PUBLISHED ON : செப் 09, 2023

உலகில், மிகப்பெரிய கணுக்காலி உயிரினம் தென்னை நண்டு. இது, 10 கால் மற்றும் மூடிய ஓட்டால் ஆன உடலமைப்பு உடையது; தென்னை மரங்களில் ஏறும் திறன் பெற்றது. நுகரும் சக்தி அபாரமாக இருப்பதால், எளிதில் இரையைக் கண்டறியும். தென்னை மரங்களில் பதுங்கி வாழும். பல வண்ணங்களில் காட்சியளிக்கும். நிறப் பாகுபாடின்றி கூடி, இனவிருத்தி செய்யும்.
கடலில் முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்கு உடல்களில் ஒட்டியபடி வாழத் துவங்கும். ஓரளவு வளர்ச்சி அடைந்த பின், நிலத்தில் குழி தோண்டி, தேங்காய் நார்களை பரப்பி வசிக்கும்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில், ராமேஸ்வரம் பகுதியில் அதிகம் தென்படும். மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் குருசடைத்தீவு, முயல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட, 21 தீவுகள் உள்ளன. இவற்றில் அதிகம் காணப்படுகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளிலும், இந்திய பெருங்கடல் தீவுகளிலும் காணப்படுகிறது. கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும்.
இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், காட்டுயிர் பாதுகாப்புச் சட்டப்படி பாதுகாப்புக்கு உரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் அழியும் நிலையில் உள்ள இந்த உயிரினத்தை பாதுகாப்பது நம் கடமை!
- வி.கவுதம சித்தார்த்
