PUBLISHED ON : ஆக 09, 2019

செஞ்சிபுரி நாட்டு மன்னன் விமலனுக்கு, புத்திர பாக்கியம் இல்லை; பல யாகங்கள் செய்தான்; பயனில்லை.
அந்தப்புரத்தில் இருந்த மகாராணியின் காதுகளில், 'காசியில், முனிவர்கள் வசிக்கும் ஒரு சோலை இருக்கிறது. அங்குள்ள குடிசைக்கு எதிரே, ஒரு அழகிய மா மரம் உள்ளது. அதில், மூன்று கனிகள் குலையாக தொங்கும். அவை தெய்வீக சக்தி வாய்ந்தவை. அதில் ஒன்றை உண்டால் நற்குணங்கள் அமைந்த மகன் பிறப்பான்...' என்று, அசரீரியாய் குரல் ஒலித்தது.
அப்போது, அந்தப்புரத்துக்கு வந்த மன்னன், சோகத்துடன் படுத்திருந்த மகாராணியிடம், 'அன்புடையவளே... உடல் நலமாயில்லையா... ஏன் சோர்வாக இருக்கிறாய்...' என்று கேட்டான்.
'மன்னா... ஒரு அதிசய குரல் கேட்டேன்...' என்று துவங்கி, அசரீரியாக கேட்டவற்றை கூறினாள்.
'இதோ... இப்போதே மாங்கனியைக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன்...' என்று கூறிய மன்னன், உத்தரவுகளை பிறப்பித்தான்.
பணியாளர்கள், அந்த தோட்டத்துக்கு புறப்படும் முன், மந்திர சக்தியால் மாங்கனிகளை நாசப்படுத்தி விட்டான் இந்திரன்.
வெறுங்கையுடன் திரும்பிய பணியாளர்கள், 'மன்னா... மரத்தில் ஒரு கனி கூட இல்லை. முனிவர்கள் நாசப்படுத்தி விட்டனர்...' என்று முறையிட்டனர்.
பெருஞ்சினங்கொண்ட மன்னன், 'அந்த முனிவர்களை விரட்டி அடியுங்கள்...' என்று ஆணையிட்டான். பின், மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினான்.
ஒரு மந்திரி, 'மன்னா... அதே மாதிரி அமுதக் கனிகளை தரும் மா மரம் ஒன்று, இமயமலை தங்க குகையில் இருக்கிறது. அங்கே மனிதர் செல்வது கடினம். சக்தி வாய்ந்த கிளியால் தான், அந்த கனிகளை கொண்டு வர இயலும்...' என்றார்.
தங்க கூண்டில், ஒரு கிளிக்கு பால் சோறும், கனிகளும் கொடுத்து வளர்த்தான் மன்னன். அதனிடம், 'அழகிய அறிவுள்ள கிளியே... ஒரு உதவி செய்...' என்று வேண்டினான்.
'சொல்லுங்கள் மன்னா... செய்கிறேன்...'
'இமயமலையில் தங்க குகையில் இருக்கும், மா மரத்தில் பழுத்துத் தொங்கும், கனிகளை கொண்டு வர வேண்டும்...' என்றபடி, தங்க கூண்டிலிருந்த கிளியை எடுத்து, பாலுஞ் சோறும் ஊட்டி, வானில் பறக்க விட்டான் மன்னன்.
அது, சிறகடித்து தங்க குகையை அடைந்தது. அங்கு பல கிளிகள் வசித்தன. அவற்றிடம் அற்புத மாமரம் பற்றி விசாரித்தது.
'நீ அங்கு போவது கடினம்... அப்படியே சென்றாலும், மா மரத்திலிருந்து, கனியைக் கொண்டு வருவது அதை விட சிரமமம். அந்த மரம், ஏழு இரும்பு வேலிகளுக்குள் இருக்கிறது; கொடிய அரக்கர்கள் காவல் புரிகின்றனர்; காவலை மீறி, கனிகளை பறிப்பது முடியாத காரியம்...' என்றன கிளிகள்.
'உயிர் எனக்கு பெரிதல்ல... ஒப்பிய பணியை தப்பில்லாமல் செய்ய வேண்டும்; அங்கு போகும் வழியை மட்டும் சொல்லுங்கள்...' என்றது கிளி.
வழியை அறிந்து, அங்கு பறந்த கிளி, இரும்பு வேலியில் அமர்ந்தது.
ஒரு அரக்கன், கிளியைப் பிடித்தான். அவனிடம், உண்மையை மறைக்காமல் கூறியது கிளி.
'உனக்கு என்ன தைரியம் இருந்தால் இங்கு வருவாய்; உன் இறக்கையைப் பிய்த்தெறிந்து, எரியும் நெருப்பில் போடப் போகிறேன்...' என்றான் அரக்கன்.
அதை கேட்ட கிளி அஞ்சாமல், 'அன்பரே... நீயும் ஒரு அரசனின் பணியாள்; நானும், அரச கட்டளையால் இங்கு வந்துள்ளேன். தாய், தந்தை, குரு, அரசர் சொற்படி நடப்பவர்கள், மரணடைந்தாலும் சொர்க்கம் கிட்டும்; என்னைக் கொன்றாலும் நன்மை தான்...' என்றது.
பிறர் நன்மைக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த கிளியின் செயல் அரக்கனை, இரக்கம் கொள்ள வைத்தது. தப்பி போகும்படி விரட்டினான். போக மறுத்த கிளி, 'எப்படியாவது கனியைத் தாருங்கள்...' என்று, கெஞ்சியது.
'மாங்கனியை தர இயலாது; ஒவ்வொரு கனியிலும் இலக்கம் இடப்பட்டிருக்கிறது; ஒன்று குறைந்தாலும் தெரிந்து விடும். வேண்டுமானால், இத்தகைய கனி கிடைக்கும், இன்னொரு இடத்தை தெரிவிக்கிறேன்...' என்று கூறினான் அரக்கன்.
'எனக்கு வேண்டியது மாங்கனியே... எங்கு கிடைத்தாலும் நல்லது...' என்றது கிளி.
'இந்த குகையில் ஜோதிராசர் என்ற முனிவர் வாழ்ந்து வருகிறார்; அவர் தினமும் யாகம் செய்கிறார்; குபேரனான, என் அரசன் அவருக்கு தினமும், நான்கு மாங்கனிகளை அனுப்பி வைக்கிறான்; நீ முனிவரிடம் கேட்டு, அந்த மாங்கனியை பெற முயற்சிக்கலாம்...' என்றான்.
உடனே முனிவரை சந்தித்த கிளி, 'தங்கள் கருணையை நாடி வந்துள்ளேன்; மகாராணிக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் பொருட்டு, தெய்வீக மாங்கனியை தந்து அருள வேண்டும்...' என, வேண்டியது.
'உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்...' என்றார் முனிவர்.
சற்றைக்கெல்லாம், நான்கு மாங்கனிகள் அங்கு வந்து சேர்ந்தன. இரண்டை முனிவர் உண்டு பசியாற்றினார். ஒன்றை, கிளிக்கு ஊட்டினார். மற்றதை சிறிய வலையில் போட்டு, கிளியின் கழுத்தில் தொங்க விட்டு அனுப்பினார்.
ஏழு நாட்கள் தொடர்ந்து பறந்த கிளி, மாங்கனியை மன்னனிடம் சேர்த்தது. அதை உண்ட மகாராணி, அழகிய மகனைப் பெற்றெடுத்தாள். மன்னனும், நாட்டு மக்களும் மகிழ்ந்தனர்.
குட்டீஸ்... கிளியின் மன உறுதியை பார்த்தீர்களா... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தோல்விகளால் துவண்டுவிடாமல், முயன்று முன்னேறுங்கள்.
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
