
மாப்பிள்ளை சம்பா!
தமிழ்நாட்டில், மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு வகை அரிசியை உணவாக கொண்டவர்கள், அந்த காலத்தில் வீரர்களாக ஜொலித்துள்ளனர்.
அந்த ரகம் மாப்பிள்ளை சம்பா அரிசி. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். புரதம், நார்ச்சத்து, இரும்பு, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கும்.
இதை உண்டால், செரிமான உறுப்புகளின் செயல்பாடு மேம்படும். தயாமின் என்ற சத்து உள்ளுறுப்புகளில் புண்களை ஆற்றும். வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்கும். தேவையான ஆற்றலைத் தருவதோடு உடலை வலுவாக்கவும் உதவும்; நரம்புப் பிரச்னைகளையும் சீராக்கும்.
அப்பா டக்கர்!
பொருள் தெரியாமல், சில சொற்களை பயன்படுத்தும் வழக்கம் தமிழில் உள்ளது. சில சொல் அல்லது பெயர் பிரபலமாக இருக்கும். காலப்போக்கில் அதன் பொருள் தேய்ந்து, புதுமையாக பிரபலமாகி விடும்.
அப்படி உருவானதுதான், 'அப்பா டக்கர்' என்ற சொல். கேலி செய்யும் தொனியில் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு தமிழ் சினிமாவும், அதே பண்புடன் பிரபலப்படுத்தியது. இந்தச் சொல்லை, 'பண்பும், அறிவும் நிறைந்தவர்' என்ற பொருளுடன் புரிந்து கொள்ளலாம்.
இதன் வேரைத் தேடுவோம்.
குஜராத் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக சேவையாற்றியவர் அமிர்தலால் விட்டல் தாஸ் தக்கர். பெரும் சமூக சேவகர். ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காக போராட்டங்கள் நடத்தியவர்.
மகாத்மா காந்தி துவங்கிய அரிஜன சேவா சங்கத்தின் பொதுச்செயலராக சேவை செய்தார். அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலும் சேவைகள் செய்து வந்தார். எளிய மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.
சென்னை மக்கள், 'தக்கர் பாபா' என, அன்புடன் அழைத்தனர். சிலர், 'பாபா தக்கர்' என்றும் சொல்வதுண்டு. குஜராத்தி மொழியில், 'பாபா' என்றால், 'அப்பா' என பொருள்.
தக்கர் பாபா பெரும் அறிவாளி. பல்துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம், சந்தேகம் கேட்டால் உடனுக்குடன் பதில் தருவார். அதுவே, அவரது பெயரின் பொருளாகவும் மாறியது.
அவரது மறைவுக்கு பின், சிறு மாறுபாட்டுடன் அவரது பெயர் நிலைத்துள்ளது.
சென்னை வாசிகள் பேச்சு வழக்கில் அந்த பெயரை மாற்றிவிட்டனர். ஒருவரை, 'நீ பெரிய அறிவாளியா...' என்பதை, 'பெரிய அப்பா தக்கரா...' என்று கேட்கத் துவங்கினர். பின்னாளில் அது மருவி, 'அப்பா டக்கர்' என ஆகிவிட்டது.
சென்னை, தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில், தக்கர் பாபா வித்யாலயா இன்றும், மகாத்மா காந்தி புகழ் பரப்பி நிற்கிறது.
- என்றும் அன்புடன், அங்குராசு.

