
முல்லைக்காட்டில் வாழ்ந்து வந்தான் முகுந்தன்; மீன் பிடிக்கும் தொழில் செய்தான். அன்பாகவும், மரியாதையாகவும் மக்களிடம் பழகுவான்.
ஒரு நாள் -
ஆற்றில் வலை வீசியவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை. அடுத்த முறை, அழகிய பாட்டில் சிக்கியது. அது மிகக் கனமாக இருந்தது; வியப்புடன் திறந்தான்.
'சர்...' என வெளியேறி, விஸ்வரூபம் கொண்டு நின்றது பூதம்.
வெடவெடத்து போனான் முகுந்தன்.
தொற்றியது பயம்.
பயங்கரமாக சிரித்தது பூதம்.
அதைக் கண்டதும் மூச்சே நின்று விடும் போல் இருந்தது.
அஞ்சி நடுங்கியபடி, 'ஒன்றும் செய்து விடாதே...' என மறுகினான்.
'பயப்படாதே... உன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த மாட்டேன்...' என்றது பூதம்.
போன உயிர் திரும்பி வந்தது.
சற்று நிதானமாக, 'உன்னை பாட்டிலில் அடைத்தது யார்...' என்றான்.
'ஒரு சாமியாரின் கோபத்திற்கு உள்ளானதால், குப்பியில் அடைத்து ஆற்றில் வீசி விட்டார்; உன்னால் தான் விடுதலை கிடைத்தது; இனி, மனிதர்களை வேட்டையாடி பசியை போக்கி கொள்வேன்...' என்றது பூதம்.
முகுந்தனுக்கு பயம் அதிகரித்து, என்ன செய்யலாம் என யோசித்தான்.
'என்ன யோசிக்கிற...' என்றது பூதம்.
'ஒன்றுமில்லை... உன் விஸ்வரூபம் பிரமிப்பாக இருக்கிறது; எனக்கு ஓர் உதவி செய்வாயா...' என்றான் முகுந்தன்.
'கேள்... செய்கிறேன்...'
'என்னை நண்பனாக ஏற்று, ஒரு நாள் மட்டும், என் வீட்டில் தங்கி விருந்துண்டு செல்; நாளை முதல், ஊர் மக்களை விருப்பம் போல தின்னலாம்...'
' அப்படியே ஆகட்டும்...'
மகிழ்வுடன் தலையாட்டி சம்மதித்தது பூதம்.
'நீயோ விஸ்வரூபத்தில் இருக்கிறாய்; சிறு துரும்பை போல் உள்ளேன் நான்; உன்னுடன் எப்படி வர முடியும்...'
பொறுப்புடன் கேட்டான் முகுந்தன்.
'சரி தான்... உருவத்தை சிறிதாக்கி, உன் தோளில் தொற்றிக் கொள்கிறேன்...'
'உன்னை சுமந்து செல்லும் அளவு பலம் பொருந்தியவன் அல்ல நான்... சாதாரண மனிதன். அதை, புரிந்து கொள்...'
'அப்படியென்றால் என்னதான் வழி...'
'உன்னை சுமந்து செல்ல இயலாது; மீண்டும், இந்த பாட்டிலுக்குள் வந்து விடு... அப்போது தான் சுலபமாக துாக்கிச் செல்ல முடியும்...'
'அப்படியே ஆகட்டும்...'
பாட்டிலுக்குள் நுழைந்தது பூதம்.
பாட்டிலை இறுக மூடி, ஆற்றில் வீசியபடி, ஊரை நோக்கி நடந்தான் முகுந்தன்.
விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள், முகுந்தனை பாராட்டி மகிழ்ந்தனர்.
தளிர்களே... பெரும் துன்பம் வந்தாலும், சமயோசிதமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
- ஜி.சுந்தரராஜன்.

