PUBLISHED ON : செப் 20, 2013

'டேபிள் மவுண்டன்' என்றால் மேஜைமலைகள் என்று பெயர். இம்மலைத் தொடரின் உச்சிகள் மேஜையைப் போலத் தோற்றமளிப்பதனால், இதற்கு இப்பெயர். ஆப்பிரிக்காவில் தெற்குமுனைப் பகுதியில் இம்மலைகள் வியாப்பித்துள்ளன. டேபிள் பே-டேபிள் விரிகுடாவிலிருந்து சுமார் இரண்டு மைல் நீளத்துக்கு இம்மலைத் தொடரின் உச்சி சமதளமாகக் காணப்படுகிறது. ஆனால், இந்தப் படுக்கைக் கோடு கார்ஜ் எனப்படும் பெரிய வெடிப்பின் மூலம் வெட்டுப்பட்டிருக்கும். இது பளிச்சென்று தெரியாது. இதுதவிர ஏராளமான குறுகலான கணவாய்களும் உள்ளன.
மேஜை மலை என்பது மலைத்தொடரின் ஒரு பகுதியே. இம்மலைத் தொடரின் தென்கோடி நன்னம்பிக்கை முனை. கேப் ஆப் குட் ஹோப்யிலிருந்து 30 மைல் களுக்கு அப்பால் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3567 அடிகள் வரை உயரமானது இம்மலை. கிழக்கே டெவில்ஸ் பீக் என்ற முகடும், தெற்கே லைன்ஸ் ஹெட் என்ற முடியும் உள்ளன. இவற்றின் உயரம் முறையே 3270-2178 அடிகள்.
டேபிள் மவுண்டன், 'ஸாண்ட்ஸ் டோன்' என்னும் ஒருவகைப் பாறைகளாலும், 'காம்பேக்ட் ராக்' என்னும் உறுதியான பாறையாலும் உருவானது. குவார்ட்ஸ் எனப்படும் படிகக்கல் ஏராளம். இதில் பொன்னும் கலந்திருக்கும். டேபிள் மலைப் பகுதிகளில் கனத்த மழை எப்போதும் உண்டு. மலை உச்சியில் வேகமாக மேகங்கள் உருவாகி மூடிக் கொள்ளும். மேகமூட்டத்தினால் மூடும் இந்த அதிசயத்தை, 'டேபிள் கிளாத்' என்பர்.
டேபிள் மலை மீது சென்று பார்த்துக் களிக்க இப்போது ஏரியல் ரயில்வே வசதி இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் ஜான் வான் ரீபீக் என்னும் டச்சுக்காரர் தான் இங்கு முதன் முதலில் காலடி வைத்த வெள்ளையர். அது இன்று 'கேப் டவுன்' என்று வழங்குகிறது. அப்போது, அந்த இடம் வெறும் சதுப்பு நிலமாக இருந்தது. வெள்ளையர்களுக்குப் பணம் கொடுத்து குடியேற்ற வேண்டியிருந்தது. ஆகவே, கிழக்கிந்தியக் கம்பெனி 50 பேர்களை மட்டுமே அனுமதித்தது. அம்மலைப் பகுதிகளை ஆராயப்பல குழுக்களை அனுப்பி, ஸீல் இண்டஸ்ட்ரியை மிக லாபகரமானதாக்கினார் ரீபீக்.
