
அற்புதமான மூளை விளையாட்டு, சதுரங்க ஆட்டம். அளவற்ற கணித ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. உலகம் முழுதும், உள் விளையாட்டு அரங்குகளில் ஆடப்படுகிறது.
ஆங்கிலத்தில், 'செஸ்' என்பர். பழங்காலத்தில், சேனை என அழைக்கப்பட்டது.
இந்த விளையாட்டில், யானை, குதிரை, தேர், காவலர் என, நான்கு வகை சேனைகள் உண்டு. இரண்டு வண்ணங்களில் அணிக்கு, 16 வீதம், 32 காய்கள் பயன்படுகிறது.
உலகம் முழுவதும், எல்லா நாடுகளிலும் ஆடப்படுகிறது. தோன்றிய காலத்தை ஆய்வாளர்களால் கணிக்க இயலவில்லை.
துவக்கத்தில் வெள்ளை, கறுப்பு வண்ணத்தில், 64 கட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பின், இன்று உள்ளது போல் வளர்ச்சியடைந்தது.
சதுரங்க விளையாட்டில், உலக சாம்பியன் போட்டி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. முதல் போட்டி, 1948ல் நடந்தது. ஐரோப்பிய, ஆசிய கண்டங்களை உள்ளடக்கிய அப்போதைய சோவியத் ரஷ்யா வீரர் மிகேயில் பாட்வினியக் உலகச் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து, மூன்று முறை அதை தக்கவைத்துக் கொண்டார்!
இந்தியாவின் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். உலக சதுரங்க போட்டியில், ஐந்து முறை வெற்றியாளராக கொடி கட்டி பறந்தார்.

