PUBLISHED ON : ஆக 09, 2019

பட்டொளி வீசி பறக்கும்
இந்திய தேசியக் கொடியை பாருங்கள். அதன் மூவர்ணமும், சக்கரமும் வசிகரமானது; போற்றுதலுடன் வணக்கத்துக்கு உரியது.
தேசிய கொடி தயாரிப்பில், நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது, காதி கிராமேதியோகா சம்யுக்த சங்கம். கர்நாடகா மாநிலம், ஹூப்ளி அருகே பெங்காரியில் உள்ளது. கிராம தொழில்களை
மேம்படுத்த, 1957ல் அரசால் துவங்கப்பட்டது. அப்போது, இதன் மூலதானம், 10 ஆயிரத்து, 500 ரூபாய்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, தேசிய கொடி, பல அளவுகளில் இங்கு தயாரிக்கப்படுகிறது.
கையால் நெசவு செய்த துணியில் தான் தேசிய கொடியை உருவாக்க வேண்டும். எனவே, பயிற்சி பெற்ற நெசவாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள், தரமான முறுக்கு நுாலில், துணியை நெய்கின்றனர். இந்த துணியில், தேடியக்கொடியை வடிவமைக்கின்றனர் பயிற்சி பெற்ற தையல்காரர்கள்.
முதலில், வண்ணச் சாயங்கள், முறைப்படி துணியில் ஏற்றப்படுகிறது. பின், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில், துணியை வெட்டி, கொடிக்கு ஏற்ப தயார் செய்கின்றனர்.
கொடியின் நடுவில் அமையும் வெள்ளை நிறத்தின் மத்தியில், 24 தாங்கு குச்சிகளுடன் நீல வண்ண சக்கரத்தை அச்சிடுகின்றனர். துல்லியமாக இருபுறமும் அச்சு அமைய வேண்டும்; சிறு தவறு ஏற்பட்டாலும், அந்த துணி நிராகரிக்கப்படும்.
இப்படி தயாராகும் மூவர்ண துணிகளை இணைத்து, உரிய அளவுகளின்படி கொடி துல்லியமாக உருவாக்கப்படும்.
இந்த கொடிகளை, அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும். சரியான தரத்துடன் அமைந்துள்ளதாக கருதினால் மட்டுமே, பயன்படுத்த அனுமதிக்கும்.
பொறுப்பு மிக்க பணியை சிறப்புடன் நிறைவேற்றிவரும், இந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு, விருது வழங்கியுள்ளது.
அரசின் பல்வேறு துறைகள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என, பல பிரிவினரும், தேசிய கொடியை, இந்த நிறுவனத்தில் தான் வாங்குகின்றனர்.
ஒரு கொடியின் அகல, நீள அளவு, 2:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, கொடியின் அகலம், இரண்டு மடங்கு, நீளம், மூன்று மடங்கு என, இருக்க வேண்டும். இதே விகிதப்படி, ஒன்பது அளவுகளில் தேசியக் கொடியை தயாரிக்கிறது இந்த நிறுவனம்.
காதி ஆடைகள், துணிப்பை, தொப்பி, படுக்கை விரிப்பு, சோப்பு, மரப்பொருட்களையும் தயாரித்து, விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.
நம் சுதந்திர தினத்தை ஒட்டி
தாயின் மணிக்கொடி பாரீர்...
அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.
மகாத்மாவின் வாழ்வில்...
தேச தந்தை மகாத்மா காந்தியின் ஆங்கில பேச்சில், ஐரீஷ் மொழி உச்சரிப்பு அதிகம் இருக்கும்;
இதற்கு காரணம், அவரது முதல் ஆங்கில ஆசிரியர் ஐரீஷ்காரர்.
* வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, கைது செய்யப்பட்ட காந்தி, மகாராஷ்டிரா மாநிலம், புனே, ஏறவாடி சிறையில் அடைக்கப்பட்டார்! அங்கு, ஒரு கைராட்டையை பயன்படுத்தினார். அது, நவம்பர், 2013ல், ஐரோப்பா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது
* உப்பு சத்யாகிரகத்தின் போது, குஜராத் மாநிலம், தண்டியில் கையளவு உப்பு எடுத்தார் காந்தி. அந்த உப்பு, 1,600 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது
* அமெரிக்கா சென்றதில்லை காந்தி; ஆனால், அங்கு நிறைய நண்பர்கள் உண்டு. பிரபல கார் நிறுவன அதிபர் ஹென்றி போர்டும் அதில் ஒருவர்; அவருக்கு, கையெழுதிட்ட கைராட்டையை, அன்பு பரிசாக அனுப்பி வைத்தார்
* காந்தியை கவுரவிக்கும் வகையில், அவர் பிறந்த அக்டோபர், 2ம் தேதியை, சர்வதேச அகிம்சை தினமாக கடைபிடிக்கிறது, ஐ.நா., சபை
* தினமும், 18 கி.மீ., நடப்பதை, 40 ஆண்டுகளாக கடைபிடித்துவந்தார் காந்தி
* ஐரோப்பா கண்டம், நெதர்லாந்தில், 29 சாலைகளுக்கு, காந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது
* கால்பந்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் இருந்த போது, டர்பன், ப்ரொடோரியா, ஜோகன்ஸ் பர்க் நகரங்களில், கால்பந்து கிளப்களை துவக்க உதவினார்
* ஐரோப்பாவில் உள்ள பிரிட்டிஷாரை எதிர்த்து தான், பேராட்டமே நடத்தினார் காந்தி; ஆனாலும், அவரது நினைவைப் போற்றும் வகையில், தபால் தலை ஒன்றை, அவர் இறந்து, 21 ஆண்டுகளுக்கு பின், வெளியிட்டு கவுரவித்தது பிரிட்டன் அரசு.
- செல்வ கணபதி
