
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி, சவரியப்ப உடையார் நினைவு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்தபோது, புலவர் சின்னராசு தமிழாசிரியராக இருந்தார்.
தமிழ் பாட வகுப்பில் கேள்வி கேட்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறும்; மாணவ, மாணவியரை இரண்டாகப் பிரித்து விடுவார் ஆசிரியர். மாணவர் பகுதியில் இருந்து மாணவியரையும், மாணவியர் பகுதியில் இருந்து மாணவர்களையும் கேள்வி கேட்க வேண்டும்.
பதில் கூறவில்லை என்றால், அதற்கான மதிப்பெண் கேள்வி கேட்டவரைச் சேரும். பதில் சொல்லாதவர் தலையில் குட்டு விழும்.
மற்றவர்களைப் போல், பாடங்களில் பின்னிணைப்பாக தரும் கேள்விகளை கேட்காமல், சுயமாக சிந்தித்து கேள்விகளை உருவாக்கி கேட்பேன். பதில் சொல்ல முடியாமல் திணறுவர். நானே பதில் சொல்லிவிடுவேன். தலையில் குட்டும் தண்டனையும் கொடுப்பேன். வலி பொறுக்க முடியாமல் தலையை தடவுவதை ரசிப்பேன்.
என் வயது, 67; வங்கி மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். உடன் படித்தவர்களை சந்திக்க நேர்ந்தால் தலையை தடவியபடி, 'அப்பவே நேரடியாக கேள்வி கேட்காமல், புதிதாக கேட்டு திணறடிப்பார்...' என புகழ்வர். இது, பெருமை தரும்; அந்த திறனை வளர்த்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!
- ரா.ரெங்கசாமி, தேனி.
தொடர்புக்கு: 90925 75184

