PUBLISHED ON : ஏப் 24, 2021

வகுப்பறையில் அன்று ஐஸ்கிரீம் என்ற சுவை பனிக்கூழ் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. பிடித்தவற்றின் பெயர்களை, ஆசை பொங்க கூறினர் மாணவர்கள். ஒருவன், 'வெண்ணிலா ஐஸ்கிரீம்...' என்றான். மற்றொருவன், 'சாக்லேட்...' என்றான். இன்னொருவன், 'ஸ்ட்ராபெரி...' என்றான்.
பெயர் உச்சரிப்பில் உள்ள தவறை களையும் முன், ஐஸ்கிரீம் தயாரிக்கும் விதத்தை விளக்கினார் ஆசிரியர். அந்த விவரங்களை பார்ப்போம்...
ஐஸ்கிரீம் தயாரிக்க, பால், சர்க்கரை, கிரீம், தனிச்சுவையூட்டி மற்றும் காற்று ஆகிய மூலப்பொருட்கள் தேவை. இதில் பால், சர்க்கரை தெரியும்.
அதென்ன கிரீம்...
பாலில் பெரும்பகுதி நீராக இருக்கும். கொழுப்பு, புரதங்கள் மற்றும் ஒருவகை சர்க்கரை அதில் கலந்து இருக்கும்.
பாலில் பிரிக்கப்படும் கொழுப்பே, கிரீம் ஆகும். தனிச்சுவையூட்டிகளாக, வனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி போன்றவை உள்ளன.
ஐஸ்கிரீம் தயாரிப்பில் காற்றும் முதன்மை பங்காற்றுகிறது.
தயாரிக்கும் முறை...
முதலில் பாலில், கிரீம் கலக்கப்படும். பின், சர்க்கரை சேர்க்கப்படும். இக்கலவையில் தனிச்சுவையூட்டி நன்கு கலக்கப்படும். இக்கலவை, சிரப் என்ற கூழ் வடிவம் பெறும்.
இந்த கூழ், பனிக் கட்டியை விட, மிக குறைந்த வெப்பநிலையுள்ள உறைநிலைக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு உறையும் போது, உள்ளே பனிப்படிகங்கள் உருவாகும். இவை சிறிய அளவில் இருந்தால், ஐஸ்கிரீம் அதிக சுவையுடன் இருக்கும். படிகங்கள் பெரியதாக உருவானால் சுவை குறையும்.
உறைய வைக்கும் போது, முழு கூழும், பனிப்படிகங்களாக மாறுவதில்லை. பகுதியளவு, திரவநிலையிலேயே இருக்கும். திரவ நிலையின் உள்ளே காற்றுக்குமிழ்கள் தங்கி இருக்கும். ஐஸ்கிரீம் உறை நிலை அதிகரிக்கும்போது, இந்த குமிழ்கள் அடைபடும்.
ஐஸ்கிரீம் முழுமை பெறும்போது, திண்ம படிகங்கள், திரவநிலை, அதனுள் காற்றுக் குமிழ்கள் என, மூன்று நிலைகளை உள்ளடக்கி இருக்கும். ஐஸ்கிரீமின் மிருதுத் தன்மைக்கு, காற்றுக் குமிழிகளே காரணம்.
ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் சுவையூட்டி அடிப்படையிலே பலவகை பெயரில் அழைக்கப்படுகின்றன. அந்தந்த சுவையூட்டியின் பண்புகளுக்கு ஏற்ப, மணமும், சுவையும், வண்ணமும் மாறுபடும்.
சுவையூட்டிகளை பற்றி பார்ப்போம்...
வனிலா!
இது, வனிலா என்ற தாவர விதையில் பிரித்தெடுக்கப்படும் சுவையூட்டி கலந்து தயாராகிறது. இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். பலரும் தயங்காமல் சுவைப்பர். வனிலா என்ற பெயர் மருவி, வெண்ணிலா ஐஸ்கிரீம் என்றாகிவிட்டது. குழந்தைகளே, 'வனிலா' என சரியான பெயரை உச்சரித்து பழகுங்கள்.
சாக்லேட்!
இது, கோகோ என்ற மர விதையில் பெறப்படும் சுவையூட்டியை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீமுக்கு மட்டுமல்ல, பலவகை சாக்லேட் இனிப்புகளிலும் மூலப்பொருளாக இருக்கிறது. இளம் கறுப்பு நிறத்தில் மிளிரும். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.
ஸ்ட்ராபெரி
இது ஸ்ட்ராபெரி என்ற பழத்தில் பெறும் சுவையூட்டியை கலந்து தயாரிக்கப்படுகிறது. இளம் சிவப்பு வண்ணத்தில் மினுங்கும். சிறுவர், சிறுமியரை கவரும்.
செல்லங்களே... இதமான ஐஸ்கிரீமை, கோடையில் மிதமாக சுவைத்து, நலத்தில் கவனம் வையுங்கள்.
- ராமமூர்த்தி நாகராஜன்

