PUBLISHED ON : ஏப் 24, 2021

உண்ணும் உணவே, உயிர் காக்கும் மருந்தாகிறது. அதில், பிரதான இடம் பிடிப்பது பழங்கள். அனைத்து வகை பழங்களும், மருத்துவத்தன்மை வாய்ந்தவை தான்.
அமெரிக்க ஆய்வகங்களில், 1970 முதல் தொடர்ந்த ஆராய்ச்சியில், புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி, பழவகைகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்படி கட்டுபடுத்தும் ஒன்று, 'பிரிக்லி கஸ்டர்டு ஆப்பிள்' என்ற முள் சீத்தா பழம். இது, 'சோர்சாப்' என்றும் அழைக்கப்படுகிறது. பலாப்பழத்திற்கு மேல் உள்ளது போல், முள்தோல் தோற்றம் உடையது!
இந்த இனத்தில், 120 ரகங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில், நான்கு ரகங்கள் விளைகின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் வளர்கிறது இந்த மரம்.
வட அமெரிக்காவில் உள்ள மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த தாவரம். மித தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. பழத்தின் எடை, மூன்று முதல், ஐந்து கிலோ வரை இருக்கும். மரத்தின் தண்டு பகுதிகளில் தான் காய்க்கும்.
இந்த பழம், புற்றுநோயை தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. சிறுநீரகம் செயலழிப்பை இதன் இலை மற்றும் பூ தடுக்கிறது. தொடர் இருமல், கண் புரை நோயை கட்டுப்படுத்த இதன் மொட்டுக்கள் பயன்படுகின்றன.
இலையிலிருந்து காய்ச்சி வடிக்கும் கஷாயம், நரம்பு தளர்ச்சியை போக்கும். நாள்பட்ட காயங்களுக்கு மருந்தாக பயன்படும். காயத்தால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், எடை குறைதல், தலைமுடி உதிர்தல், தொடர் வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவர். முள்சீத்தா பழம் பயன்படுத்துவதன் மூலம், புற்று நோய் செல் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பரவாமல் தடுக்கவும் செய்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் தொந்தரவுகளையும் சரி செய்யும்.
பெண்களுக்கு ஏற்படும், தைராய்டு பிரச்னையை குணப்படுத்தும்.
முள்சீத்தா இலைகளை, 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்; அது, அரை லிட்டராக வற்றியதும், காலை, மதியம், இரவு என குடிக்கலாம்.
பழத்தை முறையாக சுத்தம் செய்து, அளவாக பயன்படுத்த வேண்டும். தவறினால், நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும்.
அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில், பெருங்குடல் புற்றுநோய், மார்பு புற்றுநோய், சிறுநீர் வழித்தட புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு, முள் சீத்தா தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

