
புதுச்சேரி, எம்.என்.ஜி.பி.கல்லுாரியில், 1977ல், டிப்ளமோ இன் காமர்ஸ் படித்து கொண்டிருந்தேன். தந்தை இறந்து விட்டதால், அண்ணன் தான் படிப்புக்கு உதவி செய்தார். கைச்செலவிற்கு ஒரு பைசாவும் தர மாட்டார்.
புத்தகங்கள் வாங்க காசு கேட்க பயமாக இருக்கும் என்பதால் தவிப்பேன். அப்போது, 'மெர்கன்டைல் லா' என்ற புத்தகம் விலை மிக அதிகம்; என்னால் வாங்க முடியவில்லை. மனம் வருந்தினேன். கல்லுாரி நுாலகத்தில் செய்தித் தாள்களை திருடி விற்று, பணம் சேர்த்து, அந்த புத்தகம் வாங்க முடிவு செய்தேன்.
அதன்படி, மாடியில் இருந்து, ஜன்னல் வழியாக பழைய செய்தித்தாள் கட்டை வெளியே எறிந்தேன். இதை என் விரிவுரையாளர் கவனித்து, கீழே இறங்கியதும் பிடித்து விட்டார்.
துணை முதல்வர் ஜம்புலிங்கத்திடம் அழைத்துச் சென்றார்; பயத்தில் நடுங்கியபடி சென்றேன். சீட்டு கிழிந்தது என எண்ணினேன்.
துணை முதல்வர் என் குடும்ப சூழ்நிலையைக் கேட்டறிந்தார். அவரிடமிருந்த புத்தகத்தை கொடுத்து, படிப்பை முடித்த பின், திருப்பித் தரச் சொன்னார்.
வாழ்நாளில் திருடக் கூடாதென அன்றே உறுதி ஏற்றேன். அவர் நினைத்திருந்தால் கல்லுாரியில் இருந்து வெளியேற்றி இருக்கலாம். ஆனால், திருந்த வாய்ப்பளித்தார்.
இப்போது என் வயது, 61; அன்று எடுத்த உறுதிப்படி அடுத்தவர் பொருட்களுக்கு ஆசைப்படாமல் வாழ்ந்து வருகிறேன். அந்த துணை முதல்வர் செய்த உதவியையும், புத்திமதியையும் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.
- சிவராமன் ரவி, பெங்களூரு.
தொடர்புக்கு: 97319 51333