தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சேரன் செங்குட்டுவன்! (2)

சேரன் செங்குட்டுவன்! (2)

சேரன் செங்குட்டுவன்! (2)


PUBLISHED ON : டிச 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: போர்களில் வென்ற சேர மன்னன் செங்குட்டுவன், வணிகன் கோவலன், கண்ணகி கதையை அறிந்தான். வீரப்பெண் கண்ணகிக்கு, சிலை வடிக்க முடிவு செய்தான். இனி -

'அப்படியா... நெடுந்துாரம் பயணம் செய்து, இமயமலையில் கல் எடுத்து, கங்கையில் நீராட்டுவதே வீரத்துக்கு அழுகு; எனவே, வடபுலம் நோக்கிச் செல்வோம்...' என்று கூறிய செங்குட்டுவன், அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டான்.

பறை முழங்கியபடி, 'கண்ணகிக்குச் சிலை செய்ய மன்னர் செங்குட்டுவன் இமயத்திற்கு செல்கிறார். அவர், வட நாட்டுக்கு வரும் போது, ஆரிய மன்னர்கள் திறை கொண்டு வந்து வணங்க வேண்டும்; இல்லா விட்டால், நாட்டை விட்டு ஓடி விடுங்கள்...' என்று அறிவித்தனர்.

பயணம் புறப்படும் முன் சபையோரை சந்தித்த மன்னன் செங்குட்டுவன், 'நான் முன்பு வடநாடு சென்றிருந்த போது, கனகன், விஜயன் என்ற மன்னர்கள் அங்கு இல்லையாம்.

'அவர்கள் இருந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கூறி, கேவலமாகச் சிரித்தனராம்! இவ்வாறு இழிவுபடுத்தியவர்களை, கண்ணகி சிலையை வடிக்க போகும் கல்லைச் சுமந்து வரச் செய்கிறேன்...' என்று சபதம் செய்தான்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள் புறப்பட்டன; முனிவர்கள் வாழ்த்துக் கூறினர்; மாடங்களில் நின்று, அணிவகுப்பை மகளிர் கண்டனர்.

படையில், 100 தேர்கள், 500 யானைகள், 10 ஆயிரம் குதிரை வீரர்கள் போர் உடை தரித்து, கம்பீரமாக நடைபோட்டனர்.

கனகனும், விஜயனும் ஆதரவாளர்களைச் சேர்த்து, செங்குட்டுவனோடு போர் புரிய கங்கைக் கரைக்கு வந்தனர். போர் மூண்டது. வீரர்கள் வேலாலும், ஈட்டியாலும் குத்தினர். ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து மற்போர் செய்தனர்; குதிரைகள், தலைவன் குறிப்பின்படி ஓடின.

வாய் வீரம் பேசிய கனகனும், விஜயனும் தவக்கோலம் பூண்டு தப்பியோட முயன்றனர். அவர்களை கைது செய்து மன்னன் செங்குட்டுவன் முன் நிறுத்தினர்.

அதேசமயம், இமயத்தில் சிலைக்குரிய கல்லையும் எடுத்து வந்தனர். அக்கல்லை, வடநாட்டு மன்னர்கள் கனகன், விஜயன் தலையில் ஏற்றிய செங்குட்டுவன், கங்கைக் கரைக்கு எடுத்து வந்து நீராட்டினான்.

மீண்டும் அக்கல்லை, அவர்கள் தலையில் ஏற்றி சோழ, பாண்டிய நாடுகள் வழியாக, சேர நாடு வந்தான். வஞ்சி மாநகரை அடைந்தான் செங்குட்டுவன். மக்கள் ஆடிப்பாடி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆரிய மன்னர்களான, கனகன், விஜயனை எல்லா வசதிகளுடன், தங்க வைத்தான் செங்குட்டுவன். மரியாதையாக நடத்தினான்.

சிற்பிகளை வரவழைத்து, கண்ணகி சிலையைச் செதுக்க உத்தரவிட்டான்; கோவில் கட்டி, சிலையை அதில் வைத்தான். அது, கண்ணகி கோட்டம் என, வழங்கப்படுகிறது. மக்கள், மலர் துாவி கண்ணகி தெய்வத்தை வழிப்பட்டனர்.

பிற சமயங்களை வெறுக்காத, அருங்குணம் கொண்டவன் செங்குட்டுவன். சேர நாட்டுப் புறநகரில் தங்கியிருந்த சமணர்களுக்கும், பவுத்தர்களுக்கும் தீங்கு நேராமல் பாதுகாத்தான். அவனது சமய ஒருமைப்பாட்டு உணர்வு போற்றத்தக்கது.

செங்குட்டுவன், வட நாட்டு யாத்திரை சென்றது, மூன்று ஆண்டுக் காலம்; அந்த காலத்தில், வஞ்சி மாநகரம் அமைதியுடன் இருந்தது; இது, செங்குட்டுவன் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு.

முற்றும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us