நான் துறவி; சமுதாய கட்டுப்பாடுகளை கடந்தவன். துப்புரவு தொழிலாளியுடன் கூட அமர்ந்து உணவு உண்பேன்... இறைவன் அதை அனுமதிக்கிறார். சாஸ்திரங்களும் அனுமதிக்கின்றன...

'உங்களுக்கு இறைவனை பற்றியும் தெரியாது; சாஸ்திரங்களை பற்றியும் தெரியாது... நான் எங்கும் இறைவனை காண்கிறேன்; சாதாரண உயிரினங்களில் கூட நிறைந்திருக்கிறார். எனக்கு உயர்வு, தாழ்வு எல்லாம் கிடையாது...' என்றார்.

அவரது குரல் நெருப்புச்சுடராய் தெறித்தது.

அதிர்ந்து போனார் ஜக்மோகன். சுவாமி விவேகானந்தர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. உடனே, கேத்ரி மன்னரை சந்திக்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி, மன்னரை சந்தித்து போதனைகள் தந்தார் விவேகானந்தர். அந்த போதனைகளை ஏற்று, விவேகானந்தரின் தீவிர சீடரானார், மன்னர்.

சுயமரியாதை!

இளமை பருவத்தில் நரேந்திரனிடம், 'மகனே... என்றும் துாயவனாக இரு; சுயமரியாதையை கடைபிடித்து வாழ். அதே நேரம், மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுத்து வாழ கற்றுக்கொள். மென்மை மற்றும் சமநிலை குலையாத வகையில் இரு; ஆனால், தேவைப்படும் போது, இதயத்தை இரும்பாக்கவும் தயங்காதே...' என்று கூறினார், அன்னை புவனேஸ்வரி.

இந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்றினார் விவேகானந்தர்.

தன்மானம், சுயமரியாதை உணர்வு அவரிடம் முழுமையாக இருந்தது. இந்திய மக்கள், பெருமை மிக்க பாரம்பரியத்தை அறிந்து, தன்மானத்துடன் வாழ வேண்டும் என விரும்பினார் விவேகானந்தர்.

ஒருமுறை -

நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அங்கு வந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர், 'நீங்கள் இந்த பெட்டியில் பயணம் செய்ய முடியாது...' என்று முரட்டுத்தனமாக கூறினார். வெளியேற வற்புறுத்தி ரயில்வே சட்டத்தை சுட்டிக்காட்டினார்.

விவேகானந்தருடன் வந்தவர் ரயில்வே நிறுவனத்தில் பணி புரிந்தார். பரிசோதகரிடம், 'அப்படி ஒரு சட்டம் இல்லை...' என மறுத்தார்.

வெள்ளைக்காரருக்கு கோபம் தலைக்கேறியது. பெரும் சண்டை மூண்டது.

அந்த பிரச்னையில் விவேகானந்தர் தலையிட்டார்.

கடுமையான குரலில், 'நீ ஏன் இதில் தலையிடுகிறாய்...' என்றார் வெள்ளைக்காரர்.

'முதல் வகுப்பில், பயணம் செய்யும் ஒருவரை மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே... முதலில் மரியாதையாக பழகுவதற்கு கற்று கொள்ளுங்கள்...' என்றார் விவேகானந்தர்.

தவறை உணர்ந்த பரிசோதகர், அங்கிருந்து வெளியேறினார்.

ஒரு சமயம், கேத்ரி மன்னரின் தனிச்செயலர் ஜக்மோகனிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த நிகழ்வை குறிப்பிட்டு, 'வெள்ளையருடன் பழகும் போது, சுயமரியாதையை விட்டு கொடுக்க கூடாது. நமக்கும் சுயமரியாதை வேண்டும்; பிறருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்...' என்றார் விவேகானந்தர்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us