தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சித்ரா (2)

சித்ரா (2)

சித்ரா (2)


PUBLISHED ON : செப் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊர் முனையில் ஒரு குளம் இருந்தது. அக்குளத்தில் பெண்கள் சித்ராவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இளவரசன் மரத்தருகே நின்று அவர்களின் பேச்சைக் கவனித்தான். சித்ராவைப் பற்றியும், அவள் சின்னம்மாவும், தங்கைகளும் அவளுக்குக் கொடுமை செய்வது பற்றியும், பேசிக்கொண்டனர். சித்ராவின் பண்பையும் பாராட்டினர்.

அந்த அனாதைப் பெண்ணான சித்ராவை பார்க்க வேண்டும் போல இளவரசனுக்குத் தோன்றியது. மாறுவேடத்திலேயே சித்ராவின் வீட்டிற்குச் சென்றான். கதவு திறந்து கிடந்தது. சின்னம்மா ஒரு கட்டிலிலும், அவளுடைய இரண்டு பெண்கள் வேறு இரண்டு கட்டில்களிலும் படுத்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான்.

தெருப்பக்கம் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் இடப்பட்டுக் கோலம் அழகாகப் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பூக்கள் வைக்கப்பட்டுப் பார்க்க அழகாகவும் இருந்தது. தரையைக் குனிந்து கவனித்தான். ஓர் அரசன் தேர் மீதேறிச் செல்வதைப் போல அக்கோலம் போடப்பட்டிருந்தது.

சத்தம் செய்யாமல் தோட்டத்தின் பக்கம் சென்றான். அங்கே கதவின் பின்புறம் இரண்டு படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒன்றில் அப்பாவின் படமும், மற்றொன்றில் அம்மாவின் படமும் வரையப்பட்டிருந்ததைக் கண்டு இன்புற்றான்.

'பெற்றோரைக் கடவுளாக வணங்கும் இப்பெண் மிகவும் புத்திசாலியாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும் இருப்பாள்' என்று உறுதியுடன் நம்பினான்.

இப்படிப்பட்ட குணமுள்ள பெண்தான் குடும்பத்தில் கணவனுக்கு மன மகிழ்ச்சியை எந்நாளும் அளிப்பாள் என்றும் முடிவு செய்தான்.

சுத்தமான குளிர்ந்த நீரில் குளித்து, அழகாகத் தலையை வாரிப் பின்னலிட்டு, அதிலே புதிய மலரைச் சூடியிருந்த சித்திரப் பதுமை சித்ராவை இளவரசன் நோக்கினான். அவள் அணிந்திருந்த ஆடைகள் ஆங்காங்கே கிழிந்திருந்தும், அதை ஒட்டும் துணிபோட்டுத் தைத்து அழுக்கில்லாமல் நேர்த்தியாகத் துவைத்துக் கட்டியிருந்ததையும் பார்த்தான்.

சித்ரா கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் தனிமையில் தியானித்ததையும் பார்த்தான். அவளுடைய வறுமையையும், வேதனையையும் தாங்கிக் கொண்டு, அடக்கமாகவும், ஒழுக்கமாகவும் வாழும் அப்பெண்ணையும், செருக்குடனும் செல்வத் திமிருடனும் வாழும் அவளுடைய இரண்டு தங்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.

நல்லவளாகவும், நாலு பேர் மதிப்பவளாகவும் விளங்கிய சித்ராவை அவன் மனம் பெரிதும் விரும்பியது. தன் அரண்மனைக்குத் திரும்பிச் சென்று சித்ராவின் வீட்டிற்கு தனது அழைப்பை அனுப்பினான்.

சின்னம்மா தன் இரண்டு பெண்களையும் வைர நகைகளால் சிங்காரித்து, அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள். சித்ரா வேலைக்காரியாக அவர்களுடன் சென்றாள்.

சின்னம்மா தன்னுடைய இரண்டு பெண்களும் மிக அழகாக ஓவியங்கள் வரைவார்கள் என்று இளவரசனிடம் எடுத்துரைத்தாள்.

ஓவியங்களை நன்றாக வரையக்கூடிய பெண்ணையே தான் மணக்க விரும்புவதாக இளவரசன் சின்னம்மாவிடம் கூறினான்.

அன்று இரவு விருந்து சாப்பிட இளவரசன் அழைத்தான். இதைக் கேட்டதும் சின்னம்மாவிற்கு ஒரே மகிழ்ச்சி. 'தன் பெண்கள் இளவரசனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்று எண்ணி அந்த நொடியிலேயே அவள் இன்பத்தின் எல்லைக்குச் சென்று விட்டாள்.

சின்னம்மா, தான் அந்த நாட்டின் பெரிய ராணி என்பது போலக் கனவு காணத் தொடங்கிவிட்டாள்.

மிகவும் மகிழ்ச்சியுடன் தன் பெண்கள் இருவரையும் இரு கைகளால் அணைத்துக் கொண்டு உச்சி மோந்து முத்தமிட்டாள்.

''என் அழகுக் கண்களே! நீங்கள் இந்த நாட்டின் ராணிகளாகப் போகிறீர்கள்!'' என்றாள் தன் பெண்களிடம்.

கண நேரத்தில் பனிக்கட்டி உருகியது போல மூவரும் உற்சாகமில்லாமல் காணப்பட்டனர். தன் இரண்டு பெண்களுக்கும் ஓவியங்கள் வரையத் தெரியாதே! இந்த இரண்டு பெண்களையும் இளவரசர் ஏற்றுக் கொள்ள மாட்டாரே என்பது சிறிது நேரம் சென்ற பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது.

ஆனாலும், 'ஏதாவது சூழ்ச்சி செய்து சித்ராவை வரையச் சொல்லி விட்டுத் தாங்களே வரைந்ததாக வழக்கம் போல பொய் சொன்னால் என்ன?' என்ற யோசனையும் தோன்றியது.

இதற்குள் இளவரசனுடைய ஆட்கள் அவர்களை விருந்துண்ண அழைத்தனர். சித்ராவை அழைக்காமலேயே அவள் தன் இரு பெண்களை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றாள். விருந்து பரிமாறப்பட்டது.

இளவரசன், தான் ஏற்படுத்தப் போகும் ஓவிய மண்டபத்தைப் பற்றியும் அதில் எப்படிப்பட்ட சித்திரங்கள் வரைய வேண்டும் என்பது பற்றியும் அவர்களுடன் பேசி, ஓவியக் கலையைப் பற்றி விசாரித்தான்.

சின்னம்மாவிற்கும், அவளுடைய பெண்களுக்கும் இளவரசனுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் திருதிருவென்று விழித்தனர். பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிக்கும்படி வேண்டினர். அவர்களே சித்ராவை அழைத்தனர். இளவரசனுடைய கேள்விகளுக்குத் திருப்தியாக அவள் பதில் கூறினாள். தன்னுடைய சின்னம்மாவையும், தங்கைகளையும் மன்னித்து, அவளுடன் தங்க இளவரசனிடம் அனுமதி கேட்டாள்.

ஓவிய மண்டப வேலைகள் முடிந்தவுடன் அவர்களுக்குச் சிறந்த பரிசுகள் அளிப்பதாக அறிவித்தான். சித்ராவிற்கு வர்ணங்கள் குழைத்துக் கொடுத்துச் சித்திரங்கள் வரையச் சின்னம்மாவும், அவளுடைய இரு பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றும், சித்ராவை நன்கு நடத்தி அவள் மனம் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்றும் இளவரசன் கட்டளையிட்டான்.

''பல ஆண்டுகளாகச் சின்னம்மாவும், அவளது பெண்களும் சித்ராவிற்கு செய்த கொடுமைகளை ஊரில் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். அதே ஊர் மக்கள் மீண்டும் சின்னம்மாவும் அவளது பெண்களும் சித்ராவிடம் மிகவும் பிரியமாகவும் அன்புடனும் இருக்கின்றனர். சித்ராவின் திறமைகளையும், அவளுடைய நல்ல குணத்தையும் பாராட்டுகின்றனர் என்று பேசும்படி நடந்துகொள்ள வேண்டும்,'' என்பதையும் எடுத்துரைத்தான்.

''போலி அன்பும், நடிப்பும் நீண்ட நாள்கள் நிலைத்து நிற்காது. உண்மையான மனமாற்றம் தான் யாவருக்கும் நல்லது.

''சித்ராவால் உருவாக்கப்படும் இந்த ஓவிய மண்டபம் நம் நாட்டிற்கும், உலகிற்கும் அழியாத சின்னமாக அமையப் போகிறது. ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்கள் உருவாக நீங்கள் யாவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். அதற்குப் பரிசாக ஓவிய மண்டபத் திறப்பு விழாவின்போது நானே சித்ராவை மாலைசூட்டி என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்,'' இவ்வாறு இளவரசன் கூறினான்.

மீண்டும், ''சின்னம்மாவுக்கும் அவள் பெண்களுக்கும் நல்வாழ்வு அமைய நான் ஏற்பாடு செய்கிறேன்,'' என்று இளவரசன் கனிவுடன் எடுத்துச் சொன்னான்.

சின்னம்மாவும், அவள் பெண்களும், சித்ராவும், இளவரசனின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.

இளவரசன் சித்ராவின் தோள்களைப் பிடித்துத் தூக்கினான்.

காலையில் பூக்கும் புதுமலரில் தோன்றும் பனித்துளிபோல அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியதைக் கண்டான். இரண்டு ரோஜா மலர்களுக்குக் கீழே மல்லிகைச் சரம் வைத்திருப்பது போல அவளது சிவந்த கன்னங்களும், முத்துப்பல் வரிசையும் பளிச்சிட்டன!

ஒரு நல்ல நாளில் இளவரசனுக்கும், சித்ராவுக்கும் திருமணம் இனிதே நடைப்பெற்றது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us