
பவளமல்லி என்ற ஊரில் வாழ்ந்தார் விவசாயி மல்லையன். தோட்டத்தில், மாடுகளுடன் ஒரு சேவலையும் வளர்த்தார். மயில்களும் அங்கு வந்து தங்கி ஆடிப்பாடி மகிழும்.
அன்று -
மல்லையன், வீட்டுக்கு வந்த விருந்தினரிடம், 'அடுத்த முறை வரும் போது, இந்த சேவலை உனக்கு விருந்தாக்குகிறேன்...' என்றார். அது, சேவல் காதில் விழுந்தது. அக்கணமே, மனதில் மரண பயம் தொற்றியது. தொடர்ந்து அங்கிருந்து தப்பிக்க வழி தேடும் சிந்தனையில் மூழ்கியது.
தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்த மயில்களைப் பார்த்ததும், 'கோழி இனமாக பிறந்தது குற்றமா...' என வருந்தியது சேவல். அதன் வேதனையை கண்ட மயில்களில் ஒன்று, 'நண்பா... நீ ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறாய். என்னவென்று தெரிந்தால், முடிந்த உதவியை செய்வேன்...' என்றது.
மிகுந்த தயக்கத்துடன், 'விரைவில் என்னை கொன்று விடுவர்... அது தான் மனக்கவலையாக இருக்கிறது...' என்றது சேவல்.
'இது தான் விஷயமா... கவலையை விடு... துன்பம் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்...'
'அது எப்படி சாத்தியம்...'
'நீயும் மயிலாக மாறி விடு... உன்னை கொல்ல மாட்டார்கள்; தேசிய பறவையான எங்களை கொல்வது சட்டப்படி குற்றம். நீ மரணத்தில் இருந்து தப்பி விடலாம்...'
'நான் எப்படி மயிலாக மாற முடியும்...'
சந்தேகத்துடன் கேட்டது சேவல்.
'எனக்கு தெரிந்த குரங்கு நண்பன் ஒப்பனை கலையில் வல்லவன். அவனிடம் சென்றால், உன்னை மயில் போல மாற்றி விடுவான். அதேசமயம், வேஷம் கலையாமல் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு...'
'ஆஹா... அருமையான திட்டம்... இப்போதே புறப்படலாம்...'
மயிலுடன் சென்றது சேவல். அவை திரும்பிய போது, நாலாபுறமும் சேவலை தேடிக்கொண்டிருந்தார் மல்லையன்.
அதை பார்த்ததும், 'நான் தான் மயில் வேடம் தரித்துள்ளேனே... இனி, என்னை மயிலாக எண்ணி விடுவார் விவசாயி... மரண பிடியில் இருந்து தப்பி விட்டோம்' என எண்ணியபடி வலம் வந்தது சேவல்.
மறுநாள் -
விடியற்காலை தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளுக்கு தீனி வைத்தார் மல்லையன்.
வெட்ட வெளியில் உறங்கின மயில்கள்.
கிழக்கில் வானம், சிவக்க துவங்கியது. அப்போது மயில் கூட்டத்தில் இருந்த ஒன்று, தலையை நிமிர்த்தி, 'கொக்கரக்கோ...' என உற்சாகமாக கூவியது.
அதை கூர்ந்து பார்த்தவர், 'அட... நீ இங்கே தான் இருக்குறீயா... மயில் போல், வேஷம் தரித்து என்னை ஏமாற்ற பார்க்கிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்...' என பிடித்து, கூடையில் அடைத்தார் மல்லையன்.
மறுபடியும் மரண பயம் வந்தது. அதை தவிர்த்து தப்பும் வகையில் மீண்டும் யோசனையில் மூழ்கியது சேவல்.
குழந்தைகளே... எந்த நிலை வந்தாலும் அஞ்சாமல், முன்னேற எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்!
ஜி.சுந்தரராஜன்