PUBLISHED ON : டிச 21, 2019

கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்த இயேசு கிறிஸ்து, மேற்காசிய பகுதியில் உள்ள பாலஸ்தீனம், பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால், 'அப்பத்தின் வீடு' என்று பொருள். இயேசு என்பதன் எபிரேய மொழி மூலச்சொல், 'யெஷ வா' என்பதாகும். இதற்கு, 'கடவுள் விடுவிக்கிறார்' என்று பொருள். கிறிஸ்து என்ற கிரேக்க சொல்லுக்கு, 'அருட்பொழிவு பெற்றவர்' என்று பொருள்.
கிறிஸ்துமஸ் முதன்முதலில், கி.பி.240ல் கொண்டாடப்பட்டதாக, அக்கால நாட்காட்டி குறிப்பிடுகிறது. கொண்டாடும் வழக்கம், கி.பி.336ல், ஐரோப்பிய நாடான இத்தாலி, ரோம் நகரில் துவங்கியது. டிசம்பர் 25ம் தேதி கொண்டாட்டம் என்பதை, அப்போதைய போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகரித்தார்.
இயேசு பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள, 'சர்ச் ஆப் நேட்டிவிட்டி' என்ற தேவாலயத்தில், இனிமையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படுகிறது. பல நாட்டு கிறிஸ்தவர்கள் கூடி, உள்ளூர் மக்களுடன் கொண்டாடுகின்றனர். அலங்கரித்த குதிரை ஊர்வலத்தில், பக்தர்கள், மதக்குருக்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்பர்.
அந்த தேவாலய பகுதியில், தெய்வக் குழந்தை சிலையும், அதன் பிறப்பை அறிவிக்கும் நட்சத்திரத்தை பார்த்ததாக கூறப்படும் இடத்தில், ஊர்வலம் முடிவடையும்.
பெத்லகேமில் கிறிஸ்தவர் வீட்டு முன்கதவில், சிலுவை வடிவம் தீட்டப்பட்டிருக்கும்; தொழுவத்தில், இயேசு பிறக்கும் காட்சியை வடிவமைத்திருப்பர்.
இயேசு பிறந்த போது காணவந்த, வானசாஸ்திரிகளில் சிலர், வசித்த நாடாக, மேற்காசியாவின் ஈரான் கருதப்படுகிறது. எனவே, ஈரானிய கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமசை ஒட்டி, நோன்பு கடைபிடிக்கின்றனர். இக்காலத்தில், அசைவ உணவு உண்பதில்லை. இதை, 'சிறுநோன்பு' என்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய, ஆறு வார காலம், பெருநோன்பு ஒன்றை கடைபிடிக்கின்றனர்.
அன்பு, அமைதியின் வடிவமாக, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
இனிய உணவு!
விழா என்றால் சிறப்பு உணவு உண்டு. மேற்கத்திய கலாசாரப்படி, கிறிஸ்துமஸ் விழாவில், 'கேக்' சிறப்பு உணவாக பரிமாறப்படுகிறது. பெரிய கேக்குகளில், தங்க நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வியப்பு ஏற்படும் வகையில் பரிசளிப்பது, ஐரோப்பிய நாடுகளில் வழக்கமாக உள்ளது. இதில், தங்க நாணயம் கிடைத்தால், பணம் பெருகும்; மோதிரம் கிடைத்தால், திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நிலவுகின்றன.
குடில் வழிபாடு!
மாட்டுத் தொழுவத்தில், இயேசு பிறந்ததை நினைவூட்டும் வகையில், குடில் அமைக்கும் வழக்கம், 1223ல், ஐரோப்பிய நாடான இத்தாலியில் துவங்கியது. அது வழிபாடாக தொடர்கிறது.
மத்திய கிழக்கில், சிரியா நாட்டைச் சேர்ந்த வானசாஸ்திரிகள், இயேசு பிறந்த இடத்தை காட்டிய, வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும், அப்புதுமையை நினைவுப்படுத்தவும், அலங்கார நட்சத்திரம் தொங்க விடுவது வழக்கமாகியுள்ளது.
வாழ்த்து அட்டை!
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் சர்ஹென்றி கோல், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை, 1843ல் முதலில் வடிவமைத்தார். பல்வேறு வடிவங்களில் வாழ்த்து அட்டைகள், இப்போது, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. அன்பின் உறவை புதுப்பிக்கும் பணியை, வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.
பரிசு தாத்தா!
ஐரோப்பாவில் ஒரு பகுதியினர் பேசும் மொழி டச்சு. இதில், நாடோடிக் கதைகள் பல உண்டு. இந்த கதைகளில் வரும் கதாபாத்திரம், செயின் நிக்கோலஸ். இந்த பாத்திரம்தான், 'சான்டாகிளாஸ்' என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவாக பரிணாமம் பெற்றது.
கிறிஸ்துமஸ் தாத்தா, குழந்தைகளை தேடி பரிசு கொடுக்கும் வழக்கம், 10ம் நுாற்றாண்டில் துவங்கியது. பெரிய தொப்பையுடன், தலையில் குல்லா அணிந்து உலாவரும், தாத்தா, 19ம் நுாற்றாண்டில் தான் தற்போதைய வடிவம் பெற்றார்.
மர வணக்கம்
ஐரோப்பாவின் ஸ்காண்டிநேவிய நாடுகளில் மரங்களை வணங்கும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், மரம் சேர்ந்தது. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கத்தை, ஜெர்மனியர், 500 ஆண்டுகளுக்கு முன் துவங்கினர்.
இங்கிலாந்து இளவரசராக இருந்த ஆல்பர்ட், அரண்மனை கொண்டாட்டத்தில், கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார். இது, 1882 முதல், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் நாளில்...
* ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆண்டு முழுவதும், ஆரோக்கியம் நிலவும் என நம்புகின்றனர்
* இரவில் ஏற்றும் மெழுகுவர்த்திகள், மறுநாள் காலையில் தானாக அணைய வேண்டும். வலிந்து அணைக்க கூடாது
* ஐரோப்பாவில் கிரேக்க நாட்டு பக்தர்கள், துரதிர்ஷ்டம் தீண்டக் கூடாது என்பதற்காக, கிறிஸ்துமஸ் காலத்தில், பழைய காலணிகளை எரித்து அழிப்பர்
* ஐரோப்பிய நாடான உக்ரேன் பக்தர்கள், வீட்டில் சிலந்தி புதிதாக வலை அமைத்திருந்தால், அதிர்ஷ்டம் என நம்புகின்றனர்
* ஐரோப்பிய நாடான ஸ்வீடனில், கிறிஸ்துமஸ் வைக்கோலில் செய்த, வெள்ளாட்டை இடம் பெற வைக்கின்றனர். அதற்கு, 'ஜுல்பக்' என்று பெயர்
* ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் போனசாக, ஒரு மாத சம்பளம் வழங்க, சட்டம் உள்ளது
யூல் காலம்!
* பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், கிறிஸ்துமஸ் சம்பந்தமாக, நான்கு புதினங்கள் எழுதியுள்ளார்
* கோடைக் காலத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடுகள், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் தென்பகுதி நாடுகள்
* கிறிஸ்துமஸ் அன்று மாலை ஏற்றும் மெழுகுவர்த்தி, 'நானே உலகின் ஒளி' என்று இயேசு கூறியதை நினைவுபடுத்துகிறது
* யூல் காலம் என்பது, கிறிஸ்துமஸ் பண்டிகையின் மற்றொரு பெயர்.
- வ.முருகன்
