
பேச்சு பழகு!
நல்லான்பெற்றாள் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் சிவலிங்கம். அவரிடம் வேலை செய்தான் நாகமுத்து. சிடு மூஞ்சிக்காரன். யாருடனும் அன்பாக பழகமாட்டான். அவனிடம் வியாபாரத்தை கவனிக்க சொல்லி, விவசாய பணிக்குச் சென்று விடுவார் சிவலிங்கம்.
வாடிக்கையாளர் பேரம் பேசினால், முகத்தில் அடிப்பது போல மறுத்துப் பேசுவான் நாகமுத்து. இதனால் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்தது. கொள்முதல் செய்த காய்கறிகள், விற்பனையாகாமல் அழுக துவங்கின.
கடையில் வருமானமில்லாமல், முதலீடு நஷ்டமானது. விசாரித்த சிவலிங்கம், காரணம் புரிந்து நாகமுத்துவை அழைத்தார்.
''வேலைக்கு வர வேண்டாம்; சம்பள பாக்கியை வாங்கிச் செல்...''
இதைக் கேட்டு இடி தாக்கியது போல் உணர்ந்தான் நாகமுத்து.
''ஐயா... எந்த தவறும் செய்யாத என்னை, திடீரென, வேலையை விட்டு நிறுத்தினால் எங்கே போவேன். என் உழைப்பை நம்பித்தான் குடும்பம் உள்ளது. கருணை காட்டுங்கள்...'' என்றான்.
''வேலையை விட்டு நிறுத்துவதாக கூறியதும் எப்படி வருந்துகிறாய். என் பேச்சு, வேதனையை உண்டாக்கி விட்டதல்லவா... கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், எவ்வளவு கடுமையாக பேசியிருப்பாய். சுடு பேச்சால் கடைப்பக்கமே வரவே பயப்படுகின்றனர்; இனிமையற்ற பேச்சு தவறல்லவா...''
''புரிகிறது ஐயா... இனிமேல் இனிமையாக பேசி வியாபாரத்தை பழைய நிலைக்கு எடுத்து வருகிறேன்; என்னை நம்புங்கள்...''
கெஞ்சாத குறையாக கேட்டான்.
அவனை மன்னித்தார். கனிவாக பேசி, வியாபாரத்தை பெருக்கினான் நாகமுத்து.
செல்வங்களே... எப்போதும் அன்பாக, இனிய சொற்களையே பேசப் பழகுங்கள்!
***
வெள்ளை காகம்!
வானில் பறந்தபடி, 'ஏதேனும் இரை கிடக்கிறதா' என குடியிருப்புகளைப் பார்த்தது காகம். அதே சமயம் பலத்த இடி முழங்கியது. அதிர்ச்சியில் வெள்ளையடிக்க, கலக்கி வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு கரைசலில் விழுந்தது காகம்.
தட்டு தடுமாறி வெளியேறி, குட்டை நீரில் உருவத்தைப் பார்த்தது. வெள்ளை நிறமாக மாறி இருப்பதைக் கண்டு அதிசயித்தது. வண்ண மாற்றம் கர்வத்தை ஏற்படுத்தியது.
வானில் பறந்தபடி, 'தேவலோகத்தில் பிறந்த என்னை, பூவுலகில் அரசாளவே அனுப்பியுள்ளார் கடவுள்...' என்று கூறியது.
அதை உண்மை என நம்பின பறவைகள்.
அன்று முதல், கட்டளைகள் பிறப்பித்து வாழத் துவங்கியது வெள்ளை காகம். அதன் பேச்சை மீற முடியாமல், பணிவிடைகளை செய்து வந்தன காட்டில் வசித்த மற்ற காகங்கள்.
ஒரு நாள் -
திடீரென கார்மேகங்கள் சூழ்ந்து, மின்னல் வெட்டி மழை பொழிய துவங்கியது.
அதில் ஆனந்தக் குளியல் போட்டது வெள்ளை காகம். படிந்திருந்த சுண்ணாம்பு கரைந்து, பழைய உருவை அடைந்தது.
'அட... நம்மைப் போல சாதாரண காக்கை தான் இது; தேவலோக பறவை என பொய் சொல்லி, முட்டாளாக்கிவிட்டதே... அடிமையாக நடத்திய இதை சும்மா விட கூடாது...' என கூறியது முதிய காகம்.
உடனே திரண்டு திட்டமிட்டன காகங்கள்.
ஏமாற்றிய காகத்தை கொத்தி விரட்டின. தப்பித்தால் போதும் என பறந்தோடியது ஏமாற்று காகம்.
தளிர்களே... எப்போதும் பிறரை ஏமாற்றாமல் வாழுங்கள்; அதுதான் நன்மை தரும்!
- ஜி.சுந்தரராஜன்

