
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, ஆர்.சி.சகாயராணி நடுநிலைப் பள்ளியில், 1997ல், 2ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளியில் இலவசமாக சிலேட்டு தருவர். உடன் படித்த தோழி நாகஜோதிக்கு அது கிடைத்தது; எனக்கு கொடுக்கவில்லை. அவளது சிலேட்டை திருடி விட்டேன்.
சிலேட்டை காணாமல் பதறி, வகுப்பு ஆசிரியை நிர்மலாமேரியிடம் புகார் சொன்னாள் தோழி. அனைவரின் பைகளையும் சோதனையிட கட்டளையிட்டார் ஆசிரியை.
என் பையை தவிர்த்து, அனைத்திலும் தேடினாள்; துணையாக, என்னையும் அழைத்துக் கொண்டாள். அதுவே, எனக்கு கிடைத்த முதல் தண்டனையாக உணர்ந்தேன்.
எங்கு தேடியும் கிடைக்காததால், 'திருட்டு பொருட்கள் எப்போதும் உரிய முறையில் பயன்படாது...' என அறிவுரைத்து அவளை தேற்றினார் ஆசிரியை.
அவரது கூற்றுப்படி, அன்று மாலையே அது உடைந்துவிட்டது; ஆசிரியை கூறிய வார்த்தைகள் மட்டும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்தது.
தற்போது, என் வயது, 28; அன்று செய்த தவறை எண்ணி இன்றும் வருந்துகிறேன். அந்த ஆசிரியர் கூறிய அறிவுரையை மனதில் ஏந்தி வாழ்கிறேன்.
- எம்.மகாலட்சுமி, திண்டுக்கல்.

