
காஞ்சிபுரம், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
அந்த ஆண்டு பொதுத்தேர்வில், கணக்கியல் வினாத்தாள் முதல் பகுதியில் அனைத்து வினாக்களுக்கும் விடைகள், ஆறு என வருமாறும், இரண்டாம் பகுதியில் விடைகள், 66 என வருமாறும் அமைந்திருந்தன.
குழப்பமடைந்து, ஒரு கேள்விக்கு தவறாக விடை எழுதி விட்டேன். தேர்வு முடிந்தவுடன், கணித ஆசிரியர்
வி.என்.குப்புசாமியை சந்தித்து விளக்கம் கேட்டேன். சிரித்தபடியே, 'இதுபோன்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டும்...' என்று கூறியதுடன், பிழைக்காக, தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார்.
அறிவுரையை ஏற்று குழப்பமின்றி மேற்படிப்பை முடித்தேன். காஞ்சிபுரம், பச்சையப்பன் கல்லுாரியில் வணிகவியல் பேராசிரியராக சேர்ந்தேன்.
ஒருமுறை சென்னை, தன்னாட்சி கல்லுாரி ஒன்றின் செமஸ்டர் தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிக்க வேண்டியிருந்தது. அந்த ஆசிரியர் பாணியிலே தயாரித்து அளித்தேன். வித்தியாசமான செயல் என அந்த கல்லுாரி நிர்வாகம் பாராட்டியது.
தற்போது என் வயது, 62; அந்த ஆசிரியரை இன்றும் வணங்கி மகிழ்கிறேன்.
- பா.பூர்ணசந்திரன், காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 94435 21770