
சென்னை, திருவான்மியூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், 1972ல், 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.
கணித ஆசிரியர் அய்யம்பெருமாள் மிக அருமையாக பாடம் நடத்துவார். கண்டிப்பும், கனிவும் நிறைந்தவர். நட்புடன் பழகுவார். தினமும் வீட்டுப் பாடம் தருவார். தவறாமல் செய்து வரும் சிலரில், நான் முதன்மையானவன்.
ஒரு நாள், வீட்டில் உறவினர்கள் வந்திருந்ததால், வீட்டுப் பாடம் செய்யவில்லை. மறுநாள், வகுப்பில் கேட்டார்; தயங்கியபடியே, 'செய்யவில்லை...' என்றேன். கோபத்தில் பிரம்பால் கடுமையாக விளாசி, வகுப்பறையை விட்டுப் போய் விட்டார்.
பெருத்த அவமானம் அடைந்தேன். வலியால் கண்ணீர் பெருகியது. நண்பர்கள் சமாதானப்படுத்தியும், கண்ணீர் நிற்கவில்லை.
கடைசி பாடவேளை முடியும் நேரம், அந்த ஆசிரியர் அழைப்பதாக தகவல் வந்தது. அவரை காண சென்றேன். ஓடி வந்து கட்டிக் கொண்டவர், 'எப்போதும் சரியாக செய்து வருவாயே... இன்று ஏன் தவறினாய்...' என்று தழுதழுத்து, சமாதானப்படுத்தினார். கை நிறைய சாக்லெட்டுகளை திணித்து அனுப்பினார்.
தற்போது என் வயது 60; அச்சம்பவத்தை நினைத்தவுடன் கண்கள் நீரால் நிறைந்து விடுகின்றன.
- கே.எம்.பாரூக், சென்னை.
தொடர்புக்கு: 95000 17176